தேசிய குற்ற ஆவண காப்பகம் நடத்திய 4வது ஹேக்கத்தான் மற்றும் சைபர் சேலஞ்ச் போட்டியில் தமிழக காவல்துறையின் டிராக் கேடி (KD) ஆப் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது.
தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் சார்பாக 4வது ஹேக்கத்தான் மற்றும் சைபர் சேலஞ்ச் போட்டிநடத்தப்பட்டது. இதில் இந்தியாவில் உள்ள அனைத்து மாநில காவல்துறையும் கலந்து கொண்டது. இந்த போட்டியில் காவல்துறையினர் தொழில்நுட்பங்களில் எவ்வாறு புதுமையை பயன்படுத்தியுள்ளனர் என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
இதில் தமிழகம் முழுவதும் உள்ள குற்றவாளிகளின் நடவடிக்கைகளை மாதந்தோறும் ஆய்வு நடத்தி நேரடி கண்காணிப்பு செய்யும் விதமாக, ரவுடிகளின் விவரங்களை டிஜிட்டல் மயமாக்கி தமிழக காவல்துறை டிராக் கேடி செயலி அனைத்து மாநிலங்களுடன் நடந்த போட்டியில் மூன்றாவது இடத்தை பெற்றுள்ளது.
டெல்லியில் உள்ள தேசிய குற்ற ஆவண காப்பகத்தில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஆப் தமிழகம் முழுவதும் அமல்படுத்தி வெற்றிகரமாக செயல்படுத்தியதற்காக சென்னை காவல்துறையின் கூடுதல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்காவிற்கு மூன்றாவது பரிசு வழங்கப்பட்டது.
டிராக் கேடி ஆப்பில் தமிழகத்தில் உள்ள 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குற்றவாளிகளின் சரித்திர பதிவேடுகள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளதாகவும், ரவுடிகளை கண்காணிப்பதற்கும், பழிவாங்கும் வகையில் கொலைகளில் ஈடுபடும் குற்றவாளிகளின் சமூக விரோத செயல்களைத் தடுப்பதற்கும் உதவும் வகையில் டிராக் கேடி உருவாக்கப்பட்டுள்ளது. சென்னை காவல் துறையின் கூடுதல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா தலைமையிலான காவல் குழுவினர் ரவுடிகளின் குற்றப்பதிவு தொடர்பான செயல்பாடுகளைக் கண்காணிக்க டிராக் கேடி (KD) செயலியை உருவாக்கியது குறிப்பிடத்தக்கது.