இவ்வளவு அழகான நண்டா? பார்ப்பவரைக் கவரும் இயற்கையின் அதிசயம்!!!

கர்நாடகாவில் ஒரு அழகான நண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதன் போட்டோக்கள் தற்போது இணையத்தில் படு வைரலாகி வருகிறது.
இவ்வளவு அழகான நண்டா? பார்ப்பவரைக் கவரும் இயற்கையின் அதிசயம்!!!
Published on
Updated on
3 min read

இயற்கை தாய் உண்மையில் சிறந்தவள் தான். அவளது சிறப்புகளுக்கு அளவே இல்லை என, ஒவ்வொரு முறையும், நம்மை பிரமிப்படைய வைக்கும் வகையில், பலவற்றைக் காட்சிப்படுத்திக் கொண்டே இருக்கிறாள். கண்ணுக்கு தெரியாத கிருமிகள் தொடங்கி, ஓரறிவு, ஈரறிவு என, ஆறறிவு கொண்ட மனிதர்கள் வரை பல கோடி அதிசயங்கள் நிரைந்தது இந்த பிரபஞ்சம்.

சாதாரண கொசு என்ன பிரயோஜனம் என நினைக்க முடியாது. ஏன் என்றால், அதுவும் இந்த பூமி சுழல தேவையான ஒரு உயிராகத் தான் இருக்கிறது. அவ்வகையில், இது வரை மனிதக் கண்களுக்கு தென்படாத பல ஜீவராசிகள் பல தற்போது நமது கண் முன் வந்து இயற்கையின் அழகை பாதுகாக்கக் கோரிக்கை விடுப்பது போல இருக்கிறது.

அந்த வரிசையில், சமீபத்தில், கர்நாடகாவில், ஒரு அழகான நண்டு தென்பட்டுள்ளது. அதன் அரிய வண்ணம், அனைவரது கவனத்தையும் பெற்று வருகிறது. அழகான ஊதா நிற கால்கள் கொண்ட பால்வண்ண வெள்ளை நண்டு இனம் ஒன்று புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த இனம், நன்னீர் நண்டுகளாக அடையாளம் காணப்படுகின்றன.

வடக்கு கர்நாடகாவின் கர்நாடக வனத்துறை மற்றும் மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் குழு, கர்நாடகாவின் மேற்கு தொடர்ச்சி மலைகளில், மத்திய பகுதியில் இந்த புதிய இனம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பூனேவின் மேற்குப் பகுதியில் இருக்கும் இந்திய விலங்கியல் ஆய்வு  மையத்தைச் சேர்ந்த சமீர் குமார் பதி, தாக்கரே வனவிலங்கு அறக்கட்டளையின் தேஜஸ் தாக்கரே, கர்நாடக வனத்துறையின் பரசுராம் பி பஜந்த்ரி மற்றும் கோபாலகிருஷ்ண டி ஹெக்டே ஆகியோர் இந்த ஆராய்ச்சியாளர்கள் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

இந்த இனத்திற்கு, கடியானா த்விவர்ணா என்று பெயரிடப்பட்டுள்ளது. சமஸ்கிருதத்தில், த்வி என்றால் இரண்டு என்று அர்த்தம், அதே போல வர்ணா என்றால், வண்ணம் என்று அர்த்தம். அதனால் தான் இந்த நண்டிற்கு இந்த பெயர் வைக்கப்பட்டுள்ளது.

கோவா நீலகிரி மலைகளின் தெற்கு பகுதிகள் அதாவது மேற்கு தொடர்ச்சி மலைகளின் மத்திய பகுதிகளில் உள்ள உயரமான பகுதிகளில் இருக்கும் லேட்டரைட் பாறைகளின் துளைகளில் வாழ்கின்றன என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றன. உய்ரமான மலைகளில், புல்வெளி தாவரங்கள் நிரைந்த லேட்டரைட் பாறைகளில், 25-50 மில்லி மீட்டர் விட்டம் கொண்ட துளைகள் போட்டு வாழ்வதாகக் கூறப்படுகிறது.

இண்டிபெண்டண்ட் ஆய்வாளராக பணி புரியும் கோபால்கிருஷ்ணா டி ஹெக்டே என்பவர், உலகளாவிய மதிப்பீட்டின் படி, சுமார் 4,000 நண்டு வகைகள் இருக்கிறது எனக் கூறுகிறார். மேலும், இந்தியாவில் மட்டுமே சுமார் 125 நண்டு இனங்கள் இருப்பதாகவும், நன்னீர் இனமான கடியானா இனத்தின் கீழ் 13 வகைகள் இருப்பதாகவும் கூறப்படுகிற நிலையில், தற்போது கண்டுபிடிக்கப்பட்ட கடியானா த்விவர்ணா இனமானது 14 வதாக வரிசையில் சேர்கிறது எனக் குறிப்பிட்டார்.

இது குறித்து பேசிய அவர், “75 வது சுதந்திர ஆண்டில், தற்போது கண்டுபிடிக்கப்பட்ட த்விவர்ணா இனத்தோடு சேர்ந்து 75 நண்டு வகைகளுக்கு நம் இந்தியா அடைக்கலம் அளிக்கிறது என்பது பெருமைக்குறியது” என்று கூறி நெகிழ்ந்தார்.

இதே பகுதியில், இது வரை மூன்று புதிய நண்டு இனங்கள் கண்டுபிட்க்கப்பட்ட நிலையில், நான்காவதாக கண்டுபிடிக்கப்பட்ட இந்த த்விவர்ணா, மிகவும் தனித்துவமான மற்றும் சிறப்பான தோற்றத்தைக் கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், பால் வண்ணம் மற்றும் ஊதா போன்ற விசித்திர வண்ணங்களின் இணைப்பைக் கொண்ட இந்த நண்டு வகைகள், இரவு நேரங்களில் உலா வருவதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. அங்குள்ள புஞ்சைகள் புசிக்கும் இந்த த்விவர்ணா, சுற்றுசூழலை சமநிலைப்படுத்த பெருத்த பங்கு வகீபதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

இந்த நண்டின் போட்டோக்களை பதிவிட்ட கர்நாடக வனத்துறை, தனது ட்விட்டர் பக்கத்தில், 75 வது சுதந்திர ஆண்டில், மேற்கு தொடர்ச்சி மலைகளில் கண்டுபிடிக்கப்பட்ட 75வது நண்டு இனம் தான் இந்த கடியானா த்விவர்ணா என கேப்ஷன் போட்ட நிலையில், நெட்டிசன்கள் பலரும், இதனை பகிர்ந்து வைரலாக்கி வருகின்றனர்.

ஆண் நண்டுகள் அலவன் என்றும், பெண் நண்டுகள் பெடை என்றும் தனித்தனியே பேர் வைத்து நம் தமிழ் இலக்கியத்தில் இயற்கையில் வளத்தை உச்சிமுகர்ந்த முன்னோர்கள், நண்டுகள் வைத்து தான், மருதம் திணையின் வளத்தையே வெளிப்படுத்தி இருந்தனர். அந்த வரிசையில், இந்த அழகியும், நம் பூமியின் சுற்றுசூழலுக்கு எவ்வளவு உதவியாக இருக்கிறது என்பது நினைக்க நினைக்க ஆச்சிரியமாக இருக்கிறது! அந்த அழகான கடகம் எனும் நண்டின் போட்டோக்களைக் கண்டு மகிழுங்கள்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com