மிசோரம், சத்தீஸ்கர் மாநில தேர்தல்: வேட்பு மனு தாக்கல் இன்று தொடக்கம்!

மிசோரம் மற்றும் சத்தீஸ்கர் மாநிலத்தின் முதல் கட்ட தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்குகிறது.

நாடாளுமன்ற தேர்தல் வருகிற 2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நிலையில், மிசோரம், தெலுங்கானா, ராஜஸ்தான், சத்தீஸ்கர் மற்றும் மத்திய பிரதேசம் உள்ளிட்ட 5 மாநில தேர்தல் தேதி அறிவிப்பு வெளியானது. 2024 தேர்தலுக்கு இந்த 5 மாநில தேர்தல்கள் ஒரு முன்னோட்டமாக அமையும் என்று அரசியல் வட்டாரத்தில் கூறுகின்றனர். இந்த முறையும் மத்தியில் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்று தீவிர முயற்சியில் உள்ள பாஜக, முன்னதாக நடைபெற்ற கர்நாடக தேர்தலில் தோல்வியை தழுவியதால், வருகிற 5 மாநில சட்டமன்ற தேர்தல்களில் வெற்றி பெறுவதற்கு மும்முரம் காட்டி வருகிறது. 

அதேசமயம், காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்த இந்தியா கூட்டணியும் 5 மாநில தேர்தல்களில் வெற்றியை பெறுவதற்காக தீவிரம் காட்டி வருகிறது.

இந்நிலையில் 40 தொகுதிகளை கொண்ட மிசோரம் மாநிலத்திற்கும், 90 தொகுதிகளை கொண்ட சத்தீஸ்கரில் 20 தொகுதிகளுக்கான முதல்கட்ட தேர்தலும் வரும் நவம்பர்  7 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தல் நெருங்குவதால், இவ்விரு தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது.

அதன்படி, வேட்பாளர்கள் அக்டோபர் 20 ஆம் தேதி வரை வேட்பு மனுக்களை தாக்கல் செய்யலாம் என்று இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ள நிலையில், வேட்பு மனு மீதான பரிசீலனை அக்டோபர் 21-ல் நடைபெறும் என்றும்,  வேட்புமனுக்களை திரும்ப பெற அக்டோபர் 23ஆம் தேதி இறுதி நாள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.    

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com