சிங்கப்பூர் பயணம்: கட்டாயம் தெரிந்திருக்க வேண்டிய 8 முக்கிய குறிப்புகள்!

சிங்கப்பூர் செல்ல இந்தியர்களுக்கு விசா அவசியம். உங்கள் விசா விண்ணப்பத்தை, அங்கீகரிக்கப்பட்ட முகவர்...
singapore
singapore agfit
Published on
Updated on
2 min read

சிங்கப்பூர், அதன் தனித்துவமான கட்டிடக்கலை, தூய்மையான சாலைகள், அற்புதமான உணவுகள் மற்றும் உலகத் தரம் வாய்ந்த பொழுதுபோக்கு இடங்களுக்காக, உலக சுற்றுலாப் பயணிகளை வெகுவாகக் கவர்ந்து வருகிறது. குறிப்பாக, இந்தியர்களுக்கு சிங்கப்பூர் ஒரு பிரபலமான பயண இடமாக இருந்து வருகிறது. சிங்கப்பூர் பயணத்தை மறக்க முடியாத அனுபவமாக மாற்ற, நீங்கள் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டிய சில முக்கிய குறிப்புகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

1. விசா மற்றும் ஆவணங்கள்:

சிங்கப்பூர் செல்ல இந்தியர்களுக்கு விசா அவசியம். உங்கள் விசா விண்ணப்பத்தை, அங்கீகரிக்கப்பட்ட முகவர் மூலம் முன்கூட்டியே சமர்ப்பிக்க வேண்டும். விசா அங்கீகரிக்கப்பட்டதும், அதன் நகலை எடுத்துக்கொள்ளவும். பயணத்தின்போது, உங்கள் பாஸ்போர்ட் குறைந்தது ஆறு மாதங்களுக்குச் செல்லுபடியாகக்கூடியதாக இருக்க வேண்டும். அத்துடன், நீங்கள் தங்குவதற்கான ஹோட்டல் முன்பதிவு மற்றும் விமான டிக்கெட்டுகளின் நகல்களையும் உடன் வைத்திருப்பது நல்லது.

2. உள்ளூர் போக்குவரத்து:

சிங்கப்பூரில் போக்குவரத்து அமைப்பு மிகவும் எளிமையானது, சுத்தமானது மற்றும் மிகவும் திறமையானது. பொதுப் போக்குவரத்தை (எம்.ஆர்.டி. ரயில் மற்றும் பேருந்துகள்) பயன்படுத்திக்கொள்வது, உங்கள் பணத்தையும் நேரத்தையும் மிச்சப்படுத்தும்.

Ez-Link Card: இந்த கார்டை வாங்கிக்கொள்வது, ஒவ்வொரு முறையும் டிக்கெட் வாங்கும் சிரமத்தைத் தவிர்க்க உதவும். மெட்ரோ ரயில் நிலையங்கள் மற்றும் கடைகளில் இந்த கார்டை ரீசார்ஜ் செய்யலாம்.

பயணத் திட்டமிடல்: கூகுள் மேப்ஸ் போன்ற செயலிகள் மூலம் எளிதாகப் பயணங்களைத் திட்டமிடலாம்.

3. பணம் மற்றும் பரிவர்த்தனை:

சிங்கப்பூர் டாலர் (SGD) என்பது அந்நாட்டின் நாணயமாகும். விமான நிலையத்தில் பணம் மாற்றுவதை விட, நகரத்தின் மையத்தில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட மாற்றகங்களில் (money changers) மாற்றுவது அதிக லாபகரமானது. கிரெடிட் கார்டுகள் மற்றும் டெபிட் கார்டுகள் பரவலாக ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. ஆனால், சிறிய கடைகளிலும், உணவகங்களிலும் பணத்தை (cash) பயன்படுத்த வேண்டி வரலாம்.

4. உணவு

சிங்கப்பூர், உலகின் பல்வேறு சுவையான உணவு வகைகளின் தாயகமாகும். இங்குள்ள 'ஹாக்கர் சென்டர்ஸ்' (Hawker Centres) எனப்படும் திறந்தவெளி உணவுக்கூடங்களில், குறைந்த விலையில், அற்புதமான உள்ளூர் உணவுகளை சுவைக்கலாம். சிக்கன் ரைஸ், லக்ஸா, நாசி லெமாக் போன்ற உணவுகளை கட்டாயம் முயற்சி செய்யுங்கள். இரவு உணவுக்காக சைனா டவுன், லிட்டில் இந்தியா மற்றும் கம்போங் கிளாம் போன்ற இடங்களுக்குச் செல்லலாம்.

5. தங்குமிடம் & திட்டமிடல்:

உங்கள் பயணத்தைத் தொடங்கும் முன், தங்குமிடத்தை முன்கூட்டியே முன்பதிவு செய்வது மிகவும் அவசியம். மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு அருகில் உள்ள பகுதிகளைத் தேர்ந்தெடுப்பது, நகரத்தை எளிதாகச் சுற்றிப் பார்க்க உதவும். பட்ஜெட்டுக்கு ஏற்ற ஹோட்டல்கள் முதல் ஆடம்பர ஹோட்டல்கள் வரை பலவிதமான விருப்பங்கள் உள்ளன.

6. சிங்கப்பூரின் சட்டங்கள்:

சிங்கப்பூர் உலகின் மிகவும் தூய்மையான மற்றும் பாதுகாப்பான நகரங்களில் ஒன்றாகும். இதற்கு இங்குள்ள கடுமையான சட்டங்களும் ஒரு காரணம்.

குப்பைகள் மற்றும் chewing gum: இங்கு பொது இடங்களில் குப்பைகளை வீசுவது, வெற்றிலையை துப்புவது, அல்லது மெல்லும் கோந்தை (chewing gum) விற்பது போன்றவை தடைசெய்யப்பட்டுள்ளன.சட்டத்தை மீறினால் கடுமையான அபராதம் விதிக்கப்படும்.

சாலை விதிகள்: சாலையைக் கடக்கும்போது, பாதசாரிகளுக்கான பாதையை மட்டுமே பயன்படுத்த வேண்டும். மற்ற இடங்களில் சாலையைக் கடந்தால் (jaywalking), அபராதம் செலுத்த நேரிடும்.

7. பார்வையிட வேண்டிய இடங்கள்:

மரீனா பே சாண்ட்ஸ் (Marina Bay Sands): இதன் மேல் தளத்தில் உள்ள நீச்சல் குளம் மற்றும் தோட்டம் மிகவும் பிரபலமானது.

கார்டன்ஸ் பை தி பே (Gardens by the Bay): இங்குள்ள 'சூப்பர்ட்ரீஸ்' (Supertree Grove) மற்றும் 'கிளவுட் ஃபாரஸ்ட்' (Cloud Forest) ஆகியவை பார்ப்பவர்களைக் கவரும்.

செந்தோசா தீவு (Sentosa Island): இங்கு உலகப் புகழ்பெற்ற யுனிவர்சல் ஸ்டுடியோஸ் (Universal Studios), SEA அக்வாரியம், மற்றும் அழகான கடற்கரைகள் உள்ளன.

சிங்கப்பூர் மிருகக்காட்சிசாலை மற்றும் நைட் சஃபாரி (Night Safari): இரவு நேரத்தில் விலங்குகளைக் காணும் இந்த சஃபாரி ஒரு தனித்துவமான அனுபவத்தைத் தரும்.

8. சிம் கார்டு அல்லது இணையம்:

பயணத்தின் போது எளிதாகத் தொடர்பில் இருக்க, விமான நிலையத்திலேயே ஒரு உள்ளூர் சிம் கார்டு அல்லது இ-சிம்மை வாங்கிக்கொள்ளலாம்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com