உலகை அச்சுறுத்தும் புதிய வைரஸ்...சர்வதேச பயணக் கட்டுப்பாடுகளை தளர்த்துவது குறித்து மறுஆய்வு செய்யுங்கள்...அதிகாரிகளுக்கு பிரதமர் உத்தரவு...!

ஒமிக்ரான்
உலகை அச்சுறுத்தும் புதிய வைரஸ்...சர்வதேச பயணக் கட்டுப்பாடுகளை தளர்த்துவது குறித்து மறுஆய்வு செய்யுங்கள்...அதிகாரிகளுக்கு பிரதமர் உத்தரவு...!
Published on
Updated on
1 min read

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் கொரோனோ பாதிப்பின் தற்போதைய நிலவரம் மற்றும் தடுப்பூசி நிலை குறித்து உயர்மட்ட ஆலோசனை கூட்டம் வீடியோ கான்பரன்சிங் மூலம் நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சரவைச் செயலாளர் ராஜீவ் கவுபா, பிரதமரின் முதன்மைச் செயலாளர் பீகே மிஸ்ரா, மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன், சுகாதாரதிற்கான நிதி ஆயோக் உறுப்பினர் டாக்டர் விகே பால் உள்ளிட்ட பல மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இரண்டு மணி நேரங்களுக்கும் மேலாக நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் கொரோனா பாதிப்பு குறித்தும் நாட்டில் தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வரும் புள்ளி விவரங்கள் குறித்தும் அதிகாரிகள் பிரதமரிடம் எடுத்துரைத்துள்ளனர். குறிப்பாக, ஆப்பிரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் அதிக பாதிப்பை ஏற்படுத்தும் புதிய வகை கொரனோ வைரஸ் பரவி வரும் நிலையில்  இந்தியாவில் பரவுவதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கிறதா? என்பது குறித்த விளக்கங்களை பிரதமரிடம் அதிகாரிகள் முன் வைத்து உள்ளனர்.

மேலும், ஒமிக்ரான் என பெயரிடப்பட்டுள்ள புதிய வகை வைரஸ் தொற்றால் எத்தகைய பாதிப்புகளை மனிதர்கள் சந்திக்க நேரிடும் எனவும் இதனுடைய பரவல் விகிதம்? இதுவரை பாதிக்கப்பட்டுள்ள நிலமை ஆகியவற்றையும் பிரதமரிடம் அதிகாரிகள் விரிவாக எடுத்துரைத்ததாக கூறப்படுகிறது. 

அதன்பின்னர் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய பிரதமர்,  இந்தியா வரும் வெளிநாட்டு பயணிகளை கண்காணிப்பதில் அதிகம் கவனம் தேவை என்றும் குறிப்பாக புதிய வகை கொரனோ பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து கண்காணிக்க வேண்டும் என அதிகாரிகளை கேட்டு கொண்டார்.

டிசம்பர் 15ம் தேதி முதல் சர்வதேச விமான சேவையை தொடங்குவதற்கும் இயல்பு நிலையை மீட்டெடுப்பதற்கும் மத்திய வெளியுறவுத்துறை மற்றும் விமான போக்குவரத்துத்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ள நிலையில் அதனை மறுபரிசீலனை செய்ய அதிகாரிகளிடம் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார். மேலும், சர்வதேச பயண கட்டுப்பாடுகளை இப்போதைக்கு தளர்த்த வேண்டாம் என்றும் கூறியதாக சொல்லப்படுகிறது. 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com