மேல்பாதி கோவிலுக்கு சீல் வைத்த விவகாரம்; இரு தரப்பினரிடையே விசாரணை..!

மேல்பாதி கோவிலுக்கு சீல் வைக்கபட்ட விவகாரத்தில் இரு தரப்பினரிடையேயான விசாரனை விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
விழுப்புரம் மாவட்டம் கோலியனூர் அருகேயுள்ள மேல்பாதி கிராமத்தில் அமைந்துள்ள தர்மராஜா திரெளபதி அம்மன் கோவிலில் கடந்த ஏப்ரல் மாதத்தில் நடைபெற்ற பத்து நாள் திருவிழாவில் பட்டியலின மக்கள் கோவிலில் சாமி கும்பிட உள்ளே நுழைந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியினர் பட்டிலியனத்தை சார்ந்த 10 பேரைத் தாக்கினர்.
இச்சம்பவம் தொடர்பாக இரண்டு மாதங்களுக்கு மேலாக போராட்டத்தில் ஈடுபட்டதை அடுத்து இரு தரப்பினரையும் மாவட்ட ஆட்சியர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் 8 முறை பேச்சுவார்த்தை நடத்தியும் தோல்வியில் முடிந்தது.
இதனையடுத்து கடந்த 7 ஆம் தேதி வருவாய் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன் கோவிலுக்கு சீல் வைத்து 80 நபர்களுக்கு நேரில் சம்மன் வழங்கினார். தற்போது அந்த பகுதியில் பெரும் பதற்றமான சூழ்நிலை காணப்பட்டதால் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து கிராமத்திற்கு 145 உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறிருக்க, இன்று இரு தரப்பினரும் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் எழுத்து பூர்வமாக பதிலளிக்க உத்தரவிடப்பட்டது. அந்த உத்தரவின் பேரில் இருதரப்பினரும் விழுப்புரம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஆஜராகியுள்ளனர்.
மேலும், இவ்விவகாரத்தில் பட்டியலின மக்கள் தரப்பினர் 38, வன்னியர் தரப்பினர் 42 பேர் மீதும் வழக்கு பதிவு செய்யபட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த கூட்டத்தில் வருவாய் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன் மற்றும் டிஎஸ்பி சுரேஷ் தாசில்தார் வேல்முருகன் வளவனூர் காவல் ஆய்வாளர் பாலமுருகன் உள்ளிட்டோர் இருந்தனர்.
இதையும் படிக்க | ஒடிசா ரயில் விபத்து எதிரொலி; செல்போன் மற்றும் ஸ்மார்ட் வாட்ச் பயன்படுத்த தடை!