நடிப்பின் இமயம் சிவாஜி கணேசனின் நினைவு நாள் இன்று!

நடிப்பின் இமயம் சிவாஜி கணேசனின் நினைவு நாள் இன்று!
Published on
Updated on
2 min read

திரையுலகில் நடிப்பு என்ற ஒன்றுக்கு, இலக்கணம் படைத்த நடிப்பின் இமயம் சிவாஜி நடிகர் கணேசனின் நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது.

1928-ம் ஆண்டு அக்டோபர் 1-ம் தேதி சின்னய்யா மன்றாயருக்கு பிறந்த வி.சி. கணேசனுக்கு, பெரியார் வாயிலாக அமைந்தது இந்த பெயர். சிவாஜி கண்ட இந்து ராஜ்ஜியம் என்ற நாடகத்தில் அற்புதமாக நடித்த கணேசனை, நேரில் பார்த்து வியந்த பெரியார், சிவாஜி கணேசன் என பெயரிட்டு புதிய கவுரவம் வழங்கினார். 

நடிப்பை ஒரு தொழிலாக இல்லாமல் தவமாக  உயிர் மூச்சாக ஏற்றுக் கொண்டு மதித்து போற்றியவர் தான் சிவாஜி கணேசன். பராசக்தி எனும் படம் வருவது வரையிலும், சினிமா என்பது இவ்வளவுதான் என்று எண்ணம் கொண்டிருந்தவர்களை பிரமிப்படைய செய்தது. கலைஞர் கருணாநிதியின் எழுத்தில் உருவான வசனங்கள், ரசிகர்களின் இதயங்களில் ஆழமாக இறங்கி புது ரத்தம் பாய்ச்சின. 

பராசக்தியில் அவ்வளவு நீளமான வசனங்களைப் பேசி நடித்த ஒரு புதுமுக நடிகனைப் பார்த்து அதிசயிக்காதவர்களும், அதன்பின்பு, அவரைப் பற்றி பேசாதவர்களே இல்லை எனலாம். சொல்லப்போனால், அதுவரை குறைவாக இருந்த நடிப்புக்கான அளவுகோலை, சிவாஜி எனும் மனிதன் வந்து அதிகமாக்கி விட்டுச் சென்றார். 

சிவாஜி கணேசனுக்கு பிறகுதான் புதுவெள்ளம் ஒன்று தமிழ் ரசிகர்கள் நெஞ்சில் பாயத் தொடங்கியது. நமநமத்துக் கிடந்த தமிழ்த்திரையுலகம் சிவாஜியின் வருகைக்கு பின்னர் கர்ஜித்து எழுந்து ஓடத் தொடங்கியது. திரையுலகில் சிவாஜிக்கு இணையானதொரு நடிப்பை இதுவரை எவருமே வழங்கவில்லை என்பது தான் அவரது சரித்திரப் பக்கத்தின் அழிக்க முடியாத எழுத்தாகும். 

தென்னிந்திய மொழிகளில் 300-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்த நடிப்பின் இமயம் செவாலியே சிவாஜி இல்லையென்றால் நடிப்பிற்கான இலக்கணமே இங்கு வகுக்கப்படாமலேயே இருந்திருக்கலாம். அதோடு எத்தனையோ தலைவர்கள், ஏன், கடவுள்களின் உருவமே தெரியாமல் இருந்திருக்கலாம். 

வீரபாண்டிய கட்டபொம்மன், வ.உ.சிதம்பரனார், சுப்பிரமணியபாரதி, சிக்கல் சண்முக சுந்தரம் போன்ற பிரபலங்களுக்கு உருவம் கொடுத்தார். அதோடு சிவன், விஷ்ணு, கர்ணன், திருநாவுக்கரசர் போன்ற அவதாரங்களுக்கே வடிவம் அளித்தார் சிவாஜி. 

74 வயது வரை நடிப்பையே சுவாசித்து வந்த செவாலியே சிவாஜி கணேசன் தன் சுவாசத்தை நிறுத்திக் கொண்ட நாள் இன்று. திரையுலகில் கலைத்தாய் பெற்றெடுத்த தவப்புதல்வன் சிவாஜி கணேசனின் 22-வது நினைவு நாளான இன்று அவருக்கு புகழஞ்சலியை திரையுலகம் செலுத்தி வருகிறது. 

கருப்பு வெள்ளை காலம் தொடங்கி, எத்தனையோ மாற்றங்களை கண்ட சிவாஜி கணேசன் இன்றைய தலைமுறை ரசிகர்களையும், திரையரங்குகளையும் வாழ வைத்து இன்றும் ஆட்சி செலுத்தி வருகிறார். அதற்கு திரையரங்குகளில் ஓடும் வசந்த மாளிகை படமே சாட்சி.

திரையில் சிவாஜியின் கண்கள் நடித்தது, கண்ணங்கள் நடித்தது, தலைமுடி கூட நடித்தது, நாடி நரம்பில் நடிப்பு வெறி ஊறிப்போன ஒரே நடிகராக தன் அபார நடிப்பினால் அசரடித்த சிவாஜி கணேசன் இன்றைய தலைமுறை நடிகர்களுக்கும் விடிவெள்ளியாக திகழ்ந்து வருகிறார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com