ஆன்மீக ஆராய்ச்சி... இருமுடி கட்டி சபரிமலை சென்ற கிறிஸ்தவ பாதிரியார்!!

41 நாட்கள் விரதமிருந்து இருமுடி கட்டி சபரிமலை சென்று ஐயப்பனை தரிசித்துள்ளார் கிறிஸ்தவ பாதிரியார் மனோஜ்.

கேரளா மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள பாலராமபுரம் பகுதியை சார்ந்தவர் மனோஜ். கல்லூரி படிப்பை முடித்து பெங்களூருவில் சாஃப்ட்வேர் இன்ஜினியராக பணிபுரிந்து வந்துள்ளார். இதற்கிடையே ஆன்மீக சிந்தனை மேலோங்கி 2015 ஆம் ஆண்டு பாதிரியார் பட்டப்படிப்புக்காக ஆங்கிலிக்கன் சபையில் சேர்ந்து படித்து முடித்து பாதிரியாராக பணியாற்றி வந்துள்ளார்.

இதற்கிடையே அனைத்து மதங்களையும் குறித்து அறிந்து கொள்ளும் ஆசையில் இந்து சமயம் குறித்து அறிய சபரிமலைக்கு செல்ல வேண்டும் என முடிவு செய்துள்ளார்.

அதன்படி கடந்த ஆகஸ்ட் மாதம் பத்தாம் தேதி முதல் விரதம் இருந்து செப்டம்பர் 5ஆம் தேதி திருவனந்தபுரத்தில் உள்ள திருமலை மகாதேவர் ஆலயத்திற்கு கருப்பு உடை அணிந்து சென்று சபரிமலைக்கு செல்ல மாலை போட்டார். இந்த செய்தியை வெளியே தெரிய தொடங்கியதும் தேவாலய சபைக்குள் பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளது. பின்பு பாதிரியார் பதவியை ராஜினாமா செய்து சபை உறுப்பினர் அடையாள அட்டை, பாதிரியார் அட்டை உள்ளிட்டவை சபை நிர்வாகத்துடன் திருப்பி ஒப்படைத்தார்.

இந்த நிலையில் நேற்றைய தினம் திருமலை கோவிலில் வைத்து ஆஜாரங்கள் படி இருமுடி கட்டி - கருப்பு உடை அணிந்து புறப்பட்டு சென்று இன்று  சபரிமலை சன்னிதானத்திற்கு சென்று ஐயப்பனை தரிசித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் மதங்கள் - நம்பிக்கைகள் தான் பல - ஆனால் கடவுள் ஒன்று தான் என்பதை நான் மக்களுக்கு இதன் மூலம் எடுத்துச் சொல்ல விரும்புகிறேன் என்றும் கூறுகிறார்.

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com