

செயற்கை நுண்ணறிவு வளர்ந்து வரும் வேகத்துக்கு ஏற்ப, அதற்குத் தேவையான கணினி சக்தியும் மின்சாரமும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதற்கான தீர்வை பூமிக்கு வெளியே தேடும் முயற்சியில் கூகுள் தற்போது ஒரு முக்கியமான பரிசோதனையைத் தொடங்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாக, நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு சிப்கள் பொருத்தப்பட்ட சிறிய செயற்கைக்கோள் விண்வெளிக்கு அனுப்பப்பட்டுள்ளது.
கூகுளின் இந்த முயற்சிக்கு “Project Suncatcher” என்று பெயரிடப்பட்டுள்ளது. குளிர்சாதனப் பெட்டி அளவுக்கு இருக்கும் இந்த முன்மாதிரி செயற்கைக்கோளில் நான்கு Tensor Processing Units (TPUs) எனப்படும் பிரத்யேக AI சிப்கள் பொருத்தப்பட்டுள்ளன. கூகுள் தனது AI பணிகளுக்காக உருவாக்கிய இந்த சிப்கள் தற்போது பூமியில் உள்ள தரவு மையங்களிலும் பயன்படுத்தப்படுகின்றன. புதிய முயற்சியில் அவற்றை நேரடியாக விண்வெளிச் சூழலில் இயக்கி சோதிக்கிறது கூகுள்.
கலிபோர்னியாவில் உள்ள Vandenberg Space Force Base-ல் இருந்து SpaceX Falcon 9 ராக்கெட் மூலம் இந்த செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட்டது. Planet நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கப்பட்ட இந்த செயற்கைக்கோள், Transporter-18 rideshare திட்டத்தின் ஒரு பகுதியாக விண்வெளிக்குச் சென்றது. செயற்கைக்கோளுடன் தொடர்பு வெற்றிகரமாக ஏற்படுத்தப்பட்டு, அது திட்டமிட்டபடி செயல்பட்டு வருவதாக கூகுள் தெரிவித்துள்ளது.
இந்த சோதனையின் நோக்கம் உடனடியாக விண்வெளியில் முழுமையான AI தரவு மையத்தை அமைப்பது அல்ல. முதலில், பூமியில் இயங்கும் AI சிப்களை விண்வெளியின் கடுமையான சூழலில் பயன்படுத்த முடியுமா என்பதை அறிந்து கொள்வதே முக்கிய நோக்கம். ராக்கெட் ஏவுதலின்போது ஏற்படும் அதிர்வுகள், விண்வெளியில் இருக்கும் கதிர்வீச்சு மற்றும் அதிக வெப்பநிலை மாற்றங்கள் ஆகியவற்றை சிப்கள் எவ்வாறு எதிர்கொள்கின்றன என்பதை கூகுள் ஆய்வு செய்ய உள்ளது.
இதில் கதிர்வீச்சு மிகப்பெரிய சவால்களில் ஒன்றாக உள்ளது. விண்வெளியில் இருக்கும் கதிர்வீச்சு கணினி சிப்களில் தரவு பிழைகளை உருவாக்கக்கூடும். இதை முன்கூட்டியே பரிசோதிக்க, கூகுள் தனது TPUs-ஐ பூமியிலேயே அதிக அளவிலான கதிர்வீச்சுக்கு உட்படுத்தி சோதித்துள்ளது. இருந்தாலும், உண்மையான விண்வெளிச் சூழலில் சிப்கள் எப்படி செயல்படும் என்பதை நேரடியாகப் பரிசோதிப்பதே இந்த திட்டத்தின் முக்கிய கட்டமாக உள்ளது.
மற்றொரு பெரிய பிரச்சினை வெப்பத்தை வெளியேற்றுவது. பூமியில் கணினி சிப்களை குளிர்விக்க காற்றோட்டம் மற்றும் விசிறிகள் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் விண்வெளியில் காற்று இல்லாததால் அந்த முறையைப் பயன்படுத்த முடியாது. இதற்காக வெப்பத்தை சிப்களில் இருந்து வெளியேற்றி, ரேடியேட்டர்கள் மூலம் விண்வெளிக்குள் வெளியேற்றும் சிறப்பு வெப்ப மேலாண்மை அமைப்பை கூகுள் உருவாக்கியுள்ளது. தற்போதைய சோதனையில் சிப்கள் தொடர்ந்து இயங்காமல் சுமார் 15 நிமிடங்கள் கொண்ட குறுகிய கால இடைவெளிகளில் AI பணிகளை மேற்கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன.
விண்வெளியில் சூரிய ஒளி கிடைப்பது இந்த திட்டத்தின் முக்கிய ஈர்ப்பாக உள்ளது. குறிப்பிட்ட சுற்றுப்பாதையில் செயற்கைக்கோளை இயக்குவதன் மூலம் சூரிய ஒளியை நீண்ட நேரம் பயன்படுத்த முடியும். பூமியில் AI தரவு மையங்களுக்கு மிகப்பெரிய அளவில் மின்சாரம் தேவைப்படும் நிலையில், விண்வெளியில் சூரிய சக்தியை பயன்படுத்துவது எதிர்காலத்தில் ஒரு மாற்று வழியாக இருக்குமா என்பதையும் கூகுள் ஆராய்கிறது.
இந்த திட்டம் தொடர்பான ஆரம்ப ஆலோசனைகள் குறித்து கூகுள் CEO சுந்தர் பிச்சையும் கருத்து தெரிவித்துள்ளார். விண்வெளியில் கணினி செயல்பாடுகளை மேற்கொள்ளும் யோசனை முதலில் முன்வைக்கப்பட்ட கூட்டம் இன்னும் நினைவில் இருப்பதாக அவர் கூறியுள்ளார். தற்போது அந்த யோசனை உண்மையான விண்வெளி சோதனையாக மாறியிருப்பது முக்கிய கட்டமாக பார்க்கப்படுகிறது.
எதிர்காலத்தில் கூகுள் ஒரே செயற்கைக்கோளுடன் நிற்காமல், பல செயற்கைக்கோள்களை ஒன்றுடன் ஒன்று இணைத்து பெரிய அளவிலான AI கணினி கட்டமைப்பை உருவாக்க திட்டமிட்டுள்ளது. செயற்கைக்கோள்களுக்கு இடையே அதிவேக லேசர் தொடர்பு ஏற்படுத்துவதற்கான சோதனைகளும் 2027-ல் மேற்கொள்ளப்பட உள்ளன. பின்னர் பல செயற்கைக்கோள்கள் இணைந்து விண்வெளியிலேயே AI கணக்கீடுகளை மேற்கொள்ளும் அமைப்பை உருவாக்குவது நீண்டகால இலக்காக உள்ளது.
ஆனால் இந்த தொழில்நுட்பம் உடனடியாக பூமியில் உள்ள தரவு மையங்களுக்கு மாற்றாக மாறிவிடும் என்று கூகுள் கூறவில்லை. செயற்கைக்கோள்களை உருவாக்குதல், விண்வெளிக்கு அனுப்புதல், வெப்பத்தை நிர்வகித்தல், கதிர்வீச்சிலிருந்து பாதுகாப்பது உள்ளிட்ட பல சவால்கள் இன்னும் உள்ளன. விண்வெளி அடிப்படையிலான தரவு மையங்கள் பொருளாதார ரீதியாக பயனுள்ளதாக மாறுவதற்கு குறைந்தது இன்னும் சில ஆண்டுகள் ஆகலாம் என கூகுள் மதிப்பிட்டுள்ளது.
தற்போதைய நான்கு AI சிப்கள் கொண்ட செயற்கைக்கோள், மிகப்பெரிய விண்வெளி தரவு மையத்திற்கான இறுதி வடிவம் அல்ல. ஆனால் AI வளர்ச்சியால் உருவாகும் மின்சாரத் தேவைக்கு விண்வெளியை ஒரு புதிய கணினி தளமாக பயன்படுத்த முடியுமா என்ற கேள்விக்கு பதில் தேடும் முதல் முக்கியமான பரிசோதனையாக இது அமைந்துள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்