
பாகற்காயைக்கூட இனிப்பாக மாற்றும் ஒரு பழம் உள்ளது தெரியுமா உங்களுக்கு.. ஆம், அதுதான் மிராக்கிள் ஃப்ரூட் ( Miracle Fruit) அதென்ன அதிசய பழம் என்கிறீர்களா...?
பெயரைப் போலவே அது அதிசய பழம்தான். இந்த பழத்தை சாப்பிட்ட அரை மணி நேரத்திற்கு நாவில் இனிப்பு சுவை மட்டுமே இருக்கும். அதாவது, இந்த பழத்தை சாப்பிட்ட பின் அரை மணி நேரத்திற்கு வேறு எதை சாப்பிட்டாலும், இனிப்பு சுவையாகத்தான் தெரியும்.
அவ்வளவு ஏன்? இந்த மிராக்கிள் ஃப்ரூட்டை சாப்பிட்ட பின் பாகற்காயை சாப்பிட்டாலும், இனிப்பாகத்தான் இருக்குமாம்.
எலுமிச்சை பழத்தை சாப்பிட்டால் கூட புளிப்பு சுவை தெரியாமல் இனிப்பு சுவையுடன் இருக்கும் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.. இதனால், இந்த மிராக்கிள் ஃப்ரூட்டை சாப்பிட்டுவிட்டு எலுமிச்சை பழத்தை முகம் சுளிக்காமல் சாப்பிட முடியுமாம்.
மிராக்கிள் ஃப்ரூட் தாவரத்தின் பூர்வீகம் மற்றும் பண்புகள்
இந்த அதிசயப் பழம், மேற்கு ஆப்பிரிக்காவை பூர்வீகமாகக் கொண்டது. இருந்த போதிலும், வெப்பம் அதிகம் உள்ள நாடுகளில் இது வளர்கிறது. இந்த பழம் 18-ஆம் நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த மரம் சுமார் 6 முதல் 14 அடி உயரம் வரை வளரக்கூடியது. இதன் இலைகள் 10 முதல் 15 சென்டிமீட்டர் நீளம் வரை இருக்கும். இலைகளின் பக்கவாட்டில் சிறிய வெள்ளை நிறப் பூக்கள் மலர்கின்றன. இந்த பூக்களே, காய்த்து, பின்னாளில் சிவந்த சதைப்பற்றுள்ள பழங்களாக பழுக்கின்றன.
பச்சை நிற இலைகளுக்கு மத்தியில் சிவப்பு நிறத்தில் நீள வாக்கில், பார்ப்பதற்கு கோவைப்பழம் போன்று காட்சி அளிக்கிறது இந்த மிராக்கிள் ஃப்ரூட்.
இந்த பழத்தின் உள்ளே நீள வாக்கில் பேரீச்சம்பழ கொட்டை போன்ற விதை உள்ளது. பழத்தில் உள்ள சதைப்பற்று பகுதிதான் இந்த அதிசய சுவையைத் தரக்கூடிய பகுதியாகும்.
சுவை மாறும் விதத்திற்கான காரணம்
இந்த பழத்தில், மிராக்குலின் எனும் புரதம் உள்ளது. உணவில் புளிப்புத் தன்மை அதிகமாக இருக்கும்போது, அதனுடன் இந்த மிராக்குலின் சேர்ந்து, நாக்கில் உள்ள சுவை மொட்டுகளுடன் இணைந்து, புளிப்பை இனிப்பாக உணரவைக்கிறது.
இதே போன்றுதான் கசப்பான உணவும், இனிப்பு சுவையை உணர வைக்கிறது.
இந்த பழத்தில் உள்ள மிராகுலின் மூலக்கூறு காரணமாகவே இந்த பழம் மிராக்கிள் ஃப்ரூட் என்று அழைக்கப்படுகிறது.
Miracle என்றால் அதிசயம் என்று பொருள் படுவது இந்த பழத்திற்கு இந்த பெயர் மிகவும் பொருத்தமாகவும், சிறப்பாகவும் அமைந்துள்ளது என்றுதான் சொல்ல வேண்டும்.
பழத்தின் பயன்கள்
இந்த பழத்தில், இனிப்பு சுவை இருந்தாலும், இதில் சர்க்கரை இல்லை என்பது மற்றுமொரு கூடுதல் சிறப்பு.
இதனால், இந்த பழத்தை சர்க்கரை நோயாளிகள், அதாவது நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள்கூட சர்க்கரைக்கு பதிலாக இந்த பழத்தை பயன்படுத்தலாம்.
அத்துடன் புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்கள்கூட இந்த பழத்தை உணவாக சாப்பிடலாம் என்று கூறப்படுகிறது.
பழத்தில் வைட்டமின் சி, வைட்டமின் கே உள்ளிட்ட சத்துக்கள் உள்ளன. இந்த பழம், உடல் பருமனைக் குறைக்கிறது.
இந்த பழம் முதலில் சாப்பிடும்போது புளிப்பான அமிலத்தன்மையுடன் இருக்கும். பிறகு இனிப்பது போன்று தோன்றும். பிறகு எதைச் சாப்பிட்டாலும் இனிப்பாகவே மாறிவிடுகிறது.
ஆப்பிரிக்காவில் இந்த பழத்தை மக்காச்சோள ரொட்டியில் சேர்த்து உணவு தயாரிக்கின்றனர். இதேபோன்று, புளிப்புசுவை கொண்ட மதுவை இனிப்பாக்குவதற்கும், ஆப்பிரிக்க மக்கள் இதனைப் பயன்படுத்துகின்றனர்.
சீனா, ஜப்பான், ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் உடலுக்குத் தீங்கு ஏற்படுத்தாத உணவுப் பட்டியலில் இந்த பழம் இடம்பெற்றிருப்பது கூடுதல் தகவல்.
இந்த பழத்தின் மரக் கன்றுகள் ஆன்லைனிலும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னை போன்ற வெயில் அதிகம் உள்ள நகரங்களிலும் இந்த மிராக்கிள் ஃபுரூட் அதிசய மரங்களை எளிதாக வீட்டிலேயே வளர்க்க முடியும்.
இந்த பழங்கள் அதிக அளவில் சந்தைக்கு வந்தால், சர்க்கரையின் தேவை குறைந்துவிடும் என்றுதான் சொல்ல வேண்டும்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.