Marriage Certificate இல்லாமல்.. பாஸ்போர்ட்டில் உங்கள் மனைவியின் பெயரை சேர்ப்பது எப்படி?

Annexure J படிவத்தைப் பதிவிறக்கம் செய்து, அதில் தம்பதிகள் இருவரும் சேர்ந்து இருக்கும் ஒரு புகைப்படத்தை ஒட்டி...
Annexure J
Annexure J
Published on
Updated on
1 min read

பாஸ்போர்ட்டில் உங்கள் மனைவியின் பெயரைச் சேர்க்க திருமணச் சான்றிதழ் (Marriage Certificate) கட்டாயம் என்று பலரும் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், சான்றிதழ் இல்லாத சூழலில் கூட, மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் விதிமுறைப்படி பாஸ்போர்ட்டில் மனைவியின் பெயரைச் சேர்த்துக்கொள்ள முடியும். இதற்கு 'Annexure J' என்று அழைக்கப்படும் கூட்டு உறுதிமொழிப் படிவத்தைப் (Joint Declaration) பயன்படுத்தினால் போதுமானது. கணவன் மற்றும் மனைவி இருவரும் இணைந்து கையொப்பமிடும் இந்த ஆவணம், சட்டப்பூர்வமாக உங்களது திருமண உறவை உறுதிப்படுத்துவதாகக் கருதப்படுகிறது.

முதலில் நீங்கள் பாஸ்போர்ட் சேவா இணையதளத்தில் உள்நுழைந்து, 'Re-issue of Passport' என்பதைத் தேர்வு செய்து விண்ணப்பத்தை நிரப்ப வேண்டும். அதில் மாற்றத்திற்கான காரணத்தில் 'Spouse Name' என்பதைத் தேர்வு செய்து, அதற்கான கட்டணத்தைச் செலுத்தி அப்பாயிண்ட்மெண்ட் முன்பதிவு செய்துகொள்ளுங்கள். அதன் பிறகு, பாஸ்போர்ட் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள Annexure J படிவத்தைப் பதிவிறக்கம் செய்து, அதில் தம்பதிகள் இருவரும் சேர்ந்து இருக்கும் ஒரு புகைப்படத்தை ஒட்டி, அந்தப் புகைப்படம் மற்றும் படிவத்தின் மீது இருவரும் கையொப்பமிட்டு உறுதி அளிக்க வேண்டும்.

இப்போது உங்கள் அசல் பாஸ்போர்ட், ஆதார் கார்டு போன்ற அடையாளச் சான்றுகள் மற்றும் பூர்த்தி செய்த Annexure J படிவத்துடன் முன்பதிவு செய்த நாளில் பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு நேரில் செல்லுங்கள். அங்குள்ள அதிகாரிகள் உங்கள் ஆவணங்களைச் சரிபார்த்து பயோமெட்ரிக் பெற்றுக்கொள்வார்கள். இந்த நடைமுறை முடிந்தவுடன், உங்கள் முகவரியைச் சரிபார்க்கக் காவல் துறை விசாரணை (Police Verification) நடைபெறும். விசாரணை வெற்றிகரமாக முடிந்த பிறகு, மனைவியின் பெயர் சேர்க்கப்பட்ட புதிய பாஸ்போர்ட் உங்கள் வீட்டிற்கே தபால் மூலம் வந்து சேரும்.

திருமணச் சான்றிதழ் இல்லாத தம்பதிகளுக்கு இது மிகவும் பயனுள்ள ஒரு வசதியாகும். அதே சமயம், இதில் அளிக்கப்படும் தகவல்கள் அனைத்தும் உண்மையாக இருப்பது அவசியம். விவாகரத்து பெற்றவர்கள் அல்லது சட்டப்பூர்வமாகப் பிரிந்தவர்கள் இந்த முறையில் பெயரைச் சேர்க்க முடியாது. திருமணச் சான்றிதழ் இல்லாதவர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதமாக இருந்தாலும், ஒருவேளை உங்களிடம் திருமணச் சான்றிதழ் இருந்தால், அதைச் சமர்ப்பிப்பதே இன்னும் விரைவான நடைமுறையாக இருக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com