சிறிது மழைக்கே சாலையில் வெள்ளம்... காரணம் இதுதான்..!

ஒவ்வொரு மழைத்துளியும் உயிர் துளி என்பதை நினைவில் கொள்ள வேண்டும்...
flood in road
flood in road
Published on
Updated on
2 min read

தமிழ்நாட்டிற்கு அதிக மழை பொழிவை தருவது வடகிழக்கு பருவ மழைதான். இந்த வடகிழக்கு பருவ மழை காலங்களில் பெய்யும் மழை நீர் தான் அடுத்து வரும் கோடை காலத்திற்கு குடிநீராகவும் மற்ற தேவைகளுக்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

ஆனால் இந்த பருவ மழை காலத்தில் கிடைக்கும் மழை நீரை முறையாக சேமித்து வைக்க அணைகளோ தடுப்பணைகளோ கட்டப்படவில்லை என்ற குற்றச்சாட்டுகள் தொடர்ந்து எழுந்த வண்ணம் உள்ளன.

சரிதான் மற்ற மாநிலங்களோடு ஒப்பிட்டுப் பார்க்கும் போது தமிழ்நாட்டில் அதிக எண்ணிக்கையில் அணைகளோ தடுப்பணைகளோ இல்லை என்பதுதான் நிதர்சனம்.

ஆனால் அதற்காக, அரசையும் அரசு அதிகாரிகளையும் குறை கூறிக் கொண்டிருக்கும் நாம் நம்முடைய கடமையை சரியாக செய்துள்ளோமா என்றால் அது மிகப் பெரிய கேள்விக்குறியே.

அணை கட்டுவது தடுப்பணை கட்டுவது நீரைத் தேக்குவது குளத்தை வெட்டுவது இப்படி நீர்நிலைகளை உருவாக்குவதும் நீர் நிலைகளை பாதுகாப்பதும் அரசின் கடமை தானே இதில் நமக்கு என்ன பங்கு உண்டு என்று கேட்கிறீர்களா...?

ஆம் நிச்சயம் நமக்கு பங்கு உண்டு பொதுமக்களின் பங்களிப்பு இல்லாமல் எந்த செயல் திட்டமும் வெற்றியடைவதில்லை.

தமிழ்நாட்டில் தண்ணீர் பஞ்சம் தலை விரித்து ஆடிய போது, மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, மழைநீர் சேகரிப்பு திட்டத்தை கொண்டுவந்து, அதனை முறைப்படுத்தி பொதுமக்கள் அனைவரும் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

ஒவ்வொரு வீட்டிற்கும் மழைநீர் சேகரிப்பு திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்றும் அவ்வாறு திட்டத்தை செயல்படுத்தவில்லை என்றால் மின் இணைப்பு துண்டிக்கப்படும், ரேஷன் பொருட்கள், வழங்கப்படாது போன்ற எச்சரிக்கைகளையும் கொடுத்தார்.

அதன்படி மாடி வீடு, ஓட்டு வீடு என்று எந்த வகையிலான வீடுகளாக இருந்தாலும் அதில் கட்டாயம் மழைநீர் சேகரிப்பு திட்டம் செயல் படுத்தப்பட வேண்டும் என்ற நிலையை ஏற்படுத்தினார். அதன் மூலம் ஒவ்வொரு வீடுகளிலும் இருந்தும் வெளியேறும் மழை நீர் கணிசமாக சேகரிக்கப்பட்டது.

இவ்வாறு சேகரிக்கப்படும் மழை நீர் நிலத்திற்குள் செலுத்தப்பட்டு நிலத்தடி நீர்மட்டம் உயர வழி வகுத்தது.

ஆனால் தற்பொழுது அந்த தொலைநோக்கு திட்டம் இருப்பதாகவே தெரியவில்லை. பொது மக்களின் வீடுகளில் மட்டுமல்ல அரசு அலுவலகங்களில் கூட இந்த திட்டம் செயல்படுத்தப்படுவதில்லை என்பதுதான் வேதனைக்குறிய உண்மை. "அதனால் என்ன? இப்பொழுது குடிநீர் பஞ்சமா ஏற்பட்டு விட்டது" என்று நினைத்தால் அதைவிட முட்டாள் தனம் வேறு ஒன்றும் இல்லை.

அரை மணி நேரம் மட்டுமே மழை பெய்தாலும் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதற்குக் காரணம் மழை நீர் வடிகால் வசதி இல்லை என்று எளிதாக கூறிவிடுகின்றனர். ஆனால் உண்மையில், மழை நீர் வடிகால் என்பது, நிலம் தனக்குத் தேவையான நீரை உறிஞ்சி கொண்டு மீதமுள்ள நீரை வடிகால் செய்வதற்கே பயன்படுத்தப்பட வேண்டும்.

ஆனால் தற்பொழுது மழைநீர் நிலத்திற்குள் செல்லாமல், மொத்த நீரும் கால்வாய்களில் சென்று வீணாக கடலில் கலக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.அவ்வாறு செல்லும் நீரும் முறையாக கடலில் சென்று கலக்கிறதா என்றால் அதுவும் இல்லை அத்தனை மழை நீரும் குடியிருப்பு பகுதிகளுக்குள் தேங்கி பொது மக்களையும் வாகன ஓட்டிகளையும் பாடாய்படுத்தி வருகிறது.

ஏன் இந்த நிலை இதற்கு யார் காரணம் என்று சிந்திக்க வேண்டிய தருணம்இது. எல்லாவற்றிற்கும் அரசை குறை சொல்ல முடியாது. இதற்கு நாமும் ஒரு முக்கிய காரணம் தான். எப்படி என்ற கேள்வி எழுப்புகிறவர்கள் மழை நேரத்தில் உங்கள் வீடுகளில் இருந்து, எவ்வளவு நீர் வீணாக வெளியேறி சாலையில் அல்லது தெருக்களில் பாய்கிறது என்பதை மட்டும் ஆராய்ந்து பாருங்கள்.

நம் வீட்டின் மொட்டை மாடிகளிலும், ஓடுகளிலும் தேங்கும் மொத்த நீரையும் தெருக்களில் வெளியேற்றி விடுகிறோம். இந்த நீர் மொத்தமாய் சாலைக்கு சென்று மழை நீர் வடிகால்வாயில் சேறுகிறது. அத்தனை நீரும் கால்வாயில் செல்ல முடியாமல் தான், சாலைகளிலும், தாழ்வான பகுதிகளிலும் பாய்கிறது. இதனால் தான் சிறிய மழைக்கு கூட தாக்கு பிடிக்க முடியாமல், சாலைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

அதே நேரம் நமது குடியிருப்புகளில் நிலத்தடி நீர்மட்டம் அதாள பாதாளத்துக்கு சென்று கொண்டிருப்பதும் இதனால்தான்.

ஒவ்வொரு வீடுகளிலும் மழை நீர் சேகரிக்கப்பட்டால் சாலைகளிலும் தெருக்களிலும் எத்தனை மழைநீர் தேங்காது அதுமட்டுமின்றி நிலத்தடி நீர்மட்டமும் உயரம். இப்படி நமது வீட்டின் மாடியில் சேரும் மழை நீரை சேமிக்க அரசின் திட்டங்களோ, அரசு அதிகாரிகளின் உத்தரவோ தேவையில்லை.

நாம் ஒவ்வொருவருக்கும் மழை நீரை சேமித்து வைக்க வேண்டும் என்ற தொலைநோக்கு சிந்தனையும், பொறுப்பும் இருந்தால் மட்டுமே போதும். இயற்கை தரும் இந்த மழை நீர், நமக்கு மட்டுமல்ல நமக்கும், கால்நடைகளுக்கும், பறவைகளுக்கும், ஏன் அடுத்த தலைமுறைகளுக்கு கூட சேமித்து வைக்க வேண்டியது நமது கடமை.

பிள்ளைகளுக்கு சொத்து சேர்த்த வைக்கும் நாம், நிலத்திற்குள் தண்ணீரையும் சேமித்து வைக்க வேண்டும் என்பதை மனதில் கொள்ள வேண்டும். ஒவ்வொரு மழைத்துளியும் உயிர் துளி என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இயற்கை கொடுத்த இந்த அற்புதமான கொடையை வீணடிக்காமல் சேமித்து வைப்போம்.தண்ணீருக்காக அடுத்த மாநிலத்தில் கையேந்தும் நிலையை மாற்றுவோம்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com