முதலீடுகளை ஈர்க்கும் வகையில் ஜப்பான் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒசாகாவில் உள்ள கோமாட்சு நிறுவனம் மற்றும் ஒசாகா கோட்டையை பார்வையிட்டார்.
ஜப்பான் நாட்டின் ஒசாகாவில் அமைந்துள்ள கோமாட்சு நிறுவனத்தின் உற்பத்தி தொழிற்சாலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு, அந்நிறுவனத்தின் உயர் அலுவலர்களுடன் கலந்துரையாடினார். ஜப்பான் என்றாலே புதுமையும் கண்டுபிடிப்புகளும் தான் என்றும் பணிகளை எளிமையாகவும் பாதுகாப்பாகவும் செய்து முடித்திடும் கருவிகளை உற்பத்தி செய்யும் நூற்றாண்டு பழமையான இந்நிறுவனத்தின் ஒசாகா தொழிற்சாலையைப் பார்வையிட்டாக முதலமைச்சர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
இதையடுத்து ஒசாகாவில் 16-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட உலகப் புகழ்பெற்றதும், பழம்பெரும் கோட்டையுமான ஒசாகா கோட்டைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்று பார்வையிட்டார். இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், ஒசாகா மாகாணத்தின் துணை ஆளுநர் நோபுஹிகோ யமாகுஜி, ஓசாகா கோட்டையின் சிறப்பைப் பற்றி எடுத்துக்கூறி அதனை பார்வையிடுமாறு அழைப்பு விடுத்தார். அவரது அழைப்பினையேற்று, முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் பார்வையிட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது
பின்னர் ஒசாகாவில் வாழும் தமிழர்கள் உள்ளிட்ட இந்திய வம்சாவளியினரின் கலாச்சார சந்திப்பு நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு, ஜப்பான் நாட்டின் முதல் பரதநாட்டிய கலைஞரான அகிமி சகுராய்க்கு சால்வை அணிவித்து, நினைவுப் பரிசு வழங்கி சிறப்பித்தார்.