வயது 35ஐ எட்டிவிட்டாலே, பலருக்கும் மனதில் எழும் முதல் கேள்வி, "உன்னிடம் என்ன சேமிப்பு இருக்கிறது"? என்பது தான். நடுத்தர குடும்பம் மற்றும் வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ள இளைஞர்களின் ஓய்வு காலம் என்பது இந்த டிஜிட்டல் யுகத்திலும் கடினமான ஒன்றாகத்தான் உள்ளது.
ஆனால் சிறு வயது முதலே நம்மிடம் இருந்துவரும் ஒரு பழக்கத்தை மீண்டும் உயிர்பித்தால் நிச்சயம் நடுத்தர குடும்பத்தை சேர்ந்த மக்களின் ஓய்வு காலமும் நிம்மதியான ஒன்றாக மாறும்.
சிறுசேமிப்பு
நிச்சயம் நம்மில் பலர் சிறு வயதில் பெரிய அளவில் உண்டியலில் பணம் சேர்த்துவைத்திருப்போம். ஆனால் நாம் வளர வளர அந்த ஒரு பழக்கத்தை கட்டாயம் நாம் மறந்திருப்போம். ஆனால் அந்த சிறுசேமிப்புகள் தான் டிஜிட்டல் உருவில் SIP என்ற பெயரில் வருகின்றது. SIP என்பது ஒரு சிறுசேமிப்பு முறைதானே தவிர வேறொன்றும் இல்லை.
SIP சேமிப்பு
Systematic Investment Plan என்பது தான் SIPயின் விரிவாக்கம் என்பது நாம் அறிந்ததே. ஆனால் 18 முதல் 25 வயதிற்குள் இதை செய்ய தொடங்கினால் மட்டுமே, நம்மால் நமது ஓய்வு காலத்திற்கு பெரிய அளவில் பணத்தை சேமிக்க முடியும். இது உண்மை தான், அப்படி என்றால் 30 வயதை கடந்து, தற்போது தனது 35 வயதில் பயணிக்கும் நபர்களால் தங்கள் ரிடயர்மெண்ட் காலத்திற்கு சேமிக்கவே முடியாதா?
முடியும்.. நிச்சயம் முடியும் என்பது தான் பதில்...
சரி அது எப்படி என்பதை ஒரு சில கணக்குளை கொண்டு இப்போது இந்த பதிவில் காணலாம்.
உங்கள் வயது இப்போது 35, உங்கள் ரிடயர்மெண்ட் காலம் 60 என்று வைத்துக்கொள்வோம். நீங்கள் நடுத்தரமான வருமானம் கொண்ட நபராக இருக்கின்றீர்கள் என்றால், நிச்சயம் உங்களால் மாதம் 3500 வரை சேமிக்க முடியும்.
மாதம் 3500
நீங்கள் மாதம் 3500 ரூபாயை உங்களது, 35 வயதில் சேமிக்க துவங்கினால், 60 வயதின் முடிவில், அதாவது உங்கள் ரிடயர்மெண்ட் காலத்தில் 10,50,000 ரூபாயை அசலாக சேமித்திருப்பீர்கள். அதற்கு 12 முதல் 13.5 வரை "வருவாய் விகிதம்" உள்ளது என்று வைத்துக்கொண்டால், உங்களுக்கு 75,00,000 ரூபாய் வரை கிடைக்கும். ஆனால் இன்னும் 10 ஆண்டுகளில் SIPஐ பொறுத்தவரை வருவாய் விகிதம் 14ஐ தாண்ட கூட வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.
ஆகவே 35 வயதுக்கு மேல் சேமிக்க முடியாது என்று நினைக்காமல், உங்கள் ஓய்வுக்காலத்திற்காக சரியாக திட்டமிட்டால் நிச்சயம் பெரிய லாபத்தை பெறலாம்.