கார் வாங்கப் போகிறீர்களா? 2027 முதல் மாறப்போகும் புதிய விதிகள் என்ன?

சராசரி எடை அதிகமாக இருந்தால் அனுமதிக்கப்படும் எரிபொருள் பயன்பாட்டு அளவும் அதற்கேற்ப மாறும்...
CAFE III Rules India 2027
CAFE III Rules India 2027
Published on: 
Updated on: 
3 min read

இந்தியாவில் கார்கள் தொடர்பான புதிய எரிபொருள் திறன் விதிகள் 2027 ஏப்ரல் முதல் அமலுக்கு வர உள்ளன. CAFE-III என்று அழைக்கப்படும் இந்த புதிய விதிகள், கார் நிறுவனங்கள் தயாரிக்கும் வாகனங்களின் சராசரி எரிபொருள் பயன்பாடு மற்றும் கார்பன் டை ஆக்சைடு வெளியேற்றத்தை கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டுள்ளன. 2027 ஏப்ரல் 1 முதல் 2032 மார்ச் 31 வரை இந்த விதிகள் நடைமுறையில் இருக்கும்.

CAFE என்பதன் விரிவாக்கம் Corporate Average Fuel Economy. எளிமையாகச் சொன்னால், ஒரு கார் நிறுவனத்தின் ஒவ்வொரு காரையும் தனித்தனியாக பார்த்து விதி விதிக்கப்படாது. அந்த நிறுவனம் ஒரு ஆண்டில் விற்பனை செய்யும் தகுதியுள்ள அனைத்து பயணிகள் கார்களையும் சேர்த்து, அவற்றின் சராசரி எரிபொருள் பயன்பாடு எவ்வளவு என்பதை கணக்கிட்டு இலக்கு நிர்ணயிக்கப்படும். இதனால் அதிக மைலேஜ் தரும் கார்கள், மின்சார கார்கள், ஹைபிரிட் கார்கள் போன்றவை நிறுவனத்தின் மொத்த சராசரியை மேம்படுத்த உதவும்.

புதிய விதிகளின் கீழ் கார் நிறுவனங்கள் ஒவ்வொரு ஆண்டும் தங்களது வாகனங்களின் எரிபொருள் திறனை படிப்படியாக மேம்படுத்த வேண்டும். 2027-28 நிதியாண்டில் நிர்ணயிக்கப்பட்ட அடிப்படை அளவு 100 கிலோமீட்டருக்கு 3.996 லிட்டர் என்ற அளவில் உள்ளது. 2031-32ஆம் ஆண்டில் இது 3.3273 லிட்டராக குறைக்கப்படுகிறது. ஐந்து ஆண்டுகளில் சுமார் 16.7 சதவீதம் அளவுக்கு எரிபொருள் திறன் மேம்படுத்தப்பட வேண்டும் என்பதே இதன் நோக்கம்.

இந்த விதிகளில் காரின் எடை முக்கிய பங்கு வகிக்கிறது. பொதுவாக பெரிய SUV போன்ற கனமான வாகனங்களுக்கு எரிபொருள் பயன்பாடு அதிகமாக இருக்கும். அதேநேரத்தில் சிறிய கார்களுக்கு எரிபொருள் பயன்பாடு குறைவாக இருக்கும். இதை கணக்கில் எடுத்துக்கொண்டு, ஒரு நிறுவனத்தின் மொத்த விற்பனையில் உள்ள கார்களின் சராசரி எடையை அடிப்படையாக வைத்து அதன் எரிபொருள் திறன் இலக்கு நிர்ணயிக்கப்படுகிறது. சராசரி எடை அதிகமாக இருந்தால் அனுமதிக்கப்படும் எரிபொருள் பயன்பாட்டு அளவும் அதற்கேற்ப மாறும்.

சிறிய கார்களைப் பொறுத்தவரை இந்த முறை குறித்து கார் நிறுவனங்களிடையே நீண்ட காலமாக விவாதம் இருந்து வந்தது. குறிப்பிட்ட எடைக்கு குறைவான பெட்ரோல் கார்களுக்கு கூடுதல் சலுகை வழங்கும் யோசனை முன்பு முன்வைக்கப்பட்டது. 909 கிலோவுக்கு குறைவான சில பெட்ரோல் கார்களுக்கு ஒரு கிலோமீட்டருக்கு 3 கிராம் அளவிலான கூடுதல் சலுகை வழங்கும் திட்டமும் முந்தைய வரைவில் இருந்தது. ஆனால் இறுதியாக அறிவிக்கப்பட்ட CAFE-III விதிகளில் சிறிய கார்களுக்கு தனியாக இந்த சலுகை வழங்கப்படவில்லை.

அதேநேரத்தில், மின்சார கார்களுக்கு புதிய விதிகளில் குறிப்பிடத்தக்க முன்னிலை கிடைக்கிறது. Battery Electric Vehicle எனப்படும் முழுமையான மின்சார கார்களுக்கு கணக்கீட்டில் 3 மடங்கு விற்பனை அளவு என்ற சிறப்பு பலன் வழங்கப்படுகிறது. அதாவது, ஒரு நிறுவனம் விற்கும் ஒரு மின்சார வாகனம், CAFE கணக்கீட்டில் அதன் உண்மையான விற்பனை அளவைவிட அதிக தாக்கத்தை ஏற்படுத்தும். இதன் மூலம் மின்சார கார்களை அதிகமாக விற்பனை செய்யும் நிறுவனங்கள் தங்களது மொத்த சராசரி செயல்திறனை மேம்படுத்திக் கொள்ள முடியும்.

ஹைபிரிட் கார்களுக்கும் சில சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. பெட்ரோல் அல்லது டீசல் இன்ஜினுடன் மின்சார மோட்டாரையும் பயன்படுத்தும் ஹைபிரிட் வாகனங்கள், சாதாரண பெட்ரோல் கார்களைவிட குறைவான எரிபொருளைப் பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. Plug-in Hybrid, Strong Hybrid போன்ற தொழில்நுட்பங்களுக்கும் விதிகளில் தனித்தனி கணக்கீட்டு பலன்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன் மூலம் ஒரே தொழில்நுட்பத்தை மட்டும் சாராமல் பல்வேறு வழிகளில் எரிபொருள் பயன்பாட்டைக் குறைக்க கார் நிறுவனங்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

எத்தனால் கலந்த பெட்ரோல், Biofuel மற்றும் CBG போன்ற குறைந்த கார்பன் எரிபொருட்களுக்கும் புதிய விதிகள் முக்கியத்துவம் அளிக்கின்றன. குறிப்பாக E20 அல்லது அதற்கு மேல் எத்தனால் கலந்த பெட்ரோலுக்கும், அதிக அளவு எத்தனால் பயன்படுத்தக்கூடிய Flex-Fuel வாகனங்களுக்கும் தனிப்பட்ட Carbon Neutrality Factor வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மாற்று எரிபொருட்களை பயன்படுத்தும் வாகனங்களை உருவாக்க கார் நிறுவனங்களை ஊக்குவிக்கும் முயற்சியாக இந்த விதிகள் பார்க்கப்படுகின்றன.

புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தும் கார் நிறுவனங்களுக்கும் கூடுதல் பலன் கிடைக்கும். Start-stop system, டயர் காற்றழுத்த கண்காணிப்பு, regenerative braking, அதிக கியர்கள் கொண்ட transmission, LED விளக்குகள், திறமையான air-conditioning system உள்ளிட்ட சில தொழில்நுட்பங்கள் வாகனத்தின் எரிபொருள் திறனை மேம்படுத்துவதாக கருதப்படுகின்றன. தகுதியான தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதன் மூலம் CAFE கணக்கீட்டில் குறிப்பிட்ட அளவு CO2 குறைப்பு பலனை நிறுவனங்கள் பெற முடியும்.

ஒரு நிறுவனம் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை விட சிறப்பாக செயல்பட்டால் அதற்கு credits கிடைக்கும். இலக்கை அடையத் தவறினால் deficit உருவாகும். இந்த credits-ஐ குறிப்பிட்ட விதிகளின் கீழ் அடுத்த காலகட்டத்துக்கு எடுத்துச் செல்லவோ, மற்ற நிறுவனங்களுடன் பரிமாறிக்கொள்ளவோ முடியும். தேவையான அளவு செயல்திறனை அடைய முடியாத நிறுவனங்கள், விதிகளின்படி குறிப்பிட்ட தொகையை செலுத்தி credits வாங்கும் வாய்ப்பும் உள்ளது.

இந்த புதிய விதிகளின் தாக்கம் நேரடியாக கார் வாங்குபவர்களிடம் உடனடியாக தெரியாமல் இருக்கலாம். ஆனால் 2027 முதல் கார் நிறுவனங்கள் அதிக எரிபொருள் திறன் கொண்ட இன்ஜின்கள், ஹைபிரிட் தொழில்நுட்பம், மின்சார வாகனங்கள் மற்றும் மாற்று எரிபொருள் தொழில்நுட்பங்களில் அதிக கவனம் செலுத்த வேண்டிய சூழல் உருவாகும். இதன் மூலம் இந்திய கார் சந்தையில் அடுத்த சில ஆண்டுகளில் வாகனங்களின் தொழில்நுட்பத்திலும் எரிபொருள் பயன்பாட்டிலும் படிப்படியான மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

CAFE-III என்பது ஒரு குறிப்பிட்ட கார் மாடலுக்கு மட்டும் விதிக்கப்படும் மைலேஜ் விதி அல்ல. ஒரு கார் நிறுவனம் விற்பனை செய்யும் முழு வாகன வரிசையின் சராசரி எரிபொருள் பயன்பாடு மற்றும் கார்பன் வெளியேற்றத்தை கட்டுப்படுத்தும் முறை. 2027 முதல் இந்த விதிகள் படிப்படியாக கடுமையடைவதால், கார் நிறுவனங்களின் தயாரிப்பு திட்டங்கள் மட்டுமின்றி, இந்தியாவில் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும் கார் வகைகளிலும் தொழில்நுட்பத்திலும் மாற்றம் ஏற்படக்கூடும்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com