சுடச்சுட சோறு... கூடவே இந்த கருவாட்டு குழம்பு - வேறென்ன வேணும்!

பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் மற்றும் பூண்டு சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்
karuvadu kuzhambu
Published on
Updated on
2 min read

கிராமத்து சமையல் என்று எடுத்துக்கொண்டால், கருவாட்டு குழம்பு ஒரு தனி இடத்தைப் பிடிக்கும். மீன் குழம்பை விடவும், அதன் வாசனை மற்றும் சுவைக்காகவே பலரும் கருவாட்டு குழம்பை விரும்பிச் சாப்பிடுவார்கள். முருங்கைக்காய், கத்தரிக்காய் என காய்கறிகள் சேர்த்து மண் சட்டியில் சமைக்கும் அந்த கருவாட்டு குழம்பு, நாவிற்கு ஒரு விருந்தாக அமையும். பழைய சோற்றிற்குத் தொட்டுக்கொள்ளவும், சுடச்சுட சாதத்தில் ஊற்றிச் சாப்பிடவும் இது போன்ற ஒரு சுவையான உணவு கிடைப்பது அரிது. கருவாட்டைச் சரியாகச் சுத்தம் செய்து, சரியான பதத்தில் குழம்பு வைப்பது எப்படி என்பதை இப்போது பார்ப்போம்.

முதலில் கருவாட்டைச் சரியாகச் சுத்தம் செய்வதுதான் மிக முக்கியமான வேலை. நீங்கள் வாங்கிய கருவாட்டை வெதுவெதுப்பான தண்ணீரில் போட்டு, ஒரு பத்து நிமிடம் ஊற வைக்க வேண்டும். அதன் பிறகு தண்ணீரை மாற்றி மாற்றி, கருவாட்டில் உள்ள உப்பு நீங்கும் வரை நன்றாகக் கழுவ வேண்டும். கருவாட்டில் உள்ள செதில்கள் மற்றும் தலைப்பகுதியை நீக்கிவிட்டு, சிறிய துண்டுகளாக நறுக்கி வைத்துக்கொள்ள வேண்டும். கருவாட்டைச் சுத்தம் செய்தால்தான் குழம்பின் சுவை சரியாக இருக்கும். அதேபோல், தேவையான காய்கறிகளான முருங்கைக்காய் மற்றும் கத்தரிக்காயைப் பெரிய துண்டுகளாக நறுக்கி எடுத்துக்கொள்ள வேண்டும்.

மண் சட்டியில் நல்லெண்ணெய் ஊற்றிச் சூடாக்கி, கடுகு, வெந்தயம் மற்றும் சீரகம் சேர்த்துத் தாளிக்க வேண்டும். தாளித்த பிறகு, பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் மற்றும் பூண்டு சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். கருவாட்டு குழம்பிற்குப் பூண்டு அதிக அளவில் சேர்த்தால், அதன் சுவையும் ஆரோக்கியமும் கூடும். வெங்காயம் வதங்கியதும், தக்காளி சேர்த்து நன்றாக மசியும் வரை வதக்க வேண்டும். பிறகு, நறுக்கி வைத்துள்ள காய்கறிகளைச் சேர்த்துச் சிறிதளவு வதக்கி, மஞ்சள் தூள், மிளகாய்த் தூள் மற்றும் மல்லித் தூள் சேர்த்து வதக்க வேண்டும். மசாலாக்களின் பச்சை வாசனை போகும் வரை நன்றாக வதக்கிய பிறகு, கரைத்து வைத்துள்ள புளிக்கரைசலை ஊற்ற வேண்டும்.

குழம்பு நன்றாகக் கொதித்து, காய்கறிகள் வெந்து வரும்போது, சுத்தம் செய்து வைத்துள்ள கருவாட்டுத் துண்டுகளைச் சேர்க்க வேண்டும். கருவாடு சேர்த்த பிறகு குழம்பை ரொம்ப நேரம் கொதிக்க வைக்கத் தேவையில்லை, ஒரு ஐந்து முதல் பத்து நிமிடம் கொதித்தாலே போதுமானது. கருவாட்டில் ஏற்கனவே உப்பு இருப்பதால், குழம்பிற்கு உப்பு சேர்க்கும்போது கவனமாக இருக்க வேண்டும். குழம்பின் மணம் வீடு முழுவதும் பரவி, உங்கள் பசியைத் தூண்டும். கடைசியாகச் சிறிதளவு வெல்லம் சேர்த்து அடுப்பை அணைத்தால், சுவை இன்னும் தூக்கலாக இருக்கும்.

கருவாட்டு குழம்பின் சிறப்பம்சமே, அது ஆறிய பிறகு சாப்பிடும்போதுதான் அதன் சுவை நன்றாகத் தெரியும். கருவாடு குழம்போடு நன்றாக ஊறி, காய்கறிகளிலும் அதன் சுவை இறங்கியிருக்கும். கிராமப்புறங்களில் வயல் வேலைக்குச் செல்பவர்கள், காலையிலேயே இந்தக் குழம்பைச் சமைத்து வைத்துவிட்டுச் செல்வார்கள். இது உடலுக்குத் தேவையான உப்பைத் தருவதோடு, சுறுசுறுப்பாக இயங்கவும் உதவுகிறது. ஹோட்டல்களில் கருவாட்டு குழம்பு சாப்பிடுவதை விட, வீட்டில் நாமே சுத்தமாகச் செய்து சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com