செவ்வாய் கிரகத்துல தண்ணீரா..? 4 பில்லியன் ஆண்டு பழைய ஆறு குறித்து நாசாவின் புது அறிக்கை!

முற்காலத்தில் உயிரினங்கள் இருந்ததற்கான சாத்தியக்கூறுக்கு, செவ்வாய் கிரகம் நீரினை உடையதுதான் என்பதை உறுதிசெய்யும் விதமாக தற்போது..
river on mars
Published on
Updated on
2 min read

பூமிக்கு அருகே உள்ள செவ்வாய் கோளின் மேற்பரப்பில், ஒரு காலத்தில் நீர் எவ்வாறு பாய்ந்தது என்பதைக் காட்டும், இதுவரை பெறப்பட்ட மிகப் பழமையான சான்றுகளில் சிலவாக, நாசாவின் பெர்செவரன்ஸ் ரோவர், தரைக்குள் ஊடுருவும் ரேடாரைப் பயன்படுத்தி, அங்குள்ள ஒரு பழைய ஆற்று முகத்துவாரத்தின் நிலத்தடி எச்சங்களைக் கண்டறிந்துள்ளது. மேலும், ஒரு நதி, ஏரி போன்ற ஒரு பெரிய நீர்நிலைக்குள் நுழையும் இடத்தில் உருவாகும் ஒரு பெரிய விசிறி வடிவப் படிவமான டெல்டா சூழலைக் குறிக்கும் அடுக்கு படிவங்களையும், அரிக்கப்பட்ட மேற்பரப்புகளையும் பெர்செவரன்ஸ் கண்டறிந்தது. தற்போது புதைந்து கிடக்கும் அந்த டெல்டா, சுமார் 3.7 முதல் 4.2 பில்லியன் ஆண்டுகளுக்கு முற்பட்டது என்று ஆய்வாளர்கள் மதிப்பிட்டுள்ளனர். பூமியைப் போலவே, செவ்வாய் கிரகமும் ஏறத்தாழ 4.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு உருவானது, அதாவது இந்த டெல்டா அமைப்பு செய்வாய் கிரகத்தின் வரலாற்றின் ஆரம்ப காலத்திலேயே இருந்திருக்கிறது என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

பெர்செவரன்ஸ் ரோவரின் RIMFAX கருவியானது, ரேடார் துடிப்புகளைக் கீழ்நோக்கி அனுப்பி, நிலத்தடி அம்சங்களில் பட்டுத் தெறித்து அதிலிருந்து வரும் துடிப்புகளைப் பதிவுசெய்கிறது. இது, பூமிக்கு அடியிலான பகுதியை முப்பரிமாணத்தை வரைபடமாக்க உதவுகிறது. இந்த புதிய கண்டுபிடிப்புகள், செப்டம்பர் 2023 முதல் பிப்ரவரி 2024 வரை 250 செவ்வாய் நாட்கள் காலப்பகுதியில் பெறப்பட்ட, RIMFAX இதுவரை சேகரித்ததிலேயே மிக ஆழமான தரவுகளை அடிப்படையாகக் கொண்டவை. மேலும். செவ்வாய் கிரகத்தில் ஒரு காலத்தில், உயிர்களை ஆதரிக்கக்கூடிய, நீடித்த நீர் நிறைந்த சூழல் இருந்தது என்ற கோட்பாட்டை இந்த புதிய கண்டுபிடிப்புகள் வலுப்படுத்தியுள்ளது. நீர் இன்றியமையாததாகக் கருதப்படுகிறது. அந்நிலையில் செவ்வாய் கிரகத்தில் முற்காலத்தில் உயிரினங்கள் இருந்ததற்கான சாத்தியக்கூறுக்கு, செவ்வாய் கிரகம் நீரினை உடையதுதான் என்பதை உறுதிசெய்யும் விதமாக தற்போது பெருகிவரும் சான்றுகள் மிகுந்த கவனத்தை ஈர்க்கின்றன.

தற்போது குளிராகவும் பாழடைந்தும் காணப்படும் செவ்வாய் கிரகம், நெடுங்காலத்திற்கு முன்பு அடர்த்தியான வளிமண்டலத்தையும் வெப்பமான காலநிலையையும் கொண்டிருந்தது என்றும், அதன் மேற்பரப்பில் திரவ நீர் இருப்பதற்கு சாத்தியக்கூறுகளை வழிவகுத்துள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். மேலும், இந்த வியக்கத்தக்க கண்டுபிடிப்புக்கு முன்னதாக, கடந்த ஆண்டு விஞ்ஞானிகள் ஜெசெரோ எரிமலைக் குழியில், உயிர்கள் வாழ்வதற்கான அடையாளத்திற்கான சாத்தியக்கூறு கொண்ட ஒரு பாறை மாதிரியைக் கண்டறிந்தனர். இந்த உயிர் அடையாளத்தின் இருப்பு, செவ்வாய் கிரகத்தில் பழங்கால நுண்ணுயிர் வாழ்வு இருந்ததைச் சுட்டிக்காட்டியது. இருப்பினும், அந்த மாதிரியில் உள்ள கனிமங்கள் உயிரியல் அல்லாத செயல்முறைகள் மூலமாகவும் உருவாகக்கூடும் என்றும், அந்தப் பாறையானது சுமார் 3.2 முதல் 3.8 பில்லியன் ஆண்டுகளுக்கு முற்பட்டது என்றும் பின்பு கணிக்கப்பட்டுள்ளது.

செவ்வாய் கிரகத்தின் வடக்கு சமவெளிகளில் இருந்திருக்கக்கூடிய ஒரு பெருங்கடலின் கடற்கரையிலிருந்து, மணல் கடற்கரைகள் போன்ற தோற்றமுடைய நிலத்தடி ஆதாரங்களை, சீனாவின் 'ஜுரோங் ரோவர்' பயன்படுத்தும் தரை ஊடுருவும் ரேடார் கண்டறிந்ததாக சீன விஞ்ஞானிகள் கடந்த ஆண்டு தெரிவித்தனர். இதுமட்டுமின்றி, "காலப்போக்கில், பல்வேறு ரோவர் தரையிறங்கிய தளங்கள், நாங்கள் பயணித்த பகுதிகள் மற்றும் சுற்றுப்பாதை படங்கள் ஆகியவற்றிலிருந்து செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் திரவ நீர் இருப்பதற்கான ஆதாரங்களை மேலும் நாங்கள் கண்டறிந்துள்ளோம். நீர் பாய்ந்திருக்கக்கூடிய கால்வாய்கள், ஒரு காலத்தில் நீர் தேங்கியிருந்த பள்ள ஏரிகள், மற்றும் பாறை வெளிப்பாடுகளாகவும் இப்போது புதைந்த எச்சங்களாகவும் படிந்த டெல்டா படிவுகள் ஆகியவற்றை இந்த ஆய்வறிக்கையின் மூலம் நாங்கள் கண்டறிந்துள்ளோம்," என்று கார்டரெல்லி கூறினார்.

இதுமட்டுமின்றி, 2021-ஆம் ஆண்டு முதல், நாசாவின் பெர்செவரன்ஸ் ரோவர், ஜெசெரோ பள்ளத்தை ஆய்வு செய்து, செவ்வாய் கிரகத்தின் பல மர்மங்களை வெளிக்கொணர்ந்து வருகிறது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com