

குழந்தைகள் தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்தாலோ, கடினமான கணக்கைச் சரியாகப் போட்டாலோ பெற்றோர்கள் முதலில் சொல்வது, “நீ ரொம்ப புத்திசாலி”, “உன்னைப் போல யாராலும் படிக்க முடியாது” என்பதுதான். குழந்தைகளை உற்சாகப்படுத்த வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில்தான் இதுபோன்ற பாராட்டுகள் வழங்கப்படுகின்றன. ஆனால், குழந்தைகளின் அறிவுத்திறனை மட்டும் முன்னிலைப்படுத்திப் பாராட்டுவது சில நேரங்களில் அவர்களுக்குள் தோல்வி குறித்த பயத்தை உருவாக்கலாம் என்று உளவியல் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
குழந்தைகளின் முயற்சி, உழைப்பு மற்றும் கற்றுக்கொள்ளும் ஆர்வத்தைப் பாராட்டுவதற்குப் பதிலாக, அவர்களின் புத்திசாலித்தனத்தை மட்டும் தொடர்ந்து பாராட்டினால், அவர்கள் தங்களது திறமையை நிரூபிக்க வேண்டும் என்ற அழுத்தத்திற்கு ஆளாகலாம். இதனால் ஒரு கட்டத்தில் தவறு செய்துவிடுவோமோ, மற்றவர்கள் நம்மைப் புத்திசாலி என்று நினைக்க மாட்டார்களோ என்ற பயம் உருவாக வாய்ப்புள்ளது.
இதுகுறித்து 1998ஆம் ஆண்டு உளவியல் ஆராய்ச்சியாளர்கள் கிளாடியா முல்லர் மற்றும் கேரல் ட்வெக் ஆகியோர் முக்கியமான ஆய்வை மேற்கொண்டனர். ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களிடம் ஆறு கட்டங்களாகப் பல்வேறு சோதனைகள் நடத்தப்பட்டன. முதலில் மாணவர்கள் சில கேள்விகளுக்குச் சரியாகப் பதிலளித்தபோது, ஒரு பிரிவினரிடம் அவர்களின் புத்திசாலித்தனத்தைப் பாராட்டினர். மற்றொரு பிரிவினரிடம் அவர்கள் எடுத்த முயற்சியையும் உழைப்பையும் பாராட்டினர்.
மாணவர்களுக்கு சற்று கடினமான கேள்விகள் வழங்கப்பட்டன. அப்போது கிடைத்த முடிவுகள் கவனிக்கத்தக்கதாக இருந்தன. புத்திசாலித்தனத்திற்காகப் பாராட்டப்பட்ட குழந்தைகள் கடினமான கேள்விகளைச் சந்தித்தபோது விரைவில் மனம் தளர்ந்தனர். தொடர்ந்து முயற்சி செய்வதிலும் ஆர்வம் குறைந்தது. சிலர் தங்களால் சரியாகச் செய்ய முடியவில்லை என்றால் தங்களுக்கு போதிய அறிவு இல்லை என்று நினைக்கத் தொடங்கினர்.
உழைப்புக்காகப் பாராட்டப்பட்ட குழந்தைகள் கடினமான கேள்விகளைக் கண்டு அஞ்சவில்லை. தவறு ஏற்பட்டாலும் மீண்டும் முயற்சி செய்யத் தயாராக இருந்தனர். சவாலான கேள்விகளைக் கற்றுக்கொள்வதற்கான வாய்ப்பாகப் பார்த்தனர். இதன் மூலம் குழந்தைகளிடம் எந்த வகையான பாராட்டுகள் வழங்கப்படுகின்றன என்பது அவர்களின் கற்றல் மனப்பான்மையில் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்பது தெரியவந்தது. இதனை உளவியலில் 'ஃபிக்ஸ்டு மைண்ட்செட்' (Fixed Mindset), 'க்ரோத் மைண்ட்செட்' (Growth Mindset) என்று குறிப்பிடுகின்றனர். ஃபிக்ஸ்டு மைண்ட்செட் கொண்டவர்கள் அறிவுத்திறன் என்பது பிறப்பிலேயே நிர்ணயிக்கப்பட்ட ஒன்று என்று நினைக்கலாம். தங்களால் முடியாத செயல்களை முயற்சி செய்வதற்கும் தயங்குவார்கள். ஆனால், க்ரோத் மைண்ட்செட் கொண்டவர்கள் தொடர்ந்து முயற்சி செய்தால் திறமையை வளர்த்துக்கொள்ள முடியும் என்று நம்புவார்கள்.
2018ஆம் ஆண்டு வெளியான மற்றொரு ஆய்விலும் குழந்தைகளின் திறமையை மட்டும் பாராட்டுவது தோல்வியை எதிர்கொள்ளும் விதத்தில் பாதிப்பை ஏற்படுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தோல்வி ஏற்படும்போது தங்களது திறமையைப் பாதுகாத்துக்கொள்ள சில குழந்தைகள் கடினமான முயற்சிகளைத் தவிர்க்கலாம் அல்லது தோல்விக்கான காரணத்தை முன்கூட்டியே உருவாக்கிக்கொள்ளலாம் என்றும் ஆய்வு சுட்டிக்காட்டுகிறது. அப்படியானால், பெற்றோர்கள் குழந்தைகளைப் பாராட்டவே கூடாதா என்ற கேள்வி எழலாம். அப்படியல்ல. குழந்தைகளின் சாதனைகளையும் புத்திசாலித்தனத்தையும் பாராட்டுவதில் தவறில்லை. ஆனால், அதனுடன் அவர்கள் எடுத்த முயற்சியையும் அங்கீகரிப்பது அவசியம்.
'நீ ரொம்ப புத்திசாலி' என்று மட்டும் சொல்வதற்குப் பதிலாக, 'இந்தக் கணக்கைத் தீர்க்க நீ எவ்வளவு முயற்சி செய்திருக்கிறாய்', 'தவறு வந்தாலும் மீண்டும் முயற்சி செய்தது மிகவும் நல்லது' என்று பாராட்டலாம். நல்ல மதிப்பெண்கள் எடுப்பது மட்டுமல்லாமல், தொடர்ந்து பயிற்சி செய்வது, சந்தேகங்களைக் கேட்பது, புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்வது போன்றவற்றையும் ஊக்கப்படுத்த வேண்டும். குழந்தைகள் தவறு செய்யும்போது உடனடியாகக் குறை கூறாமல், அந்தத் தவறிலிருந்து என்ன கற்றுக்கொள்ளலாம் என்று அவர்களுடன் பேச வேண்டும். தோல்வி என்பது திறமையின்மையின் அடையாளம் அல்ல; அடுத்த முறை சிறப்பாகச் செயல்பட உதவும் அனுபவம் என்பதைப் புரியவைக்க வேண்டும்.
பெற்றோர்களின் ஒரு சிறிய பாராட்டுச் சொல் குழந்தைகளின் தன்னம்பிக்கையை வளர்க்கவும் முடியும்; தவறான அணுகுமுறையில் தொடர்ந்து பாராட்டினால் தேவையற்ற அழுத்தத்தையும் உருவாக்கலாம். எனவே, குழந்தைகளைப் புத்திசாலிகள் என்று சொல்வதோடு நிறுத்தாமல், அவர்கள் எடுக்கும் முயற்சியையும் உழைப்பையும் பாராட்டுவதே அவர்களைத் தோல்வியைக் கண்டு பயப்படாத தன்னம்பிக்கையான மனிதர்களாக வளர்க்க உதவும்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.