காரைக்கால் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை கொடூர தாக்குதல்!

காரைக்கால் மீன்வளத்துறை மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் பாதிக்கப்பட்ட மீனவர்களின் உறவினர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
காரைக்கால் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை கொடூர தாக்குதல்!

காரைக்காலைச் சேர்ந்த மீனவர்கள் மீது இலங்கை கடற்படை கொடூர தாக்குதல் நடத்தியதில் 4 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இவர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மீனவர்கள் மீது தாக்குதல்

காரைக்கால்மேடு மீனவ கிராமத்தை சேர்ந்தவர் மணியன். இவருக்கு சொந்தமான விசைப்படகில் கடந்த அக்டோபர் 13 ஆம் தேதி இரவு காரைக்கால் துறைமுகத்தில் இருந்து 7 பேர் மீன் பிடிக்க கடலுக்குள் சென்றனர். கோடியக்கரைக்கு தென்கிழக்கே தமிழ்நாட்டு எல்லைக்குள் அவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது அங்கு அத்துமீறி நுழைந்த இலங்கை கடற்படையினர் மீன்பிடித்துக் கொண்டிருந்த மணியனின் படகை சுற்றி வளைத்து கடுமையாக தாக்கினர். 

சேதமடைந்த பொருட்கள்

மேலும் விசைப்படகில் இருந்த திசைகாட்டும் கருவி, வாக்கி டாக்கி, ஜிபிஎஸ் கருவி உள்ளிட்ட பொருட்களை சேதப்படுத்தினர். படகில் இருந்தவர்கள் மீது கொடூர தாக்குதல் நடத்தியதில் தனசீலன், ஐயப்பன், சதீஷ் ஆகிய 4 பேர் பலத்த காயமடைந்தனர். இன்று கரை திரும்பிய அவர்கள் காரைக்காலில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக காரைக்கால் மீன்வளத்துறை மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் பாதிக்கப்பட்ட மீனவர்களின் உறவினர்கள் புகார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் காரைக்கால் பகுதி மீனவர்கள் இடையே பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. 

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com