

செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சியால் வேலைகள் பறிபோகும் என்ற அபாயம் பெறுகியுள்ளது. இதனால் பொருளாதாரம் பெரும் சீர்குலைவை சந்திக்க உள்ளதாளா எச்சரித்துள்ளார் உலகப் பணக்காரர்களில் ஒருவரான பில்கேட்ஸ்.
அவரது பதிவில் ஏஐ உடன் ரோபோட்களும் இணையும் காலம் தொலைவில் இல்லை என்றும் அதானால் பேரழிவு நிகழும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
பில்கேட்ஸ் பேசுவதாவது, "AI ஆல் பார்க்க முடிகிறது, கேட்க முடிகிறது, பேச முடிகிறது, ஒரு நிகழ்வுக்கான காரணத்தை விளக்க முடிகிறது, விரைவில் மனிதனைப் போலவே உடல் உழைப்பிலும் ஈடுபட முடியும்.
இது ஒரு துறையை மட்டுமே பாதிக்கக்கூடியது அல்ல. சட்டம், வாடிக்கையாளர் சேவை, மருத்துவம், மென்பொருள் மற்றும் உற்பத்தி என அனைத்திலும் உள்ள வேலைகளை எடுத்துக்கொள்ளும்.
இது சில தலைமுறைகளில் அல்லாமல், ஒரு தசாப்த காலத்திற்குள் இந்தத் தொழில்துறைகளை வேகமாகப் பாதிக்கும். சில புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும், ஆனால் சரியான கொள்கைகள் இல்லாவிட்டால், இன்று இருப்பதைவிட மிகக் குறைவான வேலைவாய்ப்புகளே இருக்கும்.
உலகம் முழுவதும் AI வளர்ச்சியை மட்டுப்படுத்தும் சரியான திட்டத்துடன் யாராவது வந்தால், நான் அவர்களுக்கு ஆதரவு அளிப்பேன். ஆனால், அது நடக்கும் எனத் தோன்றவில்லை. அரசியல் மற்றும் பொருளாதார காரணிகள் AI முழு வேகத்தில் முன்னேறுவதற்கு மிகவும் கடுமையாக அழுத்தம் கொடுக்கின்றன" என்கிறார்.
அத்துடன், " AI போலவே ரோபோட்களும் வேலைகளை ஆக்கிரமிக்கும். விரைவில் அதன் விலைவாசி நம்பமுடியாத அளவு குறையும். சீனா போன்ற நாடுகளில் ரோபோட்கள் எவ்வளவு வேகமாக வளருகின்றன என்பதை பல அமெரிக்கர்கள் இன்னும் உணரவே இல்லை. அவர்கள் ரோபோட்கள் அசிங்கமாக நடனமாடும் வைரல் வீடியோக்களால் குழம்பிப்போயிருக்கின்றனர். அடுத்த 10 ஆண்டுகளில் செயல்திறன் மிக்க எந்திரன்கள் மனிதர்களைப் போலவே கட்டடத் தொழில் முதல் விருந்தோம்பல் துறை வரை நிரம்பியிருப்பார்கள் என நான் நினைக்கிறேன்.
ரோபோட்களும் செயற்கை நுண்ணறிவும் இணைவது ஒரு கொடூரமான சுழற்சியை உருவாக்கும். ஒரு நிறுவனம் இவற்றைப் பயன்படுத்தி விலையைக் குறைத்துவிட்டால், அதன் போட்டியாளர்களும் வேறு வழியில்லாமல் அதையே செய்ய நேரிடும். இருக்கக்கூடிய நிறுவனங்கள் எல்லாம் இதைச் செய்யாமல் இருந்தாலும், ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் கையில் எடுக்கும்." என்றார்.
மேலும் வேலைவாய்ப்பு இழப்பின் எதிர்மறை விளைவுகள் பற்றி பேசிய அவர், "சமூகத்தில் அதிக வேலைவாய்ப்பின்மை நிலவும்போது, அதன் தொடர் விளைவுகள் பரவலாக இருக்கலாம். அமெரிக்காவின் சில பகுதிகளில், தொழிற்சாலைகள் மூடப்படுவது அதீத ஓபியாய்டு பயன்பாட்டால் ஏற்படும் மரணங்களுக்கு காரணமாக இருந்தது என ஆய்வுகள் சொல்கின்றன. நாடு முழுவதும் உள்ள அலுவலகப் பணியாளர்கள் மற்றும் சாதாரணப் பணியாளர்கள் ஆகிய இருவர் மீதும் இதே போன்ற அழுத்தங்கள் ஏற்படுவதைக் கற்பனை செய்து பாருங்கள்.
இப்போது நாம் வேலைகள் பறிபோவதை எப்படி தடுப்பது எனச் சிந்திக்க வேண்டும். அப்போதுதான் செயற்கை நுண்ணறிவு தரும் பலன்களை எல்லோரும் பகிர்ந்துகொள்ள முடியும். மக்கள் போதிய வேலைவாய்ப்பின்றித் தவிக்கும் வரை காத்திருப்பது மிகவும் தாமதமாகிவிடும். நம் பொருளாதாரத்தின் அடிப்படைக் கட்டமைப்புக்கே சவாலாக உள்ளது செயற்கை நுண்ணறிவு. இதனைத் தடுக்க இப்போதே நாம் சிந்திக்கவும், நடவடிக்கை எடுக்கவும் வேண்டும்." எனக் கூறியுள்ளார்.
மேலும் ஏஐ-யின் 3 பெரும் தீமைகள் மற்றும் எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகள் குறித்து விளக்கியுள்ளார் பில்கேட்ஸ்.