கலைஞர் கருணாநிதி பற்றி மாநில அளவிலான பேச்சு போட்டி தொடக்கம்!

தமிழ்நாடு சட்டமன்ற பேரவை சார்பில் சட்டமன்ற நாயகர் கருணாநிதி என்ற தலைப்பில் பள்ளி கல்லூரி மாணவ மாணவியர்களுக்கு மாநில அளவிலான பேச்சு போட்டி தொடங்கப்பட்டது.

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள லயோலா கல்லூரியில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை செயலகம் சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சட்டமன்ற நாயகர் கருணாநிதி என்ற தலைப்பில் மாநில அளவிலான பள்ளி கல்லூரி மாணவ மாணவியர்களுக்கு பேச்சுப்போட்டி தொடங்கப்பட்டுள்ளது. இதற்காக, மாவட்டம் தோறும் போட்டிகள் நடைபெற்று மாவட்டத்திற்கு மூன்று பேர் தேர்வு செய்யப்பட்டு சென்னையில் இறுதிப்போட்டி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

மாவட்ட அளவில் தேர்வாகும் மூன்று நபர்களில் முதல் பரிசு பெறுபவர்களுக்கு ரூபாய் 3000 இரண்டாம் பரிசு பெறுவதற்கு 2000 மூன்றாம் பரிசு பெறுவோருக்கு 1000 ரூபாய் பரிசுத் தொகையும் சான்றிதழ்களும் வழங்கப்பட உள்ளது.

இந்நிகழ்வில் பேசிய சிறுபான்மை நல ஆணையத் தலைவர் பீட்டர் அல்போன்ஸ், பல துறைகளுக்கு செல்ல நினைக்கும் மாணவர்கள் சட்டமன்றத்துக்கும் செல்ல திட்டமிட வேண்டும். கருணாநிதியின் சட்டமன்ற நினைவுகளை மாணவர்கள் தெரிந்து கொண்டால் அதன் விருப்பம் அதிகரிக்கும் என்றார்.

மேலும் தாம் சட்டமன்ற உறுப்பினராக செல்ல வேண்டும் என கல்லூரி நாட்களில் விரும்பியதாகவும் மத்திய அரசின் முதுநிலை மருத்துவ நுழைவுத் தேர்வு வேண்டாம் என முதலில் குரல் கொடுத்தவர் கருணாநிதி. இன்று அதில் மாற்றம் வந்து இருக்கிறது என்றும் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய தமிழ்நாடு சட்டமன்ற பேரவை தலைவர் அப்பாவு, வாழ்நாள் முழுவதும் சட்டமன்ற உறுப்பினராக இருந்து மறைந்தவர் கருணாநிதி. பெண்களுக்கு சொத்தில் உரிமை, பலர் பட்டதாரிகளாக மாறி இருப்பதற்கும், தமிழகத்தில் பட்டம் பெற்றவர்கள் சதவீதம் 51ஆக இருக்க கருணாநிதி தான் முதன்மை காரணம் என தெரிவித்த அவர், சந்திராயன், இஸ்ரோவில் இருக்கும் தமிழர்கள் இன்று சாதித்தற்கு பெருமை திராவிட மாடல் ஆட்சிதான் எனவும் சமச்சீர் கல்வியும், சாமானிய மக்களுக்கும் கல்வி என்ற கருணாநிதியின் இலக்கு தான் காரணம் எனக் கூறினார். 

மேலும், சமூகநீதிக்கு முதல் புள்ளி தமிழகம் வைத்து இருக்கிறது என்றும் ஜாதி, மதம் தவிர்த்து தமிழர், இந்தியன் என மாணவர்கள் பயணிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற துணை சபாநாயகர் பிச்சாண்டி,தலைமை கொறடா கோவி செழியன், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் லயோலா கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர்.

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com