சந்திராயன் - 3 குறித்து மாணவர்களுக்கு படிப்பினை ஏற்படுத்த சென்னை மாநகராட்சி ஏற்பாடு..!

சந்திராயன் - 3 குறித்து மாணவர்களுக்கு படிப்பினை ஏற்படுத்த சென்னை மாநகராட்சி ஏற்பாடு..!

சந்திரயான் 3ன்  வெற்றி உலக அளவில்  கொண்டாடப்பட்டு வரும் நிலையில் அரசு  பள்ளி மாணவர்களுக்கு  சந்திரயான் குறித்தான படிப்பினையை ஏற்படுத்த சென்னை மாநகராட்சி முன் வந்துள்ளது.

ஏ.பி.ஜெ அப்துகலாமின் பிறந்தநாளையொட்டி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சென்னை மாநகராட்சி மற்றும்  தனியார் அமைப்புகள் இணைந்து  மாநகராட்சி பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு சந்திராயன் குறித்தும் வானியல் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. 

இந்த கண்காட்சியில் சந்திரயான் - 3 விண்கலத்தில் மிக முக்கிய பங்காற்றி வரும் லேண்டர் மற்றும்  ரோவர் போன்றவற்றின் செயல்திறன் குறித்து மாணவர்கள் தெரிந்துகொள்ள அது தொடர்பான மாதிரி இந்த கண்காட்சியில் இடம்பெற்றுள்ளது.

மிக பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ள லேண்டர் கருவியின் மூலம் விண்ணில் அதன் முக்கிய பங்கு குறித்து மாணவர்களுக்கு விளக்கப்பட்டது . லேண்டர் எவ்வாறு நிலவில் தரையிறங்கியது,.. அதிலிருந்து ரோவர் எவ்வாறு பிரிந்து சென்றது,.. தற்போது அதன் பணிகள் என்ன  போன்றவற்றை செய்முறை விளக்கமாக மாணவர்களுக்கு பயிற்றுவிக்கப்பட்டது. 

”சந்திரயானில் சந்திரயான் வரலாறு” என்ற தலைப்பின் கீழ் மாணவர்களுக்கு சந்திரயான் குறித்தான விழிப்புணர்வு  ஏற்படுத்தப்பட்டது. நிலவில் லேண்டர் தரையிறங்கும் போது எவ்வாறு அதிர்வுகள் உணரப்பட்டன எவ்வாறு சத்தம் கேட்கப்பட்டது.  இதற்கான காரணம் என்ன என்பது குறித்து மாணவர்களுக்கு எளியவடியில் செயல்முறை விளக்கங்கள் அளிக்கப்பட்டன. பிர்லா கோளரங்கில் வானியல் நிகழ்வுகளை பார்த்து அடையும் பிரம்மிப்புகளை இந்த கண்காட்சி ஈடுசெய்கிறது. சந்திரயான் குறித்து இதுவரை தெரியாததையும் கண்காட்சியின் மூலம் தெரிந்துகொண்டதாக மாணவிகள் தெரிவித்தனர். 

சந்திரயான் 3 விண்கலம் தங்களுக்கு மிகப்பெரிய உத்வேகத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும்  2028-ம் ஆண்டு விண்ணில் செலுத்தப்படவுள்ள சந்திரயான் 4 திட்டப்பணிகளில் தங்களின் பங்களிப்பு உறுதியாக இருக்கும் என்றும் மாணவிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

சந்திரயான் 3 வெற்றி பயணத்தில் தமிழகத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் பலரது பங்களிப்பை பார்க்கும்போது தங்களுக்கு எதிர்காலத்தில் விஞ்ஞானிகள் ஆக வேண்டும் என்ற ஊக்கம் பிறந்துள்ளதாக மாணவர்கள் புத்துணர்ச்சியுடன் தெரிவித்தனர். இதன் மூலம் அப்துல்கலாமின் கனவை நினைவாக்க மாணவர்கள் சிந்திக்க  தொடங்கிவிட்டனர் என்பது  கண்கூடாக தெரிகிறது. 

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com