மிசோரம் மாநிலத்தில் விறுவிறுப்பாக நடைபெற்ற வாக்குப்பதிவு!

Published on
Updated on
1 min read

மிசோரம் மற்றும் சத்தீஷ்கர் மாநிலத்தில் விறுவிறுப்பாக நடைபெற்ற வாக்குப்பதிவு மாலை 5 மணிக்கு நிறைவு பெற்றது. தீவிரவாத அச்சுறுத்தல் மற்றும் நக்சல் பாதிப்பு என்ற காரணிகளை கடந்து இரண்டு மாநிலங்களிலும் தேர்தல் அமைதியான முறையில் நடைபெற்று முடிந்துள்ளது.

மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம், தெலுங்கானா ஆகிய 5 மாநில சட்டப்பேரவை தேர்தல்களுக்கான தேதி அண்மையில் அறிவிக்கப்பட்டது. அதன்படி, மிசோரம், சத்தீஸ்கர் மாநிலங்களில் தேர்தல் நடைபெற்றது.

40 தொகுதிகள் கொண்ட மிசோரம் மாநிலத்தில் காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவில், வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்.  இங்கு ஆளும் மிசோ தேசிய முன்னணி, சோரம் மக்கள் இயக்கம், பாஜக, காங்கிரஸ், ஆம்ஆத்மி கட்சிகள் இடையே போட்டி நிலவுகிறது. 

வன்முறை நிகழ்வுகளை தடுத்திடும் வகையில் மாநிலம் முழுவதும் 9 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இதில், அய்ஸ்வால் தொகுதியில் முதலமைச்சர் ஜொராம் தங்கா தனது வாக்கை பதிவு செய்தார். இந்த தேர்தலில் 78 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 

இதேபோல், 90 தொகுதிகளை கொண்ட சத்தீஸ்கர் மாநிலத்தில், முதற்கட்டமாக 20 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. நக்சல் அச்சுறுத்தல் உள்ள 10 தொகுதிகளுக்கு காலை 7 மணி முதல் பிற்பகல் 3 மணி வரையிலும், எஞ்சிய 10 தொகுதிகளுக்கு காலை 8 மணிக்கு மாலை 5 மணி வரையிலும் வாக்குப்பதிவு நடைபெற்றது. 

மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்கு செலுத்தினர் வாக்குபதிவு முடிந்தவுடன் மின்னணு எந்திரங்கள்  சீல் வைக்கப்பட்டு வாக்கு  எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன.  மாலை 5 மணிக்கு நிறைவடைந்த தேர்தலில், 70 சதவீத  வாக்குகள் பதிவானதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

முன்னதாக சுக்மா மாவட்டத்தில் உள்ள மின்பா பகுதியில் நக்சல்கள் உடனான துப்பாக்கிச் சண்டையின்போது பாதுகாப்பு படை வீரர்கள் 3 பேர் காயம் அடைந்தனர் என்பது குறிப்பிடதக்கது.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com