“நடு இரவில்.. பேய் அமுக்குவது போன்று தோன்றுகிறதா?” - பின்னால் இருக்கும் அறிவியல் உண்மை என்ன?

நிழல் உருவங்கள், வித்தியாசமான சத்தம் அல்லது யாரோ தங்களை கவனித்து கொண்டிருப்பது போன்ற
Sleep Paralysis
Published on
Updated on
2 min read

இரவு நேரத்தில் ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கும் போது திடீரென விழித்துக் கொள்கிறோம். அப்போது நம்மால் கை, கால் மற்றும் உடலை அசைக்க முடியாது. உதவிக்கு பேச முயன்றாலும் குரல் வராது. நெஞ்சின் மீது யாரோ அமர்ந்திருப்பது போல ஒரு அழுத்தம் உணரப்படும். சிலருக்கு அறையில் யாரோ நிற்பது போலவோ, அருகில் யாரோ நடமாடுவது போலவோ தோன்றும். இந்த அனுபவத்தை கிராமப்புறங்களில் பொதுவாக “பேய் அமுக்குவது” என்று கூறுவார்கள்.

ஆனால் மருத்துவ அறிவியல் இதற்கு முற்றிலும் வேறுபட்ட விளக்கத்தை அளிக்கிறது. இந்த நிகழ்வு “Sleep Paralysis” (தூக்க முடக்கம்) என்று அழைக்கப்படுகிறது. மனிதர்கள் தூங்கும் போது பல்வேறு நிலைகளைக் கடந்து செல்கிறார்கள். அவற்றில் முக்கியமானது REM (Rapid Eye Movement) தூக்கம். இந்த நிலையில்தான் அதிகமான மற்றும் ஆழ்ந்த கனவுகள் ஏற்படுகின்றன. நாம் கனவு காணும் போது, கனவில் நடக்கும் செயல்களை உடல் உண்மையில் செய்யாமல் இருக்க மூளை ஒரு பாதுகாப்பு நடவடிக்கையை மேற்கொள்ள முயற்சிக்கும் .

அதாவது, REM தூக்கத்தின் போது மூளை நமது தசைகளை தற்காலிகமாக செயலிழக்கச் செய்கிறது. இதை மருத்துவ ரீதியாக Muscle Atonia என்கிறார்கள். இதனால் தான் நாம் கனவில் ஓடுவது, குதிப்பது போன்று காட்சிகள் அல்லது சண்டை போடுவது போன்ற காட்சிகள் வரும்போது உடல் அசையாது.

ஆனால் சில நேரங்களில், இந்த செயன்முறையின் போது நமது உடலில் ஒரு சிறிய குழப்பம் ஏற்படுகிறது. மூளை விழித்துக் கொண்டாலும், உடல் இன்னும் REM தூக்க நிலையிலேயே இருக்கும், அதாவது தூக்க முடக்கம் எனும் ஆழ்ந்த நிலைக்கு செல்கிறது. இதனால் நமக்கு சுற்றியுள்ள சூழல் தெரிந்தாலும், உடலை அசைக்க முடியாத நிலை ஏற்படுகிறது. இதுவே “Sleep Paralysis”.

இந்த நிலையில் இருப்பவர்களுக்கு உடலின் மேல் பாரம் இருப்பது போன்ற உணர்வு ஏற்படலாம். சிலருக்கு அறையில் யாரோ இருப்பது போலவும் தோன்றலாம். நிழல் உருவங்கள், வித்தியாசமான சத்தம் அல்லது யாரோ தங்களை கவனித்து கொண்டிருப்பது போன்ற மாயத் தோற்றங்கள் இருப்பதாக தோன்றலாம். மருத்துவர்கள் இதை Hallucinations என்று குறிப்பிடுகின்றனர்.

தூக்க முடக்கம் பொதுவாக சில வினாடிகள் முதல் இரண்டு நிமிடங்கள் வரை மட்டுமே நீடிக்கும் என சொல்லப்படுகிறது. ஆனால் அந்த சில நிமிடங்கள் பலருக்கும் மிகவும் பயங்கரமான அனுபவமாக இருக்கும். அப்போது தூக்கக் குறைபாடு, அதிக மன அழுத்தம், பதட்டம் மற்றும் பயம் போன்ற மனநிலையை பாதிக்கும் காரணிகள் Sleep Paralysis ஏற்படும் வாய்ப்பை அதிகரிக்கிறது. குறிப்பாக மாணவர்கள், இரவு வேலை செய்பவர்கள் மற்றும் மன அழுத்தத்தில் இருப்பவர்கள் இந்த அனுபவத்தை அதிகமாக சந்திக்கக்கூடும் எனவும் சொல்லப்படுகிறது.

மருத்துவ நிபுணர்கள் கூறுவதாவது, பெரும்பாலான நேரங்களில் இது ஆபத்தான பிரச்சனை அல்ல. போதுமான தூக்கம், ஒழுங்கான தூக்க அட்டவணை, மன அழுத்தத்தை குறைக்கும் பழக்கங்கள் மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறை ஆகியவை இதைத் தவிர்க்க உதவும் என்று தெரிவிக்கிறார்கள்.

எனவே, “பேய் அமுக்குகிறது” என்று நம்பப்படும் இந்த அனுபவம், உண்மையில் ஒரு அமானுஷ்ய சம்பவம் அல்ல. அது நமது மூளை மற்றும் உடலின் தூக்கச் சுழற்சியில் ஏற்படும் தற்காலிக குழப்பம் மட்டுமே. அறிவியல் இதற்கான காரணத்தை தெளிவாக விளக்கி விட்ட நிலையில், இதுபோன்ற அனுபவங்கள் ஏற்பட்டால் பயப்படாமல், தூக்க பழக்கவழக்கங்களில் கவனம் செலுத்துவது சிறந்த தீர்வாகும்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com