AI வந்தால் வேலை போய்விடுமா? எதிர்காலத்தில் மனிதர்களுக்கு மிஞ்சும் 3 வகை வேலைகள் குறித்து நிபுணர் கணிப்பு

எதிர்காலத்தில் வேலை செய்பவர்கள் மூன்று முக்கிய பிரிவுகளாக இருப்பார்கள் என்பதே அவரது கணிப்பு...
Clara Shih AI Future Jobs Prediction
Clara Shih AI Future Jobs Prediction
Published on: 
Updated on: 
2 min read

செயற்கை நுண்ணறிவு என்று சொல்லப்படும் AI தொழில்நுட்பம் நாளுக்கு நாள் வேகமாக வளர்ந்து வருகிறது. எழுதுவது, தகவல்களை தேடுவது, கணக்கிடுவது, மென்பொருள் உருவாக்குவது என பல பணிகளை சில நொடிகளில் செய்து முடிக்கும் அளவுக்கு AI கருவிகள் முன்னேறியுள்ளன. இதனால் அடுத்த சில ஆண்டுகளில் மனிதர்களின் வேலைவாய்ப்பு எப்படி இருக்கும் என்ற கேள்வி உலகம் முழுவதும் எழுந்துள்ளது. குறிப்பாக கல்லூரி முடித்து வேலை தேடும் இளைஞர்களுக்கு AI மிகப்பெரிய சவாலாக மாறுமா என்ற கவலையும் அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், Salesforce மற்றும் Meta நிறுவனங்களில் AI தொடர்பான முக்கிய பொறுப்புகளில் பணியாற்றிய கிளாரா ஷிஹ், எதிர்கால வேலைவாய்ப்பு குறித்து தனது பார்வையை தெரிவித்துள்ளார். AI வேலைகளை முழுமையாக அழித்துவிடும் என்று ஒரே வார்த்தையில் கூற முடியாது என்றும், ஆனால் வேலை செய்யும் முறையே பெரிய அளவில் மாறப்போகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார். எதிர்காலத்தில் வேலை செய்பவர்கள் மூன்று முக்கிய பிரிவுகளாக இருப்பார்கள் என்பதே அவரது கணிப்பு.

முதல் பிரிவில் AI தொழில்நுட்பத்தை உருவாக்குபவர்கள் இருப்பார்கள். அதாவது AI மாடல்கள், மென்பொருட்கள், கருவிகள் மற்றும் அதனை அடிப்படையாகக் கொண்ட புதிய தயாரிப்புகளை உருவாக்கும் பொறியாளர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் தொழில்நுட்ப நிபுணர்களுக்கு தொடர்ந்து தேவை இருக்கும். AI வளர வளர இந்தத் துறையில் புதிய வேலைகளும் உருவாக வாய்ப்பு உள்ளது. இரண்டாவது பிரிவு AI-ஐ பயன்படுத்தி வேலை செய்பவர்கள்.

தற்போது பல அலுவலகங்களில் ஊழியர்கள் ஏற்கெனவே AI கருவிகளை பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர். தகவல்களை பகுப்பாய்வு செய்வது, அறிக்கைகள் தயாரிப்பது, வாடிக்கையாளர்களுக்கு பதில் அளிப்பது, உள்ளடக்கம் உருவாக்குவது போன்ற பணிகளில் AI உதவியை பயன்படுத்த முடிகிறது. எதிர்காலத்தில் ஒரு ஊழியர் தனியாக செய்வதைவிட AI உதவியுடன் அதிக வேலைகளை குறைந்த நேரத்தில் செய்து முடிக்கும் சூழல் உருவாகலாம்.

ஆனால் பெரும்பாலான மக்கள் தாங்கள் இந்த இரண்டாவது பிரிவில்தான் இருப்போம் என்று நினைக்கிறார்கள் என்று கிளாரா ஷிஹ் கூறுகிறார். உண்மையில் அந்தப் பிரிவு எதிர்பார்ப்பதைவிட சிறியதாக இருக்கலாம் என்றும், காலப்போக்கில் அதன் அளவு குறையக்கூடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். காரணம், AI பயன்படுத்தி வேலை செய்யும் மனிதர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதுடன், சில பணிகளை AI தானாகவே செய்யும் திறனும் வேகமாக வளர்ந்து வருகிறது. மூன்றாவது பிரிவு தான் அதிக கவனத்தை ஈர்க்கிறது.

AI மூலம் நிர்வகிக்கப்படும் அல்லது கண்காணிக்கப்படும் பணிகளில் இருப்பவர்கள் இந்தப் பிரிவில் வருவார்கள். இதற்கு ஏற்கெனவே சில உதாரணங்கள் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். Uber ஓட்டுநர்கள், DoorDash போன்ற டெலிவரி பணியாளர்கள் உள்ளிட்டோரின் வேலைகளில் எந்த நேரத்தில் என்ன செய்ய வேண்டும் என்பதை தொழில்நுட்ப அமைப்புகள் தீர்மானிக்கின்றன. இதேபோன்ற நிலை அலுவலக வேலைகளிலும் அதிகரித்து வருவதாக அவர் கூறியுள்ளார்.

வாடிக்கையாளர் சேவை ஊழியர்கள் மற்றும் விற்பனை தொடர்பான பணிகளில் இருப்பவர்களும் AI அடிப்படையிலான கண்காணிப்பு மற்றும் வழிகாட்டுதலை எதிர்கொள்ளத் தொடங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அதாவது, எதிர்காலத்தில் AI ஒரு கருவியாக மட்டும் இல்லாமல், சில ஊழியர்களின் பணியை வழிநடத்தும் மேலாளர் போன்ற பங்கையும் வகிக்கக்கூடும்.

இந்த மாற்றத்தில் இளம் பட்டதாரிகள்தான் அதிகமாக பாதிக்கப்படலாம் என்ற கவலையும் கிளாரா ஷிஹ் தெரிவித்துள்ளார். அவர் முன்பு பணியாற்றிய நிறுவனங்களிலேயே கல்லூரி முடித்த புதியவர்களை வேலைக்கு எடுக்கும் அளவு குறைந்துள்ளதாக கூறியுள்ளார். அமெரிக்காவில் சமீபத்தில் கல்லூரிப் படிப்பை முடித்தவர்களில் இருவரில் ஒருவர் வேலை இல்லாமல் இருப்பதாகவோ அல்லது தங்களது பட்டப்படிப்புக்கு நேரடியாக தொடர்பில்லாத வேலையில் இருப்பதாகவோ தரவுகள் காட்டுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு முக்கிய காரணமாக அவர் AI-யின் வேகமான திறன் வளர்ச்சியை சுட்டிக்காட்டுகிறார். அவர் தலைமை வகித்த AI தயாரிப்பு மற்றும் தொழில் பிரிவுகளில், கல்லூரியில் இருந்து புதிதாக வரும் பலரைவிட AI சில பணிகளை தொடக்கத்திலேயே அதிக திறனுடன் செய்யக்கூடியதாக நிறுவனங்கள் கண்டறிந்ததாக தெரிவித்துள்ளார்.

இதனால் நிறுவனங்களின் புதிய ஊழியர்களை தேர்வு செய்யும் முறையிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன் தாக்கம் தொழில்நுட்ப நிறுவனங்களோடு மட்டும் நின்றுவிடாது என்றும் அவர் எச்சரித்துள்ளார். தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால், முன்பு தொழிற்சாலைகளில் இயந்திரமயமாக்கல் ஏற்படுத்திய வேலை மாற்றத்தைப் போல, AI மாற்றமும் அமெரிக்காவின் பல நகரங்களில் வேலைவாய்ப்பு அமைப்பை மாற்றக்கூடும் என அவர் தெரிவித்துள்ளார்.

அதே நேரத்தில், AI வந்துவிட்டதால் மனிதர்களுக்கு வேலை இருக்காது என்று இதை புரிந்துகொள்ள வேண்டிய அவசியமில்லை. மாறாக, AI-ஐ உருவாக்கும் திறன், AI-ஐ திறமையாக பயன்படுத்தும் திறன் மற்றும் AI உடன் இணைந்து வேலை செய்யும் திறன் ஆகியவை எதிர்கால வேலை சந்தையில் முக்கியமானதாக மாறலாம். குறிப்பாக மாணவர்கள் ஒரு பட்டப்படிப்பை முடிப்பதுடன் நிறுத்தாமல், புதிய தொழில்நுட்பங்களை தொடர்ந்து கற்றுக்கொள்வதும் முக்கியமாகிறது.

AI வேலைகளை எவ்வாறு மாற்றும் என்பதற்கு இப்போது முழுமையான பதில் இல்லை. தொழில்நுட்பம் தொடர்ந்து வளர்ந்து வருவதால், இன்று மனிதர்கள் செய்யும் பல பணிகள் நாளை AI மூலம் செய்யப்படலாம்; அதே நேரத்தில் இன்று இல்லாத புதிய வேலைகளும் உருவாகலாம். ஆனால் ஒரு விஷயம் மட்டும் தெளிவாகத் தெரிகிறது, எதிர்கால வேலை சந்தையில் AI-யை எதிரியாக பார்ப்பதைவிட, அதை பயன்படுத்தும் திறனை வளர்த்துக்கொள்வதே இளைஞர்களுக்கு முக்கியமானதாக இருக்கப்போகிறது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com