நள்ளிரவு 1 மணி வரை வேலை செய்த ஊழியர்! மறுநாள் மேலாளர் கொடுத்த சர்ப்ரைஸ் என்ன தெரியுமா?

இரவு நேரங்களில் நீண்ட நேரம் வேலை செய்வது உடல் சோர்வு மட்டுமின்றி மன அழுத்தத்தையும் ஏற்படுத்தக்கூடும்.
நள்ளிரவு 1 மணி வரை வேலை செய்த ஊழியர்! மறுநாள் மேலாளர் கொடுத்த சர்ப்ரைஸ் என்ன தெரியுமா?
Published on: 
Updated on: 
2 min read

தற்போதைய வேலைச்சூழலில் அலுவலக நேரம் முடிந்த பிறகும் ஊழியர்கள் தொடர்ந்து பணியாற்ற வேண்டிய நிலை பல நிறுவனங்களில் உள்ளது. அவசரப் பணிகள், காலக்கெடு, வாடிக்கையாளர்களின் தேவைகள் எனப் பல காரணங்களால் இரவு நேரங்களிலும் வேலை செய்ய வேண்டிய சூழல் ஏற்படுகிறது. அப்படி கூடுதல் நேரம் உழைக்கும் ஊழியர்களுக்கு சில இடங்களில் ஒரு நன்றி மட்டுமே கிடைக்கிறது. ஆனால், ஒரு மேலாளர் தனது குழுவினரிடம் காட்டிய சிறிய அக்கறை தற்போது இணையத்தில் பலரது கவனத்தையும் பாராட்டையும் பெற்றுள்ளது.

ஐரோப்பியப் பிராந்தியத்துடன் தொடர்புடைய பணிகளில் ஈடுபட்டு வரும் திமாஹி ஜெயின் என்ற பெண் ஊழியர், தனது அலுவலக அனுபவத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். அவரது வழக்கமான பணி நேரம் இரவு 10.30 மணியுடன் முடிவடையும். ஆனால், சமீபத்தில் ஏற்பட்ட அவசரப் பணி காரணமாக அவர் நள்ளிரவு 1 மணி வரை அலுவலகப் பணியில் ஈடுபட வேண்டியிருந்தது. அதாவது, வழக்கமான நேரத்தைவிட சுமார் இரண்டரை மணி நேரம் கூடுதலாக அவர் பணியாற்றியுள்ளார். பொதுவாக இதுபோன்ற சூழலில், கூடுதல் நேரம் வேலை செய்த ஊழியர்களுக்கு மேலாளர்கள் நன்றி தெரிவிப்பது வழக்கம். ஆனால், திமாஹியின் மேலாளர் அதோடு நிற்கவில்லை. மறுநாள் ஊழியர்கள் வழக்கமான நேரத்தைவிட தாமதமாகப் பணியைத் தொடங்கலாம் என்றும், முந்தைய நாள் கூடுதலாகச் செலவிட்ட நேரத்துக்கு ஈடாக அந்த நேரம் சரிசெய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

இந்த அணுகுமுறைதான் திமாஹியை நெகிழ்ச்சியடையச் செய்துள்ளது. இதுகுறித்து அவர் பகிர்ந்த பதிவில், “பல மேலாளர்கள் கூடுதல் நேரம் உதவி செய்ததற்காக நன்றி மட்டுமே சொல்வார்கள். ஆனால், எனது மேலாளர் அதற்கு மாறாக, கூடுதலாக வேலை செய்த நேரத்தைக் கணக்கில் எடுத்துக்கொண்டு மறுநாள் தாமதமாகப் பணியைத் தொடங்க அனுமதி அளித்துள்ளார். ஊழியர்களுக்குத் தேவைப்படுவது வெறும் நன்றி வார்த்தைகள் மட்டுமல்ல; அவர்களின் நேரத்தையும் உழைப்பையும் மதிக்கும் உண்மையான அக்கறைதான்” என்ற கருத்தை வெளிப்படுத்தியுள்ளார். மேலும், இப்படிப்பட்ட நல்ல மேலாளர் கிடைத்தது தனது அதிர்ஷ்டம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தப் பதிவு பலருக்கும் ஒரு முக்கியமான விஷயத்தை நினைவூட்டியுள்ளது. ஒரு நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள் தங்களது பொறுப்புகளைச் சரியாக நிறைவேற்றுவது அவசியம் என்றாலும், அவர்களுக்கும் தனிப்பட்ட வாழ்க்கை, குடும்பம், ஓய்வு ஆகியவை இருக்கின்றன. அலுவலக நேரம் முடிந்த பிறகும் அவசரத் தேவைக்காகப் பணியாற்றும்போது, அதற்கான அங்கீகாரமும் உரிய ஈடுசெய்தலும் கிடைக்க வேண்டும் என்பதே பலரது எதிர்பார்ப்பாக உள்ளது.

இரவு நேரங்களில் நீண்ட நேரம் வேலை செய்வது உடல் சோர்வு மட்டுமின்றி மன அழுத்தத்தையும் ஏற்படுத்தக்கூடும். தொடர்ந்து இதுபோன்ற சூழல் உருவானால், ஊழியர்களின் வேலை மற்றும் தனிப்பட்ட வாழ்க்கைக்கு இடையிலான சமநிலை பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. எனவே, அவசரப் பணிகள் முடிந்த பிறகு அவர்களுக்கு ஓய்வு அளிப்பது, கூடுதல் நேர உழைப்பை அங்கீகரிப்பது போன்ற நடவடிக்கைகள் பணிச்சூழலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும். இந்தச் சம்பவத்தில் மேலாளர் செய்தது மிகப்பெரிய சலுகையோ, அசாதாரணமான நடவடிக்கையோ அல்ல. கூடுதலாகச் செலவிட்ட நேரத்துக்கு மறுநாள் பணியைத் தாமதமாகத் தொடங்க அனுமதித்துள்ளார். ஆனால், அந்தச் சிறிய செயல் ஊழியர்களின் உழைப்பை மதிக்கும் ஒரு நல்ல முன்னுதாரணமாகப் பார்க்கப்படுகிறது.

ஒரு நல்ல மேலாளர் என்பவர் வேலைகளைப் பிரித்துக் கொடுப்பவர் மட்டுமல்ல; தனது குழுவில் இருப்பவர்களின் சிரமங்களையும் புரிந்துகொண்டு செயல்படுபவராக இருக்க வேண்டும் என்பதையே இந்தச் சம்பவம் எடுத்துக்காட்டுகிறது. ஊழியர்களிடம் இருந்து அதிக உழைப்பை எதிர்பார்க்கும் நிறுவனங்கள், அவர்களின் நேரத்துக்கும் நலனுக்கும் உரிய மதிப்பைக் கொடுக்க வேண்டும் என்ற விவாதத்தையும் இந்தப் பதிவு மீண்டும் எழுப்பியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.