"என் மண் என் மக்கள்" : தேர்தலுக்கு கை கொடுக்குமா அண்ணாமலையின் நடைபயணம்...?

"என் மண் என் மக்கள்" : தேர்தலுக்கு  கை கொடுக்குமா அண்ணாமலையின் நடைபயணம்...?
Published on
Updated on
2 min read
 2024-ம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கு அனைத்து கட்சிகளும் வியூகம் அமைத்து, அதற்கான பணிகளைத் தொடங்கியுள்ளது. 
இதில் 26 எதிர்கட்சிகளைக் கொண்ட "இந்தியா" என்ற மாபெரும் கூட்டணி மக்களின் பெரும் எதிர்பார்ப்பை பெற்றுள்ளது. 
இதனிடையே எதையாவது  செய்து, எப்படியாவது தமிழ்நாட்டில் தடம் பதித்துவிட வேண்டும் என்ற முயற்சியில் முட்டி, மோதி வரும் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, "என் மண், என் மக்கள்" என்ற பெயரில் பாதயாத்திரையை தொடங்கவுள்ளார். 
தமிழகம் முழுவதும் 234 தொகுதியில் நடைபெறவுள்ள இந்த பாதயாத்திரை, மத்திய உள்துறை அமைச்சரும், பா.ஜ.க. மூத்த தலைவருமான அமித்ஷா வெள்ளிக்கிழமை  ராமேஸ்வரத்தில் தொடங்கி வைக்கிறார்.
இந்த பாதயாத்திரை மதுரை, விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி உள்ளிட்ட முக்கிய மாவட்டங்கள் வழியாக 168 நாட்கள் நடைபெற்று, அடுத்த ஆண்டு ஜனவரி 11-ம் தேதி சென்னையில் நிறைவடைகிறது. இறுதி நாள் பொதுக் கூட்டத்தில், பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கலந்து கொண்டு, நடைபயணத்தை முடித்து வைக்க உள்ளார். 
இந்த நடை பயணத்தில், ஒவ்வொரு பத்து நாளுக்கும் ஒரு இடத்தில் பொதுக்கூட்டங்களை நடத்த பா.ஜ.க. தலைமை திட்டமிட்டுள்ளது.  இந்த நடைபயணத்தில் பங்கேற்க இணையதளம் மூலம் முன்பதிவு செய்யப்பட்டு வருகிறது. இதுவரை இரண்டரை லட்சம் பேர் முன்பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 
இந்த நடைப்பயணத்தில் முக்கிய கதாபாத்திரமாக "மக்கள் புகார் பெட்டி" இடம் பெறும் என்றும்,  இதில், பொதுமக்கள் ஊழல், நில அபகரிப்பு,  போன்ற புகார்களை தெரிவிக்கலாம் என்றும் நடை பயணத்தின் இறுதியில் பொதுமக்களின் முன்பு அந்த புகார்களை வெளியிடப் போவதாகவும்,கூறியுள்ளார் அண்ணாமலை.
ராகுல் காந்தியின் ஒற்றுமை நடைப் பயணம் குறித்து பல்வேறு விமர்சனங்களை செய்த அண்ணாமலை, இப்போது அதே பாணியில் களம் இறங்குகிறார். அதுமட்டுமா?
 "உங்கள் தொகுதியில் ஸ்டாலின்" என்ற பெயரில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மேற்கொண்ட பிரச்சார பயணத்தில், சீல் வைக்கப்பட்ட கோரிக்கை பெட்டியில் பொதுமக்களின் கோரிக்கைகள் சேகரிக்கப்பட்டன. 
அதேபோல்  மனுக்களை பெற "மக்கள் புகார் பெட்டி"  என்று பெயரிட்டுள்ளார் அண்ணாமலை.  இப்படி நடை பயணம் மற்றும் சீலிடப்பட்ட பெட்டி என அனைத்தும் ஏற்கனவே தமிழகம் பார்த்த ஒன்றுதான். 
இப்படி மக்களுக்கு பழகிப் போன ஒன்றை கையில் எடுத்திருக்கும் அண்ணாமலையின் நடை பயணம், நாடாளுமன்றத் தேர்தலுக்கு கை கொடுக்குமா என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com