இன்று நாம் இந்த பதிவில் காணவிருப்பது ஒரு அஞ்சலக சேமிப்பு முறையை பற்றித்தான். இன்றைய தேதியில் இந்த சேமிப்பு முறையில் வட்டி விகிதம் சுமார் 7.7 ஆகும். ஆனால் எதிர்காலத்தில் இந்த வட்டி விகித சதவிகிதம் அதிகரிக்கவும் வாய்ப்புகள் உள்ளது. வேகமாக நகரும் இன்றைய சூழலில், மக்கள் தாங்கள் ஈட்டும் குறைந்த பணத்தை விரையம் செய்யாமல், சேமித்து அதன் மூலம் தங்கள் எதிர்காலத்தை நல்ல முறையில் பாதுகாக்க வேண்டும்.
என்னதான் SIP மற்றும் LUMPSUM போன்ற பல சிறப்பான சேமிப்பு திட்டங்கள் 12 முதல் 15 சதவிகித வட்டி விகிதத்துடன் கிடைத்தாலும், அதில் ரிஸ்க் கண்டிப்பாக அதிகம். ஆனால், எனக்கு ரிஸ்க் எடுக்க பிடிக்காது என்று நினைப்பவர்கள், நிச்சயம் அஞ்சலக சிறுசேமிப்பு திட்டங்கள் மூலம் தங்களுடைய பணத்தை நல்ல முறையில் பெரிய அளவில் சேமிக்க முடியும். இந்த சேமிப்பு திட்டங்களில் கிடைக்கும் வட்டி விகிதம் குறைவு தான் என்றாலும் கூட, துளி கூட பயம் இல்லாமல் நம்மால், நமது எதிர்காலத்திற்கு சேமிக்க முடியும்.
National Savings Certificate (தேசிய சேமிப்பு பத்திரம்)
இந்திய அஞ்சலகத்தை பொறுத்தவரை பல வகையான சேமிப்பு திட்டங்கள் உள்ளன, அதில் இந்த பத்திர சேமிப்பு முறையும் ஒன்று. இந்திய வருமான வரி சட்டத்தின் பிரிவு 80Cயின் கீழ், இந்த திட்டத்தில் சேமிப்பதன் மூலம் வரி சலுகைகளும் கிடைக்கும். ரிஸ்க் இல்லாமல் சேமிக்க நினைக்கும், அதே நேரம் அந்த சேமிப்பின் மூலம் வரி சலுகை பெற நினைக்கும் முதலீட்டாளர்களுக்கு இது சிறந்த தேர்வு.
எப்படி இந்த திட்டத்தில் இணைவது?
அருகில் உள்ள அஞ்சலகத்திற்கு சென்று, நீங்கள் இந்த திட்டத்தில் இணைய முடியும். 10 வயதுக்கு மேற்பட்டவர்கள் யாராக இருந்தாலும் இந்த திட்டத்தில் இணையலாம். ஆனால் 18 வயது வரை பாதுகாவலர் ஒருவரின் கணக்கின் கீழ் தான் இந்த திட்டத்தை செயல்படுத்த முடியும்.
மேலும் இந்த திட்டத்தை பொறுத்தவரை 5 ஆண்டுகள் வரை உங்களால் பணத்தை சேமிக்க முடியும், குறைந்தபட்சம் 1000 ரூபாய் முதல் இந்த திட்டத்தில் போடலாம். மாதந்தோறும், இந்த அளவிலான தொகை தான் என்று இல்லாமல், 1000 ரூபாய்க்கு மேல், உங்களுக்கு கிடைக்கும் பணத்தை சேமித்து பலன்பெறலாம்.
5 ஆண்டுகளின் இறுதியில், உங்களுக்கு 7.7 என்ற வட்டி விகிதத்தில் உங்களுக்கான பணம் திரும்ப கிடைக்கும். இந்திய குடிமக்கள் யாராக இருந்தாலும் இந்த திட்டத்தில் சேர்ந்து பலன் பெறலாம்.
சரி என்னென்ன பலன்கள் கிடைக்கும்?
இன்றைய தேதியில் இந்தத் திட்டம், முதலீட்டாளர்களுக்கு சரியாக 7.7 சதவிகித உத்தரவாதமான வருமானத்தை தருகின்றது. அஞ்சலகத்தில் பொதுவாக வழங்கப்படும் வட்டி விகிதத்தை விட இது அதிகம்.
அரசால் ஆதரிக்கப்படும் வரி சேமிப்புத் திட்டமாக இது உள்ளது. ஆகவே 1961ம் ஆண்டு வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 80Cயின் கீழ் நீங்கள் ரூ.1.5 லட்சம் வரை வரி சேமிப்பு பெறமுடியும்.
வங்கிகள் இந்த NSCகளை பிணையமாகவோ அல்லது பாதுகாக்கப்பட்ட கடன்களுக்கான பிணையமாகவோ ஏற்றுக்கொள்கின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.
முதலீட்டாளர், தனது குடும்ப உறுப்பினரை (மைனராக கூட இருக்கலாம்) பரிந்துரைக்கலாம். இதனால் முதலீட்டாளரின் எதிர்பாரத மறைவுக்கு பிறகு அவர்கள் (நாமினி) அதைப் பெற முடியும்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்