திருச்சியில் சுதந்திர நாளில் சுதந்திர தியாகி ஒருவர் போராட்டத்தில் ஈடுபட முயன்றார்.மகனுக்கு வேலை, குடியிருக்கு வீடு கட்டித் தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மணப்பாறையில் 96 வயது தியாகி உண்ணாவிரதம்.
திருச்சி மாவட்டம், மணப்பாறையைச் சேர்ந்தவர் சுந்தரம் என்பவர்.
96 வயதான இவர் ஒரு சுதந்திரப் போராட்ட தியாகி ஆவார். இன்று இந்திய நாட்டின் 77-வது சுதந்திர தினம் அனைவராலும் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், இன்று காமராஜர் சிலை முன்பு கோரிக்கை அடங்கிய விளம்பர அட்டையுடன் உண்ணாவிரதம் இருக்க முயன்றார்.
இவரின் மகனுக்கு அரசு வேலை வழங்கிட வேண்டும், தனக்கு உள்ள இடத்தில் சேதமடைந்த வீடு இடிந்து விட்ட நிலையில் புதிய வீடு கட்டித் தர வேண்டும் என்று சில வருடங்களாக அதிகாரிகள், முதல்வர் உள்ளிட்டோரிடம் மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறி போராட முயன்றார்.
உடனே சம்பவம் பற்றி தகவல் அறிந்த மணப்பாறை போலீசார் மற்றும் வருவாய்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று உண்ணாவிரதம் இருக்க முயன்ற சுதந்திர போராட்ட தியாகியிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது, இந்த முறை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுப்பதாகவும், சுதந்திர நாளில் வீட்டிற்கு செல்லும்படியும் கூறி, ஆட்டோவை பிடித்து அவரை ஏற்றி வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.
சுதந்திர தின நாளில் சுதந்திரத்திற்கு போராடிய சுதந்திர போராட்ட தியாகி உண்ணாவிரதம் இருக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.