குறுகிய காலம் ஒரு குறிப்பிட்ட பணத்தை சேமித்து, அந்த காலகட்டத்தில் அதற்கான வட்டியும் பெற்று, இறுதியில் சேமித்த தொகையையும் பெறும் வழி ஒன்று இருக்கிறது. அந்த வழியை அமைத்து தருகின்றது இந்திய அஞ்சலக துறை. சேமிப்பு என்பது நமது வருங்காலத்திற்கானது மட்டுமல்ல. நம்மிடம் இருக்கும் சேமிப்பை சில காலம் வங்கி அல்லது பிற சேமிப்பு திட்டங்களில் போட்டு பலனும் பெறலாம்.
அந்த வகையில், ரிஸ்க் என்பது கொஞ்சம் கூட இல்லாத, ஒரு குறுகிய கால சேமிப்பு திட்டத்தை பற்றித்தான் இன்று நாம் இந்த பதிவில் காணவுள்ளோம். இந்திய அஞ்சலக துறையில் ஏராளமான சேமிப்பு திட்டங்கள் உள்ளது. இதற்கான வட்டி விகிதங்களும் நமக்கு ஏற்றார் போல உள்ளது என்பது அனைவரும் அறிந்ததே.
சிறுவர் முதல் முதியவர் வரை பலன் அடையும் வகையில் செயல்படுவது தான் MIS எனப்படும் Monthly Income Scheme. இந்த மாதாந்திர வருவாய் திட்டத்தில் நீங்கள் 5 ஆண்டுகள் வரை பணத்தை சேமிக்க முடியும். ஒரே ஒரு முறை நீங்கள் பணத்தை சேமித்தால் போதும், 5 ஆண்டுகள் கழித்து நீங்கள் சேமித்த பணம் கிடைப்பதோடு, மாதந்தோறும் வட்டியும் கிடைக்கும்.
சரி MIS திட்டம் என்றால் என்ன?
மாதாந்திர வருவாய் திட்டம் என்பது அனைத்து அஞ்சலகத்திலும் செய்யப்படும் ஒரு திட்டம். இந்திய குடிமக்கள் யாராக இருந்தாலும் இந்த திட்டத்தில் சேரலாம். தனி நபர் கணக்கு என்றால் இந்த திட்டத்தில் மூலம் 5 முதல் 9 லட்சம் வரை சேமிக்கலாம். அதே போல கூட்டுக் கணக்கு என்றால் (Joint Account) 9 முதல் 15 லட்சம் வரை உங்களால் சேமிக்க முடியும்.
MIS எப்படி செயல்படுகிறது?
இந்த மாதாந்திர வருவாய் திட்டம் என்பது முன்பே கூறியது போல, ஒரு குறுகிய காலம் சேமிப்பு திட்டம். ஒரே ஒரு முறை நீங்கள் இந்த திட்டத்தில் பணத்தை போட்டால் போதும். 5 ஆண்டுகள் முடியும் வரை மாதந்தோறும், நீங்கள் போட்ட பணத்திற்கான வட்டி 7.4 சதவிகிதம் என்ற விகிதத்தில் கிடைக்கும். மேலும் 5 ஆண்டுகள் முடிந்ததும், நீங்கள் சேமித்த முழு தொகையும் உங்களுக்கு கிடைக்கும்.
நீங்கள் தனி நபர் கணக்கில் 5,00,000 ரூபாயை இந்த MIS திட்டத்தில் சேமிக்கிறீர்கள் என்று வைத்துகொள்வோம். அப்போது உங்களுக்கு, 5 ஆண்டுகளுக்கு மாதந்தோறும் 7.4 சதவிகித வட்டியாக 3083 ரூபாய் கிடைக்கும். மேலும் 5 ஆண்டுகள் முடிந்தவுடன் அந்த 5 லட்சத்தை திரும்ப பெறலாம்.
அதே நேரம் நீங்கள் கூட்டுக் கணக்கில் 10,00,000 ரூபாயை முதலீடு செய்கிறீர்கள் என்றால், 5 ஆண்டுகளுக்கு 6167 ரூபாய் மாதந்தோறும் கிடைக்கும்.
இந்த 5 ஆண்டுகளில், இடைப்பட்ட காலத்தில் நீங்கள் பணத்தை எடுக்க விரும்பினால் 3 ஆண்டுகள் வரை 5.50 சதவிகித வட்டி மட்டுமே கிடைக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த திட்டத்தை பொறுத்தவரை ஒன்றுக்கும் மேற்பட்ட அஞ்சலகத்தில் கூட கணக்கு துவங்கலாம். மேலும் ஒரு அஞ்சலகத்தில் உள்ள கணக்கை வேறு ஒரு அஞ்சலகத்திற்கு மாற்றும் வசதியும் உள்ளது.
இதற்கு அளிக்கப்படும் அந்த 7.4 சதவிகித வட்டி என்பது ஒரு நிலையான வட்டி என்பதால், இது சிறந்த சேமிப்பு முறையாக உள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்