எழுந்திரு நீ இளந்தமிழா...

எழுந்திரு நீ இளந்தமிழா...
எழுந்திரு நீ இளந்தமிழா...
Published on
Updated on
1 min read

காற்றை சுவாசிக்க
காசு கேட்கும் மானுடபிறவிக்கு
விவசாயத்தை பற்றி என்ன புரியும்?
சோற்றில் கை வைக்க - நாம்
சேற்றில் கால் பதிக்க
வேண்டுமடா எம் தமிழா....
 
மாற்று மொழியை திணிக்கதே - என்று
வீரவசனம் பேசியவன் - தன்
தந்தை ஒட்டிய சுவரொட்டி விளம்பரத்தில் உள்ள
வேற்று மொழியை கூட மாற்ற முடியா 
கோழையாய் நிற்கின்றானடா எம் தமிழா....
 
பாலியல் வன்கொடுமைக்கு 
பலியாகும் பச்சிளங்களை கண்டால்
பாரதி அன்று பாடியிருக்க மாட்டான்
ஓடி விளையாடு பாப்பாவென்று மாறாக
பல கயவர்கள் நடமாடும் வீதியில் - நீ
ஒதுங்கி பதுங்கி விளையாடு பாப்பா
என்றெழுதியிருப்பானடா எம் தமிழா...
 
பட்ட மரத்திற்கு கூட
பாகுபாடு காட்டாமல் நீர் பாய்ச்சும்
பல பெற்றோர்களுக்கு புரியாது
பணமிருந்தும் மனமில்லா பிள்ளைகள்
நாளை நம்மை முதியோரில்லத்தில்
மண்டியிட வைப்பார்கள் என்று
தெரியாதடா எம் தமிழா...
 
உற்பத்தி செய்பவன்
விற்பனை செய்கிறான் என்று
எல்லாவற்றையும் எதேச்சையாக
எண்ணிய நமக்கு தெரியாதடா
இயற்கையாக உருவாகும்
நீரை கூட  உற்பத்தி செய்வான் என்று எம் தமிழா...
 
மானுட பிறவி ஒன்றே 
மகத்தான பிறவி என்பேன்
மனிதா உன்னால் இந்நாள்
மறுமலர்ச்சி காண காத்திருக்க நீயோ
மதுவின் பின்னாலும் மாதுவின் பின்னாலும்
அலைவது முறைதானாடா எம் தமிழா...
 
நாளுக்கு நாள் 
நாடு படும் பாட்டை கண்டு
நமக்கென்ன என்று
நகர்ந்து போகாமல்
வீறு கொண்ட வீரனாய்
விரைந்து செயல்பட
எழுந்திரு நீ இளந்தமிழா...
 
நித்தம் புது வித்தைகளால்
விடியலை நோக்கி
வெற்றிநடை போட
எழுந்திரு நீ இளந்தமிழா....

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com