ஊழியர்களுக்கான வருங்கால வைப்பு நிதியான EPF புதிய திட்டம்.. மற்றும் டிஜிட்டல் வசதிகள்!

ஒருவர் ஒரு லட்சம் ரூபாய் மாத ஊதியம் பெற்றாலும், அவர்களுக்கும் கட்டாய பங்களிப்பாக 1,800 ரூபாய்...
EPFO
EPFO
Published on
Updated on
2 min read

EPF (Employees' Provident Fund) திட்டம் 1952'-ஐ, 70 ஆண்டுகளுக்குப் மாற்றி அமைத்து, EPF திட்டம் 2026'-ஐ அறிவித்துள்ளது மத்திய அரசு. அந்த வகையில், EPFO (Employees' Provident Fund Organisation) 3.0 திட்டத்தின் மூலம் பல்வேறு புதிய விதிமுறைகள் மற்றும் நவீன செயல்பாடுகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

வருங்கால வைப்பு நிதி (Provident Fund - PF)

வருங்கால வைப்பு நிதி என்பது அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு நீண்டகால ஓய்வூதிய மற்றும் சேமிப்புத் திட்டமாகும். இதில் ஊழியர் மற்றும் அவரது நிறுவனம் இருவரும் மாதந்தோறும் ஒரு குறிப்பிட்ட தொகையைச் சேமிக்கின்றனர். இந்தச் சேமிப்புத் தொகைக்கு அரசாங்கம் ஒரு குறிப்பிட்ட வட்டி விகிதத்தையும் வழங்குகிறது.

ஊழியர் வருங்கால வைப்பு நிதி (EPF):

மாதச்சம்பளம் பெறும் ஊழியர்களுக்காக ஊழியரின் அடிப்படை சம்பளம் (Basic Salary) மற்றும் அகவிலைப்படியில் (DA) இருந்து 12 சதவீதம் பிடித்தம் செய்யப்படும். அந்நிறுவனமும், அதே அளவுக்கு பங்களிப்பு செய்கிறது. இதில் ஒரு பகுதி ஓய்வூதிய திட்டமான EPF-க்கு செல்கிறது. ஆனால் இந்த புதிய திட்டத்தின் மூலம், PF-ல் ஊழியர்களின் கட்டாய பங்களிப்பு 1,800 ரூபாயாக மட்டுமே இருக்கும் என்றும், அதற்கு அதிகமாக பணம் பிடித்தம் செய்வது ஊழியர்களின் சொந்த விருப்பத்தின் அடிப்படையிலேயே இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய EPF விதிகளின்படி, ஒருவரின் குறைந்த பட்ச ஊதியம், மாதம் 15 ஆயிரம் ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த தொகைக்கு 12 சதவீதமாக, 1,800 ரூபாய் பிடித்தம் செய்யப்படுகிறது. இந்த முறையே அனைவருக்கும் பொறுந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது ஒருவர் ஒரு லட்சம் ரூபாய் மாத ஊதியம் பெற்றாலும், அவர்களுக்கும் கட்டாய பங்களிப்பாக 1,800 ரூபாய் மட்டுமே பிடித்தம் செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

EPF-ல் கூடுதலாக பணம் பிடித்த செய்ய வேண்டும் என்று விரும்பும் ஊரியர்கள், தங்களின் சொந்த விருப்பத்தின் அடிப்படையிலேயே கூடுதல் தொகையை செலுத்தலாம் என்றும், அவ்வாறு செலுத்தப்படும் கூடுதல் தொகைக்கு இணையான தொகையை நிர்வாகம் செலுத்த வேண்டிய கட்டாயம் இல்லை என்றும், நிறுவனங்கள் விரும்பினால் மட்டுமே கூடுதல் தொகைக்கு இணையான தொகையை செலுத்தலாம் என்றும், தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கூடுதல் தொகையினை ஊழியர்களும் நிறுவனங்களும் எப்போது வேண்டுமானாலும் குறைத்துக் கொள்ளவோ, அல்லது நிறுத்திக் கொள்ளவோ முழு சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அனைத்து ஊழியர்களின் கட்டாய PF பிடித்தம் தொகை 1,800 ரூபாய் மட்டுமே என்பதை தெளிவு படுத்தியுள்ளது.

உடனடியாக பணம் பெறும் வசதி:

இனி சந்தாதாரர்கள் தங்களின் PF பணத்தை UPI மூலமாகவும், பிரத்யேக ATM கார்டுகள் மூலமாகவும் நொடிகளில் எடுத்துக் கொள்ளும் புதிய முறையை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முழு ஓய்வூதியத் தொகைக்கு முன்பாக, குழந்தைகளின் படிப்பு, திருமணம், மருத்துவச் செலவு மற்றும் வீடு வாங்குதல் போன்ற தேவைகளுக்கு முன்கூட்டியே பணம் எடுத்துக் கொள்ளும் வசதி இந்த திட்டத்தில் உள்ளது.

ஆனால், EPF-ல் இருந்து முன்பணம் எடுப்பதற்கு, 13 பிரிவுகள் உள்ளன. ஆனால் தற்போது, அது, 3 முக்கியன பிரிவுகளாக குறைக்கப்பட்டுள்ளது. EPF முன்பணத்தை பெறுவதற்கு 7 முதல் 10 நாட்கள் வரை காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. ஆனால் தற்போது, புதிய டிஜிட்டல் முறை மற்றும் ஆட்டோ-கிளெய்ம் வசதிகள் மூலம் உடனடியாக, பணத்தை பெற்றுக் கொள்ள முடியும். இந்த புதிய திட்டத்தின் மூலம், பணம் தேவைப்படும்போது உடனடியாக, நிறுவன முதலாளிகளின் ஒப்புதல் இன்றி, காகிதம் இல்லா முறைப்படி வங்கி கணக்கில், பணத்தை மாற்றிக் கொள்ளலாம்.

பணம் எடுக்கும் வரம்பு:

அவசரத் தேவைகளுக்காக, உங்களின் மொத்த PF தொகையில் 50 முதல் 75 சதவீதம் வரையிலான பணத்தை மட்டுமே UPI அல்லது ATM மூலமாக எடுக்க முடியும். இதனால் மொத்த தொகையில் குறைந்தபட்சம் 25 சதவீத பணம் கணக்கில் அப்படியே இருக்கும் வகையில் கட்டாயமாகத் தக்கவைக்கப்படுகிறது. முழுப் பணத்தையும் எடுக்க முடியாது. தொழிலாளர்களின் ஓய்வூதிய கால பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு இந்த வரம்பு முறை செயல்படுத்தப்படுகிறது.

பாதுகாப்பான பரிவர்த்தனை:

NPCI (National Payments Corporation of India) உடன் இணைந்து உருவாக்கப்பட்டுள்ள இந்த முறைக்கு ஆதார் அடிப்படையிலான ஓடிபி அல்லது பயோமெட்ரிக் சரிபார்ப்பு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் நல்ல திட்டம்தான் என்றாலும், வருங்கால வைப்பு நிதியை, அத்தியாவசியத் தேவைக்காக மட்டுமே எடுத்து பயன்படுத்த வேண்டும், கிடைக்கிறதே என்பதற்காக எடுத்து பயன்படுத்தினால், நம் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com