செல்போன் டவரே இல்லாமல் சிக்னல்? எலான் மஸ்கின் திட்டத்தால் மொபைல் துறையில் புதிய பரபரப்பு

சாதாரண ஸ்மார்ட்போன்களுக்கும் செயற்கைக்கோள்கள் மூலம் நேரடியாக மொபைல் இணைப்பை வழங்க வேண்டும் என்பதுதான் Starlink-ன் நோக்கம்
elon musk
Published on
Updated on
3 min read

இனி மொபைல் போனுக்கு டவர் தேவைப்படாதா? பூமியைச் சுற்றி வரும் செயற்கைக்கோள்களே நேரடியாக செல்போன்களுக்கு சிக்னல் கொடுக்குமா? எலான் மெஸ்கின் SpaceX நிறுவனம் Starlink மூலம் இதுபோன்ற மாற்றத்தை கொண்டு வர முயற்சி செய்து வருகிறது. ஆனால் இந்த திட்டத்தை அமெரிக்காவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான T-Mobile கடுமையாக விமர்சித்துள்ளது. Starlink-ன் மொபைல் திட்டம் குறித்து T-Mobile நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி Peter Osvaldik, அதன் சில அம்சங்களை கேலி செய்யும் அளவுக்கு கடுமையான கருத்துகளை தெரிவித்துள்ளார்.

Starlink என்ற பெயர் ஏற்கனவே உலகம் முழுவதும் செயற்கைக்கோள் இணைய சேவைக்காக பிரபலமாக உள்ளது. SpaceX நிறுவனம் ஆயிரக்கணக்கான செயற்கைக்கோள்களை பூமியின் தாழ்வான சுற்றுப்பாதையில் அனுப்பி, பாரம்பரிய கேபிள் அல்லது மொபைல் டவர் இல்லாத பகுதிகளுக்கும் இணைய சேவை வழங்கி வருகிறது. இதை அடுத்த கட்டத்துக்கு கொண்டு சென்று, சாதாரண ஸ்மார்ட்போன்களுக்கும் செயற்கைக்கோள்கள் மூலம் நேரடியாக மொபைல் இணைப்பை வழங்க வேண்டும் என்பதுதான் Starlink-ன் நோக்கம். இந்த முயற்சிக்கு ஏற்கனவே T-Mobile நிறுவனத்துடன் Starlink கூட்டணி அமைத்துள்ளது. இந்த தொழில்நுட்பத்தின் மூலம் மொபைல் டவர் சிக்னல் கிடைக்காத பகுதிகளிலும் பயனர்கள் தங்களது போன்களை இணைக்க முடியும். குறிப்பாக கிராமப்புறங்கள், தொலைதூரப் பகுதிகள், சாலைகளில் உள்ள ‘No Signal’ இடங்கள் போன்ற இடங்களில் இது பயனுள்ளதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதற்கட்டமாக SMS சேவை போன்ற அடிப்படை வசதிகளுக்கு இந்த செயற்கைக்கோள் இணைப்பு பயன்படுத்தப்பட்டு வருகிறது. பின்னர் குரல் அழைப்பு மற்றும் குறிப்பிட்ட அளவிலான இணைய சேவைகளையும் விரிவுபடுத்தும் திட்டம் உள்ளது.

ஆனால் இங்குதான் T-Mobile-ன் கேள்வி தொடங்குகிறது. செயற்கைக்கோள் மூலம் மொபைல் சேவையை வழங்குவது தொலைதூரப் பகுதிகளில் ஒரு நல்ல தீர்வாக இருக்கலாம். ஆனால் அதையே நகரங்களில் இருக்கும் வழக்கமான மொபைல் நெட்வொர்க்குக்கு மாற்றாக பயன்படுத்த முடியுமா என்பதுதான் முக்கியமான பிரச்சினை என்று Peter Osvaldik கூறியுள்ளார். குறிப்பாக நகரங்களில் இருக்கும் உயரமான கட்டிடங்கள், சுவர்கள் மற்றும் பிற தடைகள் செயற்கைக்கோள் சிக்னலுக்கு சிக்கலை ஏற்படுத்தும் என்பது அவரது கருத்து. “இயற்பியலின் அடிப்படை விதிகளை மாற்ற முடியாது” என்ற கருத்தை முன்வைத்த Osvaldik, Starlink-ன் மொபைல் திட்டத்தில் கூறப்படும் சில யோசனைகள் நடைமுறையில் செயல்படுவது கடினம் என்று தெரிவித்துள்ளார். குறிப்பாக நகரப்பகுதிகளில் செயற்கைக்கோள் சிக்னலை வலுவாகவும் தொடர்ந்து கிடைக்கக்கூடியதாகவும் மாற்றுவது எளிதான காரியம் அல்ல என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார். Starlink திட்டத்தின் சில அம்சங்களை தொழில்துறையில் இருப்பவர்கள் தீவிரமாக எடுத்துக்கொள்ளாமல் சிரிப்பதாகவும் அவர் குறிப்பிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்கு பின்னால் இருக்கும் முக்கிய தொழில்நுட்ப சிக்கல் என்னவென்றால், ஒரு செயற்கைக்கோளில் இருந்து வரும் சிக்னல் மிகப்பெரிய பரப்பில் உள்ள பல பயனர்களை சென்றடைய வேண்டும். ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் அழைப்புகள், செய்திகள் மற்றும் இணைய சேவைகளை பயன்படுத்தும்போது போதுமான திறனை வழங்குவது சவாலாக இருக்கும். குறிப்பாக அதிக மக்கள் வசிக்கும் நகரங்களில் இந்த பிரச்சினை இன்னும் பெரியதாக மாறலாம். அதனால்தான் பாரம்பரிய மொபைல் டவர்கள் இன்னும் முக்கியமானவை என்று T-Mobile தரப்பு வாதிடுகிறது. அதே நேரத்தில், Starlink திட்டத்தை முழுமையாக நிராகரித்துவிட முடியாது என்பதையும் கவனிக்க வேண்டும். மலைப்பகுதிகள், கடல் பகுதிகள், தொலைதூர கிராமங்கள் அல்லது மொபைல் டவர் அமைப்பது செலவு அதிகமாக இருக்கும் இடங்களில் செயற்கைக்கோள் இணைப்பு முக்கியமான மாற்றாக இருக்கலாம். ஏற்கனவே Starlink செயற்கைக்கோள் சேவை உலகின் பல பகுதிகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் மொபைல் துறையிலும் செயற்கைக்கோள் தொழில்நுட்பத்துக்கு ஒரு இடம் உருவாகி வருவது தெளிவாகிறது.

மேலும், SpaceX ஏற்கனவே மிகப்பெரிய Starlink செயற்கைக்கோள் வலையமைப்பை உருவாக்கியுள்ளது. இதன் காரணமாக மற்ற நிறுவனங்கள் பல ஆண்டுகளாக கட்டியுள்ள தொலைத்தொடர்பு கட்டமைப்புக்கு மாறாக, விண்வெளியை அடிப்படையாகக் கொண்ட புதிய வழியை உருவாக்கும் திறன் SpaceX-க்கு கிடைத்துள்ளது. Reuters வெளியிட்டுள்ள தகவல்படி, Starlink ஏற்கனவே 12 மில்லியனுக்கும் அதிகமான பயனர்களைக் கொண்டுள்ளது. இதனால் இது வெறும் எதிர்கால யோசனை மட்டுமல்ல. ஏற்கனவே பெரிய அளவில் செயல்பட்டு வரும் சேவையை அடிப்படையாகக் கொண்ட அடுத்த கட்ட முயற்சியாகவும் பார்க்கப்படுகிறது. இதனால் மொபைல் துறையில் அடுத்த போட்டி வெறும் 4G, 5G போன்ற தலைமுறை மாற்றத்தைச் சுற்றி மட்டும் இருக்காது. தரையில் அமைக்கப்படும் டவர்கள் ஒருபுறம் இருக்க, விண்வெளியில் இருந்து நேரடியாக போன்களுக்கு சிக்னல் வழங்கும் தொழில்நுட்பமும் இன்னொரு பக்கம் வளர்ந்து வருகிறது. Starlink இதை எவ்வளவு பெரிய அளவில் செயல்படுத்த முடியும், நகரங்களில் உள்ள தொழில்நுட்ப சிக்கல்களை எப்படி சமாளிக்கப் போகிறது என்பதுதான் அடுத்த முக்கிய கேள்வி.

இப்போதைக்கு T-Mobile மற்றும் Starlink இரு நிறுவனங்களும் ஒன்றாக பணியாற்றும் நிலையில் இருப்பது ஒரு சுவாரஸ்யமான விஷயம். ஒருபுறம் T-Mobile நிர்வாகி Starlink-ன் சில எதிர்கால திட்டங்களை விமர்சிக்கிறார். மறுபுறம் அதே நிறுவனத்தின் வாடிக்கையாளர்களுக்கு செயற்கைக்கோள் இணைப்பை வழங்க Starlink உடன் கூட்டணி தொடர்கிறது. எனவே இது இரு நிறுவனங்களுக்கு இடையிலான நேரடி மோதல் என்பதைவிட, பாரம்பரிய மொபைல் நெட்வொர்க்கும் செயற்கைக்கோள் தொழில்நுட்பமும் எதிர்காலத்தில் எந்த அளவுக்கு ஒன்றோடு ஒன்று இணைந்து செயல்பட முடியும் என்பதற்கான விவாதமாக பார்க்கப்படுகிறது. எலான் மெஸ்கின் முயற்சி வெற்றி பெறுமா, T-Mobile கூறுவது போல அதன் சில திட்டங்கள் நடைமுறையில் சிக்கல்களை சந்திக்குமா என்பது காலப்போக்கில்தான் தெரியவரும். ஆனால் ஒன்று மட்டும் உறுதி: செல்போனுக்கு சிக்னல் கிடைக்க டவர் தேடும் காலத்திலிருந்து, வானில் இருக்கும் செயற்கைக்கோளையே தேடும் காலத்துக்கு தொலைத்தொடர்பு துறை மெதுவாக நகர்ந்து கொண்டிருக்கிறது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com