கோவையில் அந்த மாணவியை இழுத்துச்சென்று நாசம் செய்தார்களே.. போதையை காரணம் சொல்லி என்னவேணா பண்ணலாமா? பின்னணியில் இயங்கும் உளவியல்?

ஒருவரை அடக்கி, கட்டுப்படுத்தி, அவர்கள் துன்பத்தை பார்த்து ரசிப்பது. இது மிக மோசமான ‘psycho’ நிலை....
why men rape
why men rape
Published on
Updated on
2 min read

உலகம் முழுக்க பெண்களுக்கு எதிரான பாலியல் ரீதியான அத்துமீறல்கள் மிக மிக மோசமான அளவில் அதிகரித்து வருகிறது. இந்தியாவின் எந்த பகுதியையும் குறிப்பிட்டு இந்த இடம் பெண்களுக்கு மிகவும் பாதுகாப்பான இடம் என்று சொல்ல முடியாதது இந்த  தேசத்தின் மிகப்பெரும் அவலம். அதை சமூகம் இம்மியளவு கூட உணர்ந்ததாக தெரியவில்லை. அதன் நீட்சிதான் தினம்தோறும் பெண்களுக்கு எதிராக நிகழ்த்தப்படும் வன்கொடுமைகள். குடும்பம் , வேலை பார்க்கும் இடம், பள்ளி, கல்லூரி, ஏன் சமயங்களில் கோவில்களுக்குள்ளும் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக்கப்பட்டு வருகிறது. 

இது தொடர்பாக எத்தனையோ போராட்டங்களும் சட்டங்களும் வகுக்கப்பட்டாலும், பெண்கள் இன்னும் மோசமான வகையில் பாலியல் வல்லுறவுக்கு ஆட்பட்டுதான் இருக்கின்றனர்.

மேலும் பெண்களுக்கு எதிரான உடல் சார்ந்த வன்முறைகள் நிகழும்போது இந்த சமூகம் குற்றவாளிகளை தூற்றாமல் பாதிக்கப்பட்ட பெண்களை ‘Victime Shame’ செய்யும் உளவியலுக்கு மிக எளிதில் சென்றுவிடுகிறது. மேலும் பாதிப்பு ஏற்படுத்தும் நபர் சமயங்களில் சட்டத்திலிருந்து கூட தப்பிக்கக்கூடிய சூழலை இந்த சமூகமே அவர்களுக்கு ஏற்படுத்தி தருகிறது. இந்த ‘social condition’ எப்போதுமே பெண்களுக்கு எதிராகத்தான் அமைகிறது. 

2012 -ஆம் ஆண்டு தலைநகர் டெல்லியில் நடந்த ‘நிர்பயா’ பாலியல் வன்கொடுமைக்கு நிகரான மற்றொரு சம்பவம் தான் 2 நாட்களுக்கு முன்பு கோயமுத்தூரிலும் நடந்துள்ளது. இதுபோன்ற சம்பவங்களால் நாட்டின் மனசாட்சி பலமுறை உலுங்குகிறதே தவிர அதில் சிறிதளவு கூட சலனம் ஏற்படவேயில்லை என்பதுதானே வேதனை.

ஒரு 19 வயது கல்லூரி மாணவி 3 -பேரால் மிக மோசமான அளவில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுகிறார். அவர்களை தனிப்படை போலீசார் 24 - மணிநேரத்திற்குள் சுட்டிபிடித்துள்ளனர். போலீஸ் தரப்பில் அவர்கள் தொடர் குற்றங்களில் ஈடுபடக்கூடிய ‘Habitual Offenders” என்பது தெரிய வருகிறது. மேலும், சம்பவம் நடந்த இடத்திற்கு வரும்போதே, ஒரு இருசக்கர வாகனத்தை திருடிக்கொண்டு, கூறிய ஆயுதங்களோடும் நல்ல போதையிலும் தான் அவ்விடத்திற்கு வந்திருக்கின்றனர். 

அங்கே அந்த மாணவியும் அவரது நண்பரையும் பார்த்த பின்னர் அவர்களை காரைவிட்டு இறங்கும்படி வற்புறுத்தியுள்ளனர். மேலும் கல்லால் காரின் கண்ணாடியை உடைத்து, அரிவாளால் உடனிருந்த நண்பரை தாக்கி, பெண்ணை நடத்தியே ஒரு இருட்டான இடத்திற்கு கூட்டிச்சென்று, அங்கே அந்த பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். மேலும் கைதானவர்களிடம் இருந்து பாதிக்கப்பட்ட பெண்ணின் மோதிரம் மற்றும் செல்போன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

பின்னணி உளவியல் என்ன! 

பாலியல் அத்துமீறல்களில் இது பெரியது சிறியது என்றெல்லாம் ஒன்றும் இல்லை. ஒரு பெண்ணின் விருப்பத்திற்கு முரணாக அவரிடம் நடந்துகொண்டாலே அது தவறான ஒன்று தான். நமது அன்றாட வாழ்க்கையில்கூட நிறைய உதாரணங்களை பார்த்திருப்போம். நண்பர்கள் கூடும் இடங்களில் மது அருந்திவிட்டு பெண்ணிடம் அத்துமீற வேண்டியது கேட்டால் போதையில் செய்துவிட்டேன் என்று சொல்ல வேண்டியது. போதைக்கும் இதற்கும் சம்பந்தமே இல்லை என்று சொல்ல முடியாது. நாம் என்ன செய்கிறோம் என்றுகூட தெரியாத மனப்பிழற்சியை போதை தரக்கூடும். ஆனால், கோவில்களில், கல்லூரிகளில்,பள்ளிகளில் நடக்கும் பாலியல் வன்கொடுமை சம்பவங்களை எதைச்சொல்லி நியாயப்படுத்த முடியும்.

உண்மையில் சொல்லப்போனால் ‘பாலியல் பலாத்காரம்’ செய்ய நினைக்கும் மனிதன் அடிப்படையிலேயே வக்கிர புத்தி கொண்டவனாக இருக்கிறான். மேலும், சில ஆண்களிடம் உள்ள உளவியல் பிரச்சனைகளான, ‘expressing control, anger, or sadism’ பெண்களுக்கு எதிரான ஒன்றாக மாறுகிறது. இதற்கு Control Theory என்று பெயர் வைத்துள்ளனர் அறிவியலாளர்கள்.  ஒருவரை அடக்கி, கட்டுப்படுத்தி, அவர்கள் துன்பத்தை பார்த்து ரசிப்பது. இது மிக மோசமான ‘psycho’ நிலையாகும். இது காலம்தோறும் இருந்திருக்கிறது.

ஆனால், இது அதிகரிக்கிறது, தொடர்ந்து நிகழ்கிறது என்றால் அந்த சமூகம் மிக மோசமான பாதையில் சென்றுகொண்டிருக்கிறது என்றே புரிந்துகொள்ள வேண்டும். மேலும் இன்றைய சூழலில் பாலியல் கொடுங்குற்றத்தில் ஈடுபட்டால் நிச்சயம் பிடிபடுவோம் என்று தெரிந்தும்கூட இதில் ஈடுபடுகிறார்கள் அப்படியானால் அரசின் முக்கிய அம்சமான ‘சட்டம் -ஒழுங்கின்’ மீதும் நம்பிக்கை இழக்கச்செய்கிறது.

ஆண் என்ற அகம்பவத்தாலும், பெண் தன்னை விட குறைவானவள், அவள் மீது எத்தகு வன்முறையை வேண்டுமானாலும் நிகழ்த்தலாம் என்ற மன நிலை தனி நபர்களுடையது மட்டுமல்ல ‘ஒட்டுமொத்த சமூகத்தினுடையதும்’ என்று இந்த பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அம்பலப்படுத்தியுள்ளன. பொதுச்சமூகம் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ‘Victime Shame’ மனநிலையிலிருந்து அணுகுவதை முதலில் நிறுத்த வேண்டும். ஒரு ஆண் எங்குவேண்டுமானாலும் குடித்துவிட்டு அரைநிர்வாணமாக கிடப்பதை ஏற்றுக்கொள்ளும் சமூகம் ஒரு பெண் தனிமையில் தன் நண்பர்களை சந்திப்பதை ஏன் ஏற்க மறுக்கிறது என்ற கேள்வியும் எழாமல் இல்லை. அனைத்து உயிர்களும் இங்கு சமம், என்ற மனநிலை உருவானால் மட்டுமே சமூகத்தில் வன்முறைகள் குறையும்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com