முறையற்ற கொலீஜியம்...தொடர்ந்தால் பிரதமர் தலையீடு இருக்கும்...மத்திய சட்டத்துறை அமைச்சர்!!!

முறையற்ற கொலீஜியம்...தொடர்ந்தால் பிரதமர் தலையீடு இருக்கும்...மத்திய சட்டத்துறை அமைச்சர்!!!

கொலிஜியம் தேர்வு சரியல்ல, பொருத்தமான நபர் நீதிபதியாக இருக்க வேண்டும் மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜ்ஜு.

முறையற்ற கொலிஜியம்:

நீதிபதிகளை நியமிக்கும் கொலிஜியம் முறை முற்றிலும் தெளிவாக இல்லை.  நீதிபதி நியமனம் அந்த பதவிக்கு முற்றிலும் தகுதியான நபரால் மட்டுமே நிரப்பப்பட வேண்டும். கொலீஜியத்திற்கு நன்கு தெரிந்தவராக இருக்க வேண்டிய அவசியமில்லை. 

நீதித்துறையில் வேண்டும் சீர்திருத்தம்:

நீதித்துறையில் சீர்திருத்தங்கள் குறித்த மாநாட்டில் பேசிய சட்ட அமைச்சர், ”நான் நீதித்துறையையோ, நீதிபதிகளையோ விமர்சிக்கவில்லை.  உச்ச நீதிமன்ற கொலீஜியத்தின் தற்போதைய அமைப்பில் நான் மகிழ்ச்சியடையவில்லை. எந்த அமைப்பும் சரியாக இல்லை. நாம் எப்போதும் ஒரு சிறந்த அமைப்பை நோக்கியே செயல்பட வேண்டும்.” என கிரண் ரிஜிஜு கூறியுள்ளார். 

வெளிப்படையற்ற தேர்வு:

மேலும், “அமைப்பு மற்றும் பொறுப்பு  வெளிப்படையானதாக இருக்க வேண்டும். நீதிபதிகளை தேர்ந்தெடுக்கும்  நீதித்துறையின் இந்த அமைப்பில் நிறைய அரசியல் இருக்கிறது.  கொலீஜியத்தால் நீதித்துறையிலும் அரசியல் நடக்கிறது.” என்று தெரிவித்துள்ளார் கிரண் ரிஜிஜு. 

தொடர்ந்து பேசிய ரிஜ்ஜூ “நீதிபதிகள் இதை வெளிப்படுத்தாமல் இருக்கலாம், ஆனால் அங்கேயும் நிறைய அரசியல் இருக்கிறது. நீதிபதிகள் இதுபோன்ற நிர்வாகப் பணிகளில் சிக்கிக் கொள்ள வேண்டுமா அல்லது நீதி வழங்குவதில் அதிக நேரம் செலவிட வேண்டுமா?” எனவும் கேள்வியெழுப்பியுள்ளார் ரிஜ்ஜூ.

அரசு எப்போதும் அமைதியாக இருக்காது:

”தேசிய நீதிபதிகள் நியமன கமிஷன் சட்டத்தை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது குறித்து, அரசு இதுவரை எதுவும் கூறவில்லை.  சட்டம் ஒழிக்கப்படும் போது அரசாங்கம் ஏதாவது செய்திருக்கலாம்.  ஆனால் அது நீதித்துறையை அவமதிக்கும் செயலாக இருக்கும் என்பதால் எதுவும் செய்யவில்லை. அதற்காக அரசாங்கம் எப்போதும் அமைதியாக இருக்கும் என்று அர்த்தமல்ல.  பிரதமர் நரேந்திர மோடி அரசு, நீதித்துறையின் சுதந்திரத்தில் நம்பிக்கை வைத்து, அதை நீர்த்துப்போகச் செய்துவிடக் கூடாது என்பதற்காகவே எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.” எனத் தெரிவித்துள்ளார் கிரண் ரிஜ்ஜூ.

-நப்பசலையார்

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com