இந்தியாவில் வரும் ஏப்ரல் 1, 2026 முதல் தொழிலாளர் மற்றும் வரிச் சட்டங்களில் மிகப்பெரிய மாற்றங்கள் அமலுக்கு வரவுள்ளன. இது ஒவ்வொரு வேலைக்குச் செல்லும் இந்தியரின் நிதி நிலைமையிலும் நேரடித் தாக்கத்தை ஏற்படுத்தும். குறிப்பாக, உங்கள் சம்பளப் பட்டியல் (Pay Slip) இனி முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும். புதிய விதிகளின்படி, ஒரு ஊழியரின் அடிப்படைச் சம்பளம் (Basic Pay) மொத்த சம்பளத்தில் (CTC) குறைந்தது 50 சதவீதமாக இருக்க வேண்டும். இதுவரை பல நிறுவனங்கள் அடிப்படைச் சம்பளத்தைக் குறைவாக வைத்து, இதர படிகளை (Allowances) அதிகமாக வழங்கி வந்தன. இனி அந்த நடைமுறை முடிவுக்கு வருகிறது.
அடிப்படைச் சம்பளம் உயர்வதால், அதனுடன் கணக்கிடப்படும் பிஎஃப் (PF) மற்றும் கிராஜுவிட்டி (Gratuity) போன்ற பிடித்தங்களும் அதிகரிக்கும். இதன் விளைவாக, மாதந்தோறும் கையில் வாங்கும் சம்பளம் (Take-home Pay) சற்று குறைய வாய்ப்புள்ளது. இருப்பினும், நீண்ட கால அடிப்படையில் உங்கள் ஓய்வுக்கால சேமிப்பு கணிசமாக உயரும் என்பது ஒரு நல்ல செய்தியாகும். குறிப்பாக ஐடி, பிபிஓ மற்றும் ஹோட்டல் துறைகளில் வேலை பார்ப்பவர்களுக்கு இந்த மாற்றம் பெரிய அளவில் எதிரொலிக்கும்.
வேலையை விட்டு விலகும் ஊழியர்களுக்கு ஒரு மிகப்பெரிய நிம்மதியைத் தரும் விதியும் அமலுக்கு வருகிறது. முன்பு ஒரு ஊழியர் வேலையை விட்டு நின்றால், அவருடைய இறுதி நிலுவைத் தொகையை (Full and Final Settlement) பெற 30 முதல் 90 நாட்கள் வரை காத்திருக்க வேண்டியிருந்தது. ஆனால் புதிய விதியின்படி, வேலையை விட்டு விலகிய இரண்டு வேலை நாட்களுக்குள்ளேயே (2 Working Days) அனைத்து நிலுவைத் தொகையையும் நிறுவனம் செட்டில் செய்ய வேண்டும். இதில் தாமதம் ஏற்பட்டால், ஊழியர்கள் தொழிலாளர் துறையை அணுகி சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடியும்.
இந்தியாவின் 65 ஆண்டுகால வருமான வரிச் சட்டம் (1961) ஓய்வு பெற்று, அதற்குப் பதிலாக புதிய வருமான வரிச் சட்டம் (2025) ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வருகிறது. இந்த புதிய சட்டத்தில் வரி விகிதங்களிலோ அல்லது சலுகைகளிலோ பெரிய மாற்றங்கள் இல்லை. ஆனால், சட்டம் மிகவும் எளிமையான மொழியில் மாற்றப்பட்டுள்ளது. மேலும், இதுவரை குழப்பத்தை ஏற்படுத்தி வந்த 'அசஸ்மென்ட் இயர்' (Assessment Year) என்ற சொல் நீக்கப்பட்டு, இனி 'டேக்ஸ் இயர்' (Tax Year) என்ற ஒரே ஒரு பெயர் மட்டுமே பயன்படுத்தப்படும்.
வெளிநாட்டுப் பயணம் மற்றும் வெளிநாட்டுக் கல்விக்காகப் பணம் அனுப்புபவர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி உள்ளது. இதற்கு முன் வெளிநாட்டுச் சுற்றுலா பேக்கேஜ்களுக்கு 20 சதவீதம் வரை வசூலிக்கப்பட்டு வந்த வரி (TCS), இனி பிளாட் ரேட்டாக 2 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. அதேபோல், தங்கப் பத்திரங்களில் (SGB) முதலீடு செய்பவர்கள் கவனத்திற்கு - இனி ரிசர்வ் வங்கியிடம் நேரடியாக வாங்காமல், பங்குச் சந்தையில் (Secondary Market) வாங்கும் பத்திரங்களுக்குக் கிடைக்கும் லாபத்திற்கு வரி விதிக்கப்படும். மொத்தத்தில், இந்த ஏப்ரல் ரீசெட் உங்கள் பணப் பையில் சில மாற்றங்களைக் கொண்டு வரப்போகிறது என்பது உறுதி.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.