தெலங்கானாவின் புதிய முதலமைச்சராக ரேவந்த் ரெட்டி பதவியேற்றார்...!

தெலங்கானாவின் புதிய முதலமைச்சராக காங்கிரஸ் மாநில தலைவர் ரேவந்த் ரெட்டி பதவியேற்றார். 

தெலங்கானாவில் 119 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இதில், 64 இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. அதனை தொடர்ந்து முதலமைச்சர் பதவிக்கு தெலங்கானா காங்கிரஸ்  தலைவர் ரேவந்த் ரெட்டி, பாட்டி விக்ரமார்கா, உத்தம் குமார் ரெட்டி  ஆகியோர் இடையே கடும் போட்டி நிலவியது. 

இதையடுத்து, ”ரேவந்த் ரெட்டியே முதலமைச்சராக பதவி ஏற்பார்“ என காங்கிரஸ் மேலிடம் அறிவித்தது. இந்நிலையில் ஹைதராபாத்தில் உள்ள எம்.பி. விளையாட்டரங்கில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் ரேவந்த் ரெட்டி, தெலங்கானாவின் முதலமைச்சராக பதவி ஏற்று கொண்டார். அவருக்கு ஆளுநர் தமிழிசை பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

தொடர்ந்து பாட்டி விக்ரமார்கா துணை முதலமைச்சராகவும், சீதக்கா, தாமோதார் ராஜ நரசிம்மா, உத்தம் குமார் ரெட்டி  உட்பட 10 பேர் அமைச்சர்களாக பதவியேற்று  கொண்டனர். இதனிடையே ரேவந்த் ரெட்டிக்கு, பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்து, பணிகளை சிறப்பாக மேற்கொள்ளுமாறு கூறினார்.

இந்நிகழ்ச்சியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்பட காங்கிரஸ் முன்னணி  நிர்வாகிகள், தொண்டர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com