தும்மல், மூக்கடைப்பு, மூக்கு ஒழுகுதல், தொடர் இருமல் போன்ற அலர்ஜி பிரச்சினைகள் ஏற்பட்டால் பலரும் உடனடியாக மாத்திரைகளை எடுத்துக்கொள்கிறார்கள். குறிப்பாக, குளிர்காலம் மற்றும் காற்று மாசு அதிகரிக்கும் காலங்களில் இந்தப் பிரச்சினைகள் அதிகமாகக் காணப்படுகின்றன. ஆரம்பத்தில் மருத்துவர் பரிந்துரைத்த மாத்திரைகளை எடுத்துக்கொண்டு அறிகுறிகள் குறைந்த பிறகும், மீண்டும் அலர்ஜி ஏற்படும்போது அதே மாத்திரைகளைத் தாங்களாகவே தொடர்ந்து பயன்படுத்தும் பழக்கம் பலரிடம் உள்ளது. ஆனால், இவ்வாறு அடிக்கடி அலர்ஜி மாத்திரைகளை எடுத்துக்கொள்வது எதிர்பாராத உடல்நலப் பாதிப்புகளை ஏற்படுத்தலாம் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
குறிப்பாக, மாண்டெலுகாஸ்ட் (Montelukast), லெவோசெட்ரிசின் (Levocetirizine) ஆகிய மருந்துகள் தனித்தனியாகவோ அல்லது ஒரே மாத்திரையாகவோ அலர்ஜி மற்றும் சுவாசப் பிரச்சினைகளுக்காகப் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றைத் தேவையில்லாமல் நீண்ட காலம் பயன்படுத்தும்போது சிலருக்கு நரம்பு மண்டலம் மற்றும் மனநலத்தைப் பாதிக்கும் பக்கவிளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
உதாரணமாக, டெல்லியைச் சேர்ந்த 40 வயது பெண் ஒருவருக்கு ஏற்பட்ட அனுபவம் குறிப்பிடப்பட்டுள்ளது. அவருக்கு அலர்ஜி காரணமாக இருமல் ஏற்பட்டதால் மருத்துவர் பரிந்துரைத்த மருந்துகளை எடுத்துக்கொண்டார். உடல்நிலை ஓரளவு சரியான நிலையில், குளிர்காலத்தில் டெல்லியில் காற்று மாசு அதிகரித்ததால் மீண்டும் இருமல் ஏற்பட்டது. இதையடுத்து, ஏற்கெனவே பயன்படுத்திய மாண்டெலுகாஸ்ட் மற்றும் லெவோசெட்ரிசின் கலந்த மாத்திரையைத் தொடர்ந்து இரண்டு மாதங்கள் எடுத்துக்கொண்டார். இந்தக் காலகட்டத்தில் அவருக்கு எரிச்சல் மற்றும் கோபம் அதிகரித்தது. ஆனால், அதை வேலைப்பளு மற்றும் குடும்பச் சூழல் காரணமாக ஏற்பட்ட மன அழுத்தம் என்று நினைத்தார். பின்னர் மருத்துவரைச் சந்தித்தபோது அந்த மருந்து நிறுத்தப்பட்டது. அப்போதுதான் அந்த மருந்தின் பக்கவிளைவுகள் குறித்து அவருக்குத் தெரியவந்தது.
மாண்டெலுகாஸ்ட் மருந்து தொடர்பாக அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (FDA) 2020ஆம் ஆண்டிலேயே மிக முக்கியமான எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த மருந்தைப் பயன்படுத்துபவர்களுக்குச் சில நேரங்களில் கடுமையான மனநலப் பாதிப்புகள் ஏற்படலாம் என்பதால், மருந்தின் அட்டையில் மிக முக்கியமான எச்சரிக்கையைச் சேர்க்க உத்தரவிடப்பட்டது. அதிகப்படியான கோபம், பதற்றம், மனச்சோர்வு, தூக்கமின்மை, பயத்தை ஏற்படுத்தும் கனவுகள், குழப்பம், நினைவாற்றல் பிரச்சினைகள் போன்றவை ஏற்படலாம். சிலருக்கு தற்கொலை எண்ணங்கள் கூட உருவாகியுள்ளதாகப் புகார்கள் பதிவாகியுள்ளன.
இந்தப் பக்கவிளைவுகள் ஏற்கெனவே மனநலப் பிரச்சினை உள்ளவர்களுக்கு மட்டுமே ஏற்படும் என்று நினைக்கக் கூடாது. அதற்கு முன்பு எந்தவிதமான மனநலப் பாதிப்பும் இல்லாதவர்களுக்கும் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, இந்த மருந்தைப் பயன்படுத்தும்போது தங்களுடைய மனநிலை மற்றும் தூக்கத்தில் ஏற்படும் மாற்றங்களைக் கவனிப்பது அவசியம்.
அதேபோல், லெவோசெட்ரிசின் போன்ற அலர்ஜி மாத்திரைகளையும் நீண்ட காலம் தொடர்ந்து பயன்படுத்துவதில் கவனம் தேவை. இந்த மருந்தை பல மாதங்கள் அல்லது ஆண்டுகளாக தினமும் எடுத்துக்கொண்டவர்கள் திடீரென நிறுத்தும்போது சிலருக்கு கடுமையான அரிப்பு ஏற்படலாம் என்று அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் 2025ஆம் ஆண்டு எச்சரித்துள்ளது. இந்தப் பிரச்சினை அரிதாக ஏற்பட்டாலும், சிலருக்கு மருத்துவ உதவி தேவைப்படும் அளவுக்கு பாதிப்பு ஏற்படலாம்.
அப்படியானால் அலர்ஜி மாத்திரைகளை முற்றிலும் தவிர்க்க வேண்டுமா என்ற கேள்வி எழலாம். அதற்கான பதில் இல்லை. இந்த மருந்துகள் சரியான முறையில் பயன்படுத்தப்படும்போது பலருக்கு நிவாரணம் அளிக்கின்றன. ஆனால், மருத்துவரின் ஆலோசனையின்றி ஒரே மருந்தைத் தொடர்ந்து எடுத்துக்கொள்வதுதான் ஆபத்தான பழக்கமாக மாறலாம். குறிப்பாக, மாண்டெலுகாஸ்ட் எடுத்துக்கொள்ளும்போது மனநிலையில் மாற்றங்கள், தூக்கப் பிரச்சினைகள் அல்லது தற்கொலை எண்ணங்கள் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரைத் தொடர்புகொண்டு மருந்து குறித்து ஆலோசனை பெற வேண்டும்.
அலர்ஜி அடிக்கடி ஏற்படுவதற்கான காரணத்தையும் கண்டறிவது முக்கியம். தூசி, மகரந்தம், செல்லப்பிராணிகளின் முடி, காற்று மாசு போன்றவை அலர்ஜியைத் தூண்டக்கூடும். எனவே, அறிகுறிகள் ஏற்பட்டவுடன் மாத்திரைகளை எடுத்துக்கொள்வதைவிட, அதற்கான காரணத்தைக் கண்டறிந்து உரிய சிகிச்சை பெறுவது நல்லது. சிறிய உடல்நலப் பிரச்சினைக்காக எடுத்துக்கொள்ளும் மாத்திரைகள்கூட தவறான முறையில் பயன்படுத்தப்பட்டால் எதிர்பாராத பாதிப்புகளை ஏற்படுத்தலாம் என்பதை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.