சுங்கச்சாவடி ஊழியரை தாக்கிய ஒய்.எஸ்.ஆர் கட்சி தொண்டர்கள்....

பணம் செலுத்த கோரிய சுங்கச்சாவடி ஊழியரை, ஒய்.எஸ்.ஆர் கட்சி தொண்டர்கள் தாக்கும் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
சுங்கச்சாவடி ஊழியரை தாக்கிய ஒய்.எஸ்.ஆர் கட்சி தொண்டர்கள்....
Published on
Updated on
1 min read

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள வேம்பாடு சுங்கச்சாவடி வழியாக நக்கபள்ளி கிராமத்தைச் சேர்ந்த ஆந்திர ஆளும் கட்சியான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் நேற்று காரில் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது வழியில் இருக்கும் வேம்பாடு சுங்கச்சாவடியை அடைந்த அவர்கள், சுங்க கட்டணம் செலுத்தாமல் செல்ல முயன்றதாக கூறப்படுகிறது. அப்போது அங்கு பணியில் இருந்த ஊழியர்கள் உரிய கட்டணத்தை செலுத்தி செல்லமாறு அவர்களிடம் அறிவுறுத்தினர்.

அதற்கு ஆளுங்கட்சியை சேர்ந்த எங்களிடமே பணம் கேட்கிறாயா என்று கூறி அராஜகத்தில் ஈடுபட்ட அவர்கள் அங்கிருந்த பொருட்களை அடித்து உடைத்தனர். மேலும் பணியில் இருந்த ஊழியர்களையும் தாக்கினர். ஒய். எஸ். ஆர் காங்கிரஸ் கட்சியினர் நடத்திய தாக்குதலில் அங்கு பணியில் இருந்த ஊழியர்களில் ஒருவர் படுகாயமடைந்து அருகில் உள்ள மருத்துவமனையில் தற்போது ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த சம்பவம் பற்றி சுங்கச்சாவடி நிர்வாகத்தினர் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த நக்கபள்ளி போலீசார், சம்பவம் நடந்த இடத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவாகி இருக்கும் காட்சிகள் அடிப்படையில் ஊழியர்களை தாக்கிய ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சி தொண்டர்களை கைது செய்யும் முயற்சியில்  ஈடுபட்டுள்ளனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com