இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே போர் மூண்டிருக்கும் நிலையில், இஸ்ரேலில் உள்ள சுமார் 18 ஆயிரம் இந்தியர்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என மத்திய வெளியுறவு அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது.
பாலஸ்தீனத்திலிருக்கும் ஹமாஸ் பயங்கரவாதிகள், இஸ்ரேல் மீது சுமார் 7 ஆயிரம் ஏவுகணைகளை ஏவி தாக்குதல் நடத்தியதில் சுமார் 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதற்கு இஸ்ரேலும் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்நிலையில், இஸ்ரேலில் 18 ஆயிரம் இந்தியர்கள் இருக்கலாம் என்று தெரிவித்துள்ள மத்திய வெளியுறவுத் துறை 900 இந்தியர்கள் இஸ்ரேலில் உள்ள பல்வேறு பல்கலைக்கழகங்களில் படித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இஸ்ரேலில் உள்ள இந்தியர்கள் அனைவரும், உள்நாட்டு அரசு வெளியிடும் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி நடக்க வேண்டும் என்றும், மிகவும் அவசியமின்றி, வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என்றும் மத்திய வெளியுறவுத் துறை எச்சரித்துள்ளது.
இதனிடையே அங்கு சிக்கியுள்ள இந்திய மாணவர்கள் வீடியோ பதிவு மூலம் தங்களது நிலைகள் குறித்து தெரிவித்துள்ளனர். அதில், போர் காரணமாக தாங்கள் பதட்டத்துடனும், பயத்துடனும் சுமார் 8 மணிநேரத்திற்கும் மேலாக பதுங்கு குழிகளில் தங்கி உள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலும் இந்திய தூதரகத்துடன் தொடர்பில் இருப்பதாகவும் தங்களுக்கு தங்குமிடம் மற்றும் இஸ்ரேலிய போலீஸ் படைகள் உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.