செங்கல்பட்டில் நடந்த பள்ளி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அமைச்சர் தா.மோ.அன்பரசன் தமிழை தவறாக எழுதிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அடுத்த மாம்பாக்கத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் டிஜிட்டல் வகுப்பறை திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஊரக தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் கலந்து கொண்டு வகுப்பறையை திறந்து வைத்தார்.
அப்போது அங்கிருந்த விழா ஏற்பாட்டாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் தா.மோ.அன்பரசனின் அருகில் சென்று டிஜிட்டல் பலகையில் ஏதாவது ஒரு வார்த்தையை எழுதுமாறு கேட்டுக் கொண்டனர். இதைக் கேட்ட அமைச்சர் ஆனந்தமாக சென்று அதில் ‘வாழ்த்துக்கள்’ என எழுத முடிவெடுத்தார்.
ஆனால் வாழ்த்துகள் என்பதற்கு பதிலாக, ‘வாழ்-துகள்’ என பிழையோடு எழுதியதால் அங்கிருந்தவர்கள் அனைவரும் திடுக்கிட்டுப் போயினர். தமிழ்நாட்டின் உயர் பதவியில் இருந்த அமைச்சரே தமிழை தவறாக எழுதுவதா என நினைத்தவர், ஒரு வித தயக்கத்தையும் பயத்தையும் உள்ளே வைத்துக் கொண்டு சரியாக எழுதுமாறு கேட்டுக் கொண்டனர்.
இதையடுத்து அதனை அழித்த தா.மோ.அன்பரசன் இரண்டாவது முறையாக எழுதினார். ஒரு வழியாக பதற்றத்தோடு டிஜிட்டல் போர்டில் எழுதியவர் மூன்றாவது முறையாக திருத்த சொல்வார்களோ என எண்ணி, திரும்பி பார்க்காமல் அங்கிருந்து நடையை கட்டினார்.
இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து எதிர்க்கட்சிகள் பல்வேறு கருத்துக்களையும் விமர்சனங்களையும் முன்வைத்து வருகின்றனர்.
இதையும் படிக்க | ”மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க உள்ளேன்” - தமிழிசை சௌந்தரராஜன்