மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றம் காரணமாக, நாடு முழுவதும் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் எரிவாயு சிலிண்டர் விநியோகம் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் தற்போது ஏராளமான உணவகங்கள் மூடப்பட்டு வருகின்றன. இதேநிலை நீடித்தால் உணவகங்கள் கடுமையான சிக்கலை சந்திக்கும் அபாய நிலை உள்ளது.
எனவே தான், உணவகங்கள் தங்களது மெனுவை முறைப்படுத்தவும், எரிபொருளைச் சேமிக்கவும், குறைந்த எரிவாயு மற்றும் குறைந்த நேரத்தில் சமைக்கக்கூடிய உணவுகளுக்கு முன்னுரிமை அளிக்கவும் இந்திய தேசிய உணவக சங்கம் வலியுறுத்தியுள்ளது.
ஹோட்டல் உணவுகளை மட்டுமே நம்பியுள்ள மக்கள் மிகவும் பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அத்துடன், உணவகங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் உணவு டெலிவரி பாய்கள் என லட்சக்கணக்கானோர் வேலை இழக்கும் அபாய நிலையும் உள்ளது.
இந்த நிலை, வணிக ரீதியிலான எரிவாயு சிலிண்டருக்கு மட்டுமல்ல. வீட்டு உபயோகத்திற்கான எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடும் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. சிலிண்டர் தட்டுப்பாடு மட்டுமல்ல, அதன் விலையும் உயர்ந்து வருவதால், பொதுமக்கள் குறிப்பாக இல்லத்தரசிகள் மிகுந்த அச்சமடைந்துள்ளனர். இந்த நிலையில் வீட்டில் சமைக்கும்போது எரிபொருளை எளிமையான முறையில் எப்படியெல்லாம் சேமிக்கலாம் என்பதை பார்ப்போம்.
எல்லாவற்றையும் தயார் செய்துவிட்டு அடுப்பை பற்ற வையுங்கள்:
சமைக்க ஆரம்பிப்பதற்கு முன் அதற்குத் தேவையான அனைத்துப் பொருள்களையும் தயாராக எடுத்து வைத்துக் கொண்டு, பின்னர்தான் அடுப்பை ஆன் செய்ய வேண்டும்.
அடுப்பை ஆன் செய்துவிட்டு, அரிசியை எடுப்பது, கழுவுவது, காய்கறிகளை நறுக்குவது என செய்யாமல், காய்கறிகள் நறுக்குவதில் தொடங்கி, புளியைக் கரைப்பது, தாளிக்கும் பொருள்கள் மற்றும் மசாலா பொருட்களை தயாராக எடுத்து வைப்பது வரை அனைத்தையும் தயாராக முன்கூட்டியே எடுத்து வைத்துக் கொண்டு அடுப்பை பற்ற வைப்பது எரிவாயு வீணாவதை தடுக்கும்.
பிரஷர் குக்கரை பயன்படுத்துங்கள்:
சமையலறையில் பிரஷர் குக்கரை விட எரிவாயுவை மிச்சப்படுத்த வேறு எதுவும் சிறந்தது இல்லை. பருப்பு, அரிசி, இறைச்சி, ராஜ்மா, பீன்ஸ்... இறுதியில் பீட்ரூட் சமைப்பதற்கு கூட, ஒரு குக்கர் சிறந்தது. திறந்த பாத்திரத்தில் சமைப்பதை விட ஒரு குக்கர் மிகக் குறைந்த எரிவாயுவைப் பயன்படுத்தி, குறைந்த நேரத்தில் சமைத்து விடலாம்.
மற்றுமொரு சிறிய ஐடியா என்னவென்றால், சமைப்பதற்கு முன்பு, அரிசி, பருப்பு போன்ற வேக வைக்க வேண்டிய பொருட்களை, அரை மணி நேரத்திற்கு முன்பாக, நன்கு கழுவி நல்ல தண்ணீரில் ஊறவைத்தால், பொருட்கள் சீக்கிரமாக வேகும். இதனால் எரிவாயு மிச்சமாகும்.
மேலும், விசில் வரும்போது, அடுப்பை குறைந்த தணலில் வைக்க வேண்டும். குக்கருக்குள் இருக்கும் மீதமுள்ள வெப்பம் உணவை, வேக வைத்துவிடும். தேவையில்லாமல் நீண்ட நேரம் அடுப்பை எரிய விடாதீர்கள்.
கேரட், பீட்ரூட், உருளைக் கிழங்கு உள்ளிட்ட பல காய்கறிகளையும் நன்றாகக் கழுவிவிட்டு, பருப்புடன் சேர்த்து அப்படியே முழுதாக குக்கரில் வேகவைக்கலாம். வெந்ததும் தேவைப்பட்டால் தோல் நீக்கி, வெட்டி, பொரியல் செய்யலாம். சமைக்கவும் எளிது, வேலையும் எளிதாக முடியும். பருப்பு வேகும் நேரத்திலேயே காயும் வெந்துவிடுவதால் எரிவாயுவும் மிச்சமாகும்.
மூடி வைத்து சமையுங்கள்:
சமையலறையில் நாம் செய்யும் மிகப்பெரிய தவறு மூடி இல்லாமல் சமைப்பதுதான். ஒரு பாத்திரத்தில் மூடி இல்லாமல் சமைப்பது என்பது காற்றில் வாயுவை அதிகமாக வீணடிக்கிறோம் என்பதாகும். நீங்கள் சமைக்கும்போது பாத்திரத்தை மூடி வைத்தால், நீராவி வெளியேறாமல் உள்ளேயே தங்கி, ஒரு மினி பிரஷர் குக்கர்போல செயல்படுகிறது.
இது உணவு மிக வேகமாக சமைக்க உதவுகிறது. உதாரணமாக, உருளைக்கிழங்கை வேகவைக்கும்போது மூடி வைத்தால், பாதி நேரமும் பாதி வாயுவும் மிச்சமாகும். எனவே கிரேவி கெட்டியாக வேண்டும் என்று நீங்கள் விரும்பினால் தவிர, மற்ற எல்லா நேரங்களிலும் மூடியுடன் சமைக்க வேண்டும்.
அடுப்பை பெரிதாக எரியவிட்டுச் சமைக்கும்போது, எரிபொருள் அதிகம் வீணாகும். உணவுப்பொருள் கொதிநிலைக்கு வந்ததும், அடுப்பை மீடியம் அல்லது குறைந்த தணலில் வைத்தே சமைக்க வேண்டும். எளிதில் வேகும் பொருளுக்கு அதிக தண்ணீர் ஊற்றி வற்ற வைக்க, கூடுதலாக எரிபொருளை வீணடிக்கக்கூடாது.
சரியான பாத்திரத்தை தேர்ந்தெடுங்கள்:
கொஞ்சமாக சமைக்க சிறிய பாத்திரமும், அதிக அளவில் சமைக்க பெரிய பாத்திரமும் பயன்படுத்த வேண்டும். பெரிய பாத்திரத்தில் கொஞ்சமாகச் சமைத்தால் எரிபொருள் வீணாகும். அகலமான பாத்திரத்தில் சமைக்கும்போது சீக்கிரம் வேகும், எரிபொருள் செலவும் மிச்சமாகும்.
நாம் சமைக்கும் அளவிற்கு ஏற்ப பாத்திரத்தை தேர்வு செய்ய வேண்டும். பாத்திரம் சிறியதாக இருந்தால், அது சூடாக குறைந்த நேரம் எடுக்கும். மேலும், பாத்திரத்தின் அடிப்பகுதியைத் தாண்டி தீ வெளியே வந்தால்.. வாயுவை வீணாக்குகிறீர்கள் என்று அர்த்தம். அந்த தீ பாத்திரத்தை தொடாமல் காற்றில் பறக்கிறது. எனவே பாத்திரத்தின் அளவுக்கு ஏற்ப பர்னர் தீயின் அளவை குறைத்து வைத்து சமைப்பது எரிவாயுவை சேமிக்க பெரிதும் உதவும்.
ஒன் பாட் உணவை தேர்ந்தெடுத்து சமையுங்கள்:
பெரும்பாலும் சாதம், குழம்பு, கூட்டு, பொறியல் என்ற வகை வகையாய் சமைப்பதை விட்டுவிட்டு, 'ஒன் பாட்' உணவுகளான
கிச்சடி, புலாவ், வெஜ் பிரியாணி, தேங்காய் சாதம், புளி சாதம், எலுமிச்சை சாதம், தயிர் சாதம் போன்ற வெரைட்டி உணவுகளை திட்டமிடுங்கள். தனித்தனியாக சமைக்கும் வேலையும் இல்லை. எரிவாயுவும், நேரமும் மிச்சமாகும்.
கேஸ் அடுப்பை முறையாக பராமரியுங்கள்:
எரிவாயுவை மிச்சப்படுத்த அவ்வப்போது கேஸ் அடுப்பைப் பராமரிப்பதும் மிக முக்கியம். சிலிண்டர், ரெகுலேட்டர், குழாய் இணைப்புகளை மாதத்திற்கு ஒரு முறையாவது கட்டாயம் சரிபார்க்க வேண்டும். குமிழ்கள் தோன்றினால், எரிவாயு கசிவு இருப்பதாக அர்த்தம். ஒரு சிறிய கசிவு கூட சிலிண்டரை அமைதியாக காலி செய்துவிடும், அத்துடன் ஆபத்தானதும்கூட. எனவே 6 மாதத்திற்கு ஒரு முறையாவது புதிய குழாய் மற்றும் ரெகுலேட்டரை மாற்றுங்கள். பர்னர் தீ நீல நிறமாக இல்லாமல் மஞ்சள் நிறத்தில் இருந்தால், பர்னர் துளைகள் அடைக்கப்பட்டுள்ளன என்றும் கேஸ் சரியாக எரியவில்லை என்றும் அர்த்தம். உடனடியாக ஒரு பின் மூலம் அதை சுத்தம் செய்தால், கேஸ் ஓட்டம் நன்றாக இருக்கும், வீணாவது குறையும்.
எலக்ட்ரிக் ரைஸ் குக்கர்
எரிவாயுவை மிச்சப்படுத்த எலக்ட்ரிக் ரைஸ் குக்கரையும் பல விதங்களில் பயன்படுத்தலாம். அதிலேயே ஸ்டீமர், கீழே அரிசியை வேகவைக்க வசதிகள் வந்துவிட்டன.
இண்டக்ஷன் ஸ்டவ் (Induction Stove):
இண்டக்ஷன் ஸ்டவ் எனப்படும் மின்சார அடுப்பை கூடியவரை பயன்படுத்தலாம். பால் காய்ச்சுவது, காபி போடுவது, குறைந்த அளவில் சோறு வடிப்பது, உணவு பொருட்களை சூடு படுத்துவது, முட்டை, உருளைக் கிழங்கு போன்றவற்றை வேக வைப்பது போன்ற வேலைகளை இந்த இண்டக்ஷன் ஸ்டவ்-வில் எளிமையாகவும், விரைவாகவும் செய்துவிடலாம். இதனால் நேரம் மிச்சமாவதுடன், எரிவாயுவையும் சேமிக்க முடியும்.
ரோபோ அடுப்புகள்:
ரோபோ அடுப்புகள் இன்று இந்தியாவிலும் பிரபலமாகி வருகின்றன. டைமர் செட் செய்து விட்டால், அதுவே ஆன் ஆகி, சரியான பக்குவத்தில் சமைத்து முடித்துவிடும். சரியான கேட்ஜெட் பயன்பாடு நேரம், எரிபொருள் என எல்லாவற்றையும் மிச்சப்படுத்தும்.
மின்சார கெட்டில் (Electric Kettle)
குடிப்பதற்கு வென்னீர் வைப்பதற்கு மின்சார கெட்டில் எனப்படும் Electric Kettle-களை பயன்படுத்தலாம். இந்த மின் கெட்டில்களில் தண்ணீரை கொதிக்க வைத்து, பிளாஸ்க்-கில் ஊற்றி வைத்துக் கொண்டால், எப்போதும் சூடான தண்ணீர் கிடைக்கும். கேஸ் அடுப்பில் தண்ணீர் கொதிப்பதற்கு ஆகும் நேரத்தை விட, இந்த மின் கெட்டிலில் தண்ணீர் மிக மிக விரைவாக ஒரு நிமிடத்தில் கொதி நிலைக்கு வந்துவிடுகிறது. இதனால் எரிபொருள், நேரம் என அனைத்தும் சேமிக்க முடியும்.
குழந்தைகள் மற்றும் முதியோர் உள்ள வீடுகளில் இந்த கெட்டில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இப்போதைய சூழலில் அனைவர் வீட்டிலும் இந்த கெட்டில் இருப்பது மிகவும் அவசியமானது. இந்த விஷயங்களை ரெகுலராகவே பின்பற்றத் தொடங்கினால், வழக்கமாக 30 நாள்கள் வரும் சிலிண்டரை மேலும் 10 முதல் 15 நாள்கள் கூடுதலாக வரும்படி செய்யலாம்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்