சர்க்கரை நோய் என்பது இதயம், சிறுநீரகம், கண்கள் போன்ற உறுப்புகளை மட்டும்தான் பாதிக்கும் என்று பலரும் நினைக்கிறார்கள். ஆனால், ரத்தத்தில் சர்க்கரையின் அளவு நீண்ட காலமாக அதிகரித்து வருவது மூளையின் செயல்பாட்டையும் பாதிக்கக்கூடும் எனப் புதிய ஆய்வு ஒன்று எச்சரிக்கிறது. குறிப்பாக, இளம் வயதில் தொடங்கி நடுத்தர வயது வரை ரத்தச் சர்க்கரை அளவு படிப்படியாக அதிகரிப்பவர்களுக்கு 55 வயதிற்குள் நினைவாற்றல் மற்றும் சிந்திக்கும் திறனில் பாதிப்புகள் ஏற்படுவதற்கான தொடர்பு இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். இதில் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம் என்னவென்றால், சர்க்கரை நோய் கண்டறியப்படாதவர்களிடமும் இந்தத் தொடர்பு காணப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட இந்த நீண்டகால ஆய்வில் 2,808 பேர் பங்கேற்றனர். 1985-1986 காலகட்டத்தில் 18 முதல் 30 வயதுக்குட்பட்டவர்களாக இருந்த இவர்களின் உடல்நிலை சுமார் 30 ஆண்டுகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டது. குறிப்பிட்ட இடைவெளிகளில் அவர்களின் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு பரிசோதிக்கப்பட்டது. பின்னர், சராசரியாக 55 வயதை எட்டியபோது அவர்களின் நினைவாற்றல், தகவல்களைப் புரிந்துகொள்ளும் வேகம், முடிவெடுக்கும் திறன் மற்றும் மூளையின் ஒட்டுமொத்த செயல்பாடு ஆகியவை பல்வேறு பரிசோதனைகள் மூலம் மதிப்பிடப்பட்டன.
ஆய்வில் பங்கேற்றவர்களின் ரத்தச் சர்க்கரை அளவு மூன்று வகைகளாகப் பிரிக்கப்பட்டது. ஒரு பிரிவினருக்கு சர்க்கரை அளவு தொடர்ந்து குறைவாகவும் நிலையாகவும் இருந்தது. மற்றொரு பிரிவினருக்கு மிதமான அளவில் இருந்தது. மூன்றாவது பிரிவினருக்கு இளம் வயதிலிருந்து நடுத்தர வயது வரை சர்க்கரை அளவு படிப்படியாக அதிகரித்தது. இந்த மூன்றாவது பிரிவினரிடம்தான் நினைவாற்றல் மற்றும் சிந்தனைத் திறன் தொடர்பான பரிசோதனைகளில் ஒப்பீட்டளவில் குறைவான செயல்திறன் காணப்பட்டது.
சர்க்கரை அளவு அதிகரித்திருந்தாலும் சர்க்கரை நோய்க்கான அளவை எட்டாதவர்களிடமும் இந்த மாற்றம் காணப்பட்டது. அதாவது, ஒருவருக்கு சர்க்கரை நோய் இருப்பதாக மருத்துவர்கள் கண்டறியும் நிலை ஏற்படுவதற்கு முன்பே, ரத்தச் சர்க்கரையின் நீண்டகால மாற்றங்கள் மூளையின் ஆரோக்கியத்துடன் தொடர்புடையதாக இருக்கலாம் என்பதையே இந்த ஆய்வு சுட்டிக்காட்டுகிறது. ஆய்வில் பங்கேற்றவர்களில் 345 பேருக்கு தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட கண்காணிப்பின்போது டைப் 2 சர்க்கரை நோய் ஏற்பட்டிருந்தது.
605 பேருக்கு மூளையின் அமைப்பில் ஏற்படும் மாற்றங்களைக் கண்டறிய எம்.ஆர்.ஐ. ஸ்கேன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் சர்க்கரை நோய் ஏற்பட்டவர்களுக்கு மூளையின் சாம்பல் நிறத் திசுக்களின் அளவு குறைவாகவும், வெள்ளை நிறத் திசுக்களில் சில அசாதாரண மாற்றங்கள் அதிகமாகவும் காணப்பட்டன. மூளையின் சாம்பல் நிறத் திசுக்கள் நினைவாற்றல், தகவல்களைப் புரிந்துகொள்வது உள்ளிட்ட செயல்பாடுகளில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. வெள்ளை நிறத் திசுக்கள் மூளையின் வெவ்வேறு பகுதிகளுக்கு இடையே தகவல்கள் பரிமாறப்படுவதற்கு உதவுகின்றன.
ரத்தச் சர்க்கரை அதிகரிப்பதற்கும் மூளையின் செயல்பாட்டிற்கும் என்ன தொடர்பு இருக்கலாம்? தொடர்ந்து அதிகமாக இருக்கும் ரத்தச் சர்க்கரை, மூளைக்குத் தேவையான ஆக்சிஜன் மற்றும் ஊட்டச்சத்துகளை எடுத்துச் செல்லும் மிகச்சிறிய ரத்த நாளங்களைப் பாதிக்கக்கூடும். இதனால் மூளைக்குச் செல்லும் ரத்த ஓட்டத்தில் மாற்றங்கள் ஏற்படலாம். அதேபோல், இன்சுலின் எதிர்ப்புத் தன்மையும் நினைவாற்றல் மற்றும் கற்றல் செயல்பாடுகளில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என ஆராய்ச்சியாளர்கள் விளக்குகின்றனர்.
இதனால் இளம் வயதிலிருந்தே ரத்தச் சர்க்கரையைத் தொடர்ந்து கண்காணிப்பது அவசியம் என மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் வலியுறுத்துகின்றனர். சீரான உணவுப் பழக்கம், தினசரி உடற்பயிற்சி, போதுமான தூக்கம் மற்றும் உடல் எடையைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது வளர்சிதை மாற்ற ஆரோக்கியத்திற்கு உதவும். குறிப்பாக, சர்க்கரை மற்றும் அதிக கலோரி கொண்ட உணவுகளை அளவோடு எடுத்துக்கொள்வதும், நார்ச்சத்து நிறைந்த காய்கறிகள் மற்றும் முழு தானியங்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதும் நல்லது.
ரத்தச் சர்க்கரை அதிகரிப்பதே நேரடியாக நினைவாற்றல் பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதை இந்த ஆய்வு நிரூபிக்கவில்லை. மேலும், பங்கேற்பாளர்களின் மூளைச் செயல்பாடு இறுதிக்கட்டத்தில்தான் மதிப்பிடப்பட்டது என்பதால், காலப்போக்கில் அவர்களின் நினைவாற்றல் எவ்வளவு குறைந்தது என்பதையும் உறுதியாகக் கூற முடியாது. எனவே, இதுதொடர்பாக மேலும் ஆய்வுகள் தேவைப்படுகின்றன. சர்க்கரை நோய் வரும்வரை காத்திருக்காமல் இளம் வயதிலிருந்தே ரத்தச் சர்க்கரையின் மாற்றங்களைக் கவனிப்பது முக்கியம் என்பதை இந்த ஆய்வு உணர்த்துகிறது. உடலின் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதோடு, எதிர்காலத்தில் மூளையின் செயல்பாட்டையும் சீராக வைத்திருக்க வாழ்க்கை முறை மாற்றங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டியதன் அவசியத்தையும் இது எடுத்துக்காட்டுகிறது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.