

இன்றைய காலகட்டத்தில் இளம் வயதிலேயே மாரடைப்பு ஏற்படும் சம்பவங்கள் அதிக கவனத்தைப் பெற்று வருகின்றன. முன்பெல்லாம் வயதானவர்களுக்கு மட்டுமே மாரடைப்பு வரும் என்ற எண்ணம் பலரிடம் இருந்தது. ஆனால், தற்போது 30 மற்றும் 40 வயதுகளில் இருப்பவர்களுக்கும் இதய பாதிப்புகள் ஏற்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. குறிப்பாக, உடற்பயிற்சி செய்து உடலைக் கட்டுக்கோப்பாக வைத்திருப்பவர்களுக்கும் மாரடைப்பு ஏற்படுவது பலரையும் சிந்திக்க வைத்துள்ளது. இதற்கு உதாரணமாக பெங்களூருவில் சமீபத்தில் நடந்த ஒரு சம்பவம் அமைந்துள்ளது.
பெங்களூருவைச் சேர்ந்த 30 வயதான ஸ்டார்ட்அப் நிறுவன உரிமையாளர் ஒருவர் மாரடைப்பால் பாதிக்கப்பட்டுள்ளார். இவர் சிறு வயது முதலே விளையாட்டுகளில் ஆர்வம் கொண்டவர். பள்ளி, கல்லூரி காலங்களில் ஓட்டப்பந்தயங்களில் பங்கேற்று வெற்றிகளையும் பெற்றுள்ளார். தொடர்ந்து உடற்பயிற்சி செய்து வந்ததுடன், ஜிம்முக்குச் சென்று அதிக எடைகளைத் தூக்கும் பயிற்சிகளையும் மேற்கொண்டு வந்துள்ளார். உணவுப் பழக்கத்திலும் அதிக கவனம் செலுத்தியுள்ளார். சர்க்கரை உணவுகள் மற்றும் துரித உணவுகளைத் தவிர்த்து ஆரோக்கியமான உணவுகளை மட்டுமே சாப்பிட்டு வந்துள்ளார். இவ்வளவு கட்டுப்பாடான வாழ்க்கை முறையைப் பின்பற்றியிருந்தும் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.
சம்பவத்தைப் பகிர்ந்துள்ள இதயநோய் நிபுணர் டாக்டர் ரஞ்சன் ஷெட்டி, உடலைக் கட்டுக்கோப்பாக வைத்திருப்பது மட்டுமே இதய நோய்களை முழுமையாகத் தடுத்துவிடாது என்று விளக்கியுள்ளார். சிலருக்கு இதயத்திற்குச் செல்லும் ரத்தக் குழாய்களில் கொழுப்புப் படிவுகள் எந்த அறிகுறியும் இல்லாமல் உருவாகலாம். இதனை 'பிளாக்' என்று அழைக்கின்றனர். இந்தப் படிவுகள் சில நேரங்களில் மென்மையாகவும் நிலையற்ற தன்மையுடனும் இருக்கும். அவை திடீரென உடையும்போது ரத்தம் உறைந்து ரத்த ஓட்டத்தைத் தடுக்கலாம். இதன் காரணமாக மாரடைப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.
இந்தியர்களுக்கு இளம் வயதிலேயே இதய ரத்தக் குழாய் நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக மருத்துவ விளக்கங்கள் தெரிவிக்கின்றன. இதற்கு மரபணு காரணங்கள், அதிக கொழுப்பு, சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், வயிற்றுப் பகுதியில் அதிக கொழுப்பு சேர்வது போன்றவை காரணமாக இருக்கலாம். குடும்பத்தில் பெற்றோர் அல்லது நெருங்கிய உறவினர்களுக்கு இளம் வயதிலேயே மாரடைப்பு ஏற்பட்டிருந்தால் கூடுதல் கவனம் தேவை.
இதில் பலரும் அறிந்திராத ஒரு முக்கியமான காரணம் 'லிப்போபுரோட்டீன் (a)' எனப்படும் Lp(a). இது மரபணு தொடர்பான ஒரு வகை கொழுப்புத் துகள். இதன் அளவு அதிகமாக இருந்தால் இதய நோய் ஏற்படும் அபாயம் அதிகரிக்கலாம். ஆரோக்கியமான உணவு மற்றும் உடற்பயிற்சி செய்தாலும் மரபணு காரணமாக இதன் அளவு அதிகமாக இருக்கலாம். எனவே, குடும்பத்தில் இதய நோய் பாதிப்பு இருந்தால் மருத்துவரின் ஆலோசனையுடன் தேவையான ரத்தப் பரிசோதனைகளைச் செய்துகொள்வது நல்லது.
தினமும் ஜிம்முக்குச் செல்வது நல்ல பழக்கமாக இருந்தாலும், உடலின் திறனைத் தாண்டி அதிக எடைகளைத் தூக்குவது சிலருக்கு ஆபத்தை ஏற்படுத்தலாம். குறிப்பாக, ஏற்கெனவே இதய ரத்தக் குழாய்களில் பாதிப்பு இருப்பவர்களுக்கு மிகத் தீவிரமான உடற்பயிற்சி மற்றும் உடலில் நீர்ச்சத்து குறைவது தற்காலிகமாக இதய பாதிப்பு ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கலாம். இதனால் உடற்பயிற்சியை நிறுத்த வேண்டும் என்று அர்த்தமில்லை. உடல்நிலைக்கு ஏற்ற பயிற்சிகளைச் சரியான முறையில் மேற்கொள்வதே முக்கியம்.
சாதாரண ECG, எக்கோ மற்றும் டிரெட்மில் பரிசோதனைகளில் முடிவுகள் இயல்பாக இருப்பதால் இதயத்தில் எந்தப் பிரச்சினையும் இல்லை என்று உறுதியாகக் கூற முடியாது. ஒவ்வொரு பரிசோதனையும் வெவ்வேறு விஷயங்களை மதிப்பிடுகின்றன. சில நேரங்களில் இதய ரத்தக் குழாய்களில் இருக்கும் மென்மையான கொழுப்புப் படிவுகளை வழக்கமான பரிசோதனைகளால் கண்டறிய முடியாமல் போகலாம். அதற்காக அனைவரும் விலை உயர்ந்த ஸ்கேன் பரிசோதனைகளைச் செய்ய வேண்டிய அவசியமில்லை. வயது, குடும்பப் பின்னணி, அறிகுறிகள் மற்றும் தனிப்பட்ட ஆபத்துகளைப் பொறுத்து மருத்துவர் தேவையான பரிசோதனைகளைப் பரிந்துரைப்பார்.
இளைஞர்கள் மார்பில் அழுத்தம் அல்லது வலி, மூச்சுத்திணறல், அதிக வியர்வை, மயக்கம், கைகள் அல்லது தாடைப் பகுதியில் வலி போன்ற அறிகுறிகளை அலட்சியம் செய்யக்கூடாது. இவை ஏற்பட்டால் உடனடியாக அவசர மருத்துவ உதவியை நாட வேண்டும். மேலும், ரத்த அழுத்தம், ரத்தச் சர்க்கரை மற்றும் கொழுப்பின் அளவை அவ்வப்போது பரிசோதித்துக் கொள்வதும் அவசியம்.
உடற்பயிற்சி, சத்தான உணவு, போதுமான தூக்கம் ஆகியவை இதய ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியமானவை. ஆனால், இவை மட்டுமே அனைத்து இதய நோய் அபாயங்களையும் நீக்கிவிடாது. குறிப்பாக, இளம் வயதினர் தங்களுக்கு எந்தப் பாதிப்பும் வராது என்ற நம்பிக்கையில் அறிகுறிகளைப் புறக்கணிக்கக் கூடாது. உடலை ஆரோக்கியமாக வைத்திருப்பதுடன், இதயத்தின் உள்ளார்ந்த ஆரோக்கியத்தையும் கவனிப்பதே மாரடைப்பு அபாயத்தைக் குறைப்பதற்கான முக்கியமான வழியாகும்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.