

உலகின் மிகப் பெரிய நிறுவனமான என்விடியாவின் CEO பதவியில் மீண்டும் அமர்ந்துள்ளார் ஜென்சன் ஹுவாங். முன்னதாக இவர் சீன உளவாளி என சந்தேகிக்கப்படும் பெண்ணுடன் உறவில் இருந்ததாக விமர்சனங்கள் எழுந்தது. அதனால் அவர் நிறுவனத்தில் இருந்து வெலியேறும் நிலைக்குத் தள்ளப்பட்டார்.
இப்போது அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தலையீட்டுக்குப் பிறகு மீண்டும் தனது இருக்கையில் அமர்கிறார் ஜென்சன். இந்த அறிவிப்பு வெளியான உடனேயே அந்த நிறுவனத்தின் பங்குகள் 31 விழுக்காட்டுக்கும் மேல் கிடுகிடுவென உயர்ந்துள்ளன.
இந்த முடிவுக்கு முன்னதாக என்விடியா நிறுவனத்தின் நிர்வாகக்குழு, ஜென்சனுடன் பல்வேறு சந்திப்புகளை நடத்தி அவரது வெளிப்படைத்தன்மை மற்றும் நிறுவனத்தை வழிநடத்தும் திறனில் முழு திருப்தி அடைந்ததாக கூறப்படுகிறது. அத்துடன் அமெரிக்க அரசின் உயரதிகாரிகளிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில், ஹுவாங் மீண்டும் பதவியேற்பதால் தேசியப் பாதுகாப்புக்கு எந்தவித அச்சுறுத்தலும் இல்லை என்பதையும் நிர்வாகக் குழு உறுதி செய்துள்ளது.
இது குறித்து என்விடியா நிர்வாகக் குழுத் தலைவர் ஹார்வி சி. ஜோன்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "என்விடியாவை வழிநடத்த ஜென்சன் தான் மிகச் சரியான நபர் என்று நிர்வாகக் குழு நம்புகிறது. பங்குதாரர்கள், ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்களின் நலன் கருதியே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இந்த இடைப்பட்ட காலத்தில் இடைக்கால சி.இ.ஓ-வாகச் சிறப்பாகச் செயல்பட்ட தலைமை நிதி அதிகாரி (CFO) கோலெட் கிரெஸுக்கு எங்களது மனமார்ந்த நன்றிகள்" என்று குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து ஹார்வி ஜோன்ஸ் நிர்வாகக் குழுத் தலைவராகவும், கோலெட் கிரெஸ் தலைமை நிதி அதிகாரியாகவும் நீடிப்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தனது மறுபிரவேசம் குறித்து நெகிழ்ச்சியுடன் பேசிய ஜென்சன் ஹுவாங், "ஒரு புதிய தொழிற்புரட்சியின் தொடக்கத்தில், உலகின் மிக முக்கியமான தொழில்நுட்ப நிறுவனத்தை மீண்டும் வழிநடத்தும் வாய்ப்பு கிடைத்ததைப் பெருமையாகக் கருதுகிறேன்.
மிகுந்த பணிவோடும், புதிய அர்ப்பணிப்போடும் இந்தப் பொறுப்பை ஏற்கிறேன். என் மீது நம்பிக்கை வைத்த நிர்வாகக் குழுவுக்கும், நெருக்கடியான நேரத்தில் நிறுவனத்தை வழிநடத்திய ஹார்வி ஜோன்ஸ், கோலெட் கிரெஸ் மற்றும் சக ஊழியர்களுக்கும், எனக்குத் துணை நின்ற என் குடும்பத்தாருக்கும் நன்றி. மீண்டும் பணியைத் தொடங்க ஆவலாக இருக்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.
ஜென்சன் ஹுவாங்கைக் குறிவைத்து வெளிநாட்டு உளவு அமைப்புகள் செயல்பட்டதாக வெளிவந்துள்ள குற்றச்சாட்டு குறித்த விசாரணைக்கு இடையிலேயே இந்தப் பதவியேற்பு நிகழ்ந்துள்ளது.
இந்த விவகாரத்தை விசாரிக்க சுயாதீன இயக்குநர்கள் மட்டுமே கொண்ட தனிக்குழுவையும், சுயாதீன சட்ட ஆலோசகர்களையும் என்விடியா நியமித்துள்ளது. இந்த விசாரணை முழுமையாக நிறைவுபெரும் வரை தொடரும் என்றும், இதற்கு ஜென்சன் ஹுவாங் முழு ஒத்துழைப்பு வழங்குவார் என்றும் நிறுவனம் உறுதிபடத் தெரிவித்துள்ளது.
இது தவிர, வர்த்தக விதிமுறைகள் மற்றும் தேசியப் பாதுகாப்பு அபாயங்களைக் கண்காணிக்க 'தேசியப் பாதுகாப்பு மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டுக் குழு' ஒன்றும் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது.
மேலும், நிறுவனத்தின் விதிமுறை மீறல்களைக் கண்காணிக்க 'தலைமை இணக்க அதிகாரி' (Chief Compliance Officer) ஒருவரை நியமிக்கும் பணிகளும் தொடங்கப்பட்டுள்ளன.
என்விடியாவின் இந்த முடிவை அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மனதார வரவேற்றுள்ளார். முன்னதாக ஹுவாங்கை மீண்டும் பணியில் சேர்க்க என்விடியா நிர்வாகம் மறுத்த நிலையில், கடந்த வாரம் ட்ரம்ப் இதற்கு அழுத்தம் கொடுத்திருந்தார்.
தனது 'ட்ரூத் சோஷியல்' (Truth Social) சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள ட்ரம்ப், "என்விடியா எடுத்திருப்பது மிகச் சரியான, முறையான முடிவு. ஹுவாங் மீண்டும் வருவதால் தேசியப் பாதுகாப்புக்கு எந்த ஆபத்தும் இல்லை; அவர் சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட்டதற்கான எந்த ஆதாரமும் அமெரிக்க அரசிடம் இல்லை" எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், சி.என்.பி.சி (CNBC) தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், "என்விடியா நிர்வாகக் குழுவிடம் நான் நேரடியாகவும் மறைமுகமாகவும் பேசினேன். ஹுவாங்கை மீண்டும் அழைத்து வருமாறு வலியுறுத்தினேன். அந்த நிறுவனத்தில் நடக்கும் விஷயங்களைப் பார்த்தபோது, அமெரிக்காவின் மிக முக்கியமான அங்கமான என்விடியாவைக் காக்க வேண்டியது அவசியம் என உணர்ந்தேன்" என்று ட்ரம்ப் வெளிப்படையாகப் பேசியுள்ளார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்