
ஸ்மார்ட்போன் உலகில், விவோ நிறுவனம் புதிதாக விவோ விஷன் (Vivo Vision) ஹெட்செட்டை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த டிவைஸ், Augmented Reality (AR), Virtual Reality (VR) மற்றும் Mixed Reality (MR) என மூன்றுவிதமான டெக்னாலஜி-களைப் பயன்படுத்தி இயங்குவதால், பலருக்கும் இந்த வார்த்தைகளுக்கு என்ன அர்த்தம் என்று குழப்பம் இருக்கலாம். வாங்க, இந்த மூன்று ரியாலிட்டி-களுக்கும் உள்ள வித்தியாசத்தை ஈஸியாகப் புரிஞ்சுக்கலாம்.
வி.ஆர். டெக்னாலஜி என்பது, உங்களை முற்றிலும் ஒரு புதிய உலகத்திற்குள் அழைத்துச் செல்வது. நீங்கள் பார்க்கும் உண்மையான உலகம் மறைந்துவிடும். வி.ஆர். ஹெட்செட்டைப் போட்டால், உங்கள் கண்கள் முழுவதும் டிஜிட்டல் திரையால் மூடப்பட்டு, நீங்கள் வேறு ஒரு இடத்துக்குச் சென்றுவிட்டது போன்ற உணர்வு கிடைக்கும்.
கேமிங்: பிளேஸ்டேஷன் வி.ஆர். போன்ற கேம்களை விளையாடும்போது, நீங்கள் விளையாட்டின் ஒரு கதாபாத்திரமாகவே மாறி, அந்த உலகத்துக்குள் பயணிக்கலாம்.
பயணங்கள்: உங்கள் வீட்டிலேயே உட்கார்ந்துகொண்டு, உலக அதிசயங்களைச் சுற்றிப் பார்க்கலாம் அல்லது அண்டவெளியில் விண்மீன் மண்டலங்களுக்குச் சென்று வரலாம்.
பயிற்சி: விமான ஓட்டிகளுக்கான பயிற்சி, சர்ஜரி செய்வதற்கான ஒத்திகை எனப் பல கடினமான விஷயங்களைப் பாதுகாப்பாகக் கற்றுக்கொள்ள இந்த டெக்னாலஜி பயன்படுகிறது.
ஏ.ஆர். டெக்னாலஜி, உண்மையான உலகத்துடன் டிஜிட்டல் உலகத்தைக் கலப்பது. இதில், உங்கள் உண்மையான உலகக் காட்சிகள் அப்படியே இருக்கும். ஆனால், உங்கள் மொபைல் கேமராவின் மூலம் பார்க்கும்போது, அந்த காட்சியின் மீது டிஜிட்டல் தகவல்கள் அல்லது பொருள்கள் Overlay ஆகும்.
கேமிங்: போகிமான் கோ விளையாட்டில், உங்கள் வீட்டுக்குள்ளே ஒரு போகிமான் நிற்பது போல உங்கள் மொபைல் திரையில் தெரியும்.
சோசியல் மீடியா: இன்ஸ்டாகிராம் மற்றும் ஸ்னாப்சாட் ஃபில்டர்கள் மூலமாக, உங்கள் முகத்தில் பூக்கள், கண்ணாடிகள் எனப் பலவற்றை நீங்கள் போட்டுப் பார்க்கலாம்.
ஷாப்பிங்: நீங்கள் ஒரு புதிய சோபா வாங்க வேண்டும் என்றால், உங்கள் ஹாலில் அது எப்படி இருக்கும் என்பதை, ஏ.ஆர். டெக்னாலஜி மூலம் உங்கள் போன் திரையிலேயே பார்த்து முடிவு செய்யலாம்.
எம்.ஆர். டெக்னாலஜிதான் இந்த மூன்றிலும் மிகவும் அட்வான்ஸ்-ஆனது. இது ஏ.ஆர். மற்றும் வி.ஆர்.-ன் கலவை. இதில், டிஜிட்டல் பொருள்கள் உண்மையான உலகத்துடன் இன்டராக்ட் செய்யும். அதாவது, ஒரு டிஜிட்டல் பந்து, உங்கள் அறையில் உள்ள உண்மையான மேசையில் பட்டுத் தெறித்துத் திரும்புவது போலக் காட்சிப்படுத்தலாம்.
மைக்ரோசாஃப்ட் ஹோலோலென்ஸ்: இந்த டிவைஸ் மூலம், உங்கள் டேபிள் மீது ஒரு விர்ச்சுவல் கம்ப்யூட்டரை வைத்து வேலை செய்யலாம்.
மருத்துவம்: சர்ஜன்கள், மனித உடலின் விர்ச்சுவல் உறுப்புகளைப் பார்த்து ஆய்வு செய்யலாம்.
டிசைன்: கட்டிடக் கலைஞர்கள், ஒரு மேசையின் மீது கட்டிடத்தின் முழு 3டி மாடலை வைத்து, அதைச் சுற்றிப் பார்த்து டிசைன் செய்யலாம்.
விவோவின் விஷன் ஹெட்செட் பெரும்பாலும் இந்த மிக்ஸ்டு ரியாலிட்டி பிரிவைச் சேர்ந்ததாகவே இருக்கும். இது, உண்மையான உலகத்தையும் டிஜிட்டல் உலகத்தையும் இணைத்து, பயனர்களுக்கு ஒரு புதிய அனுபவத்தைக் கொடுக்கும். எதிர்காலத்தில், இந்த டெக்னாலஜி-கள் நமது வாழ்க்கையில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தும் என்பது உறுதி.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.