இலங்கை மக்கள் தலையில் இடியாய் விழுந்த 15 மணி நேர மின்வெட்டு...!

இலங்கை மக்கள் தலையில் இடியாய் விழுந்த 15 மணி நேர மின்வெட்டு...!

கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வரும் இலங்கையில் நாளொன்றுக்கு, 15 மணி நேர மின்வெட்டு நடைமுறைக்கு வர வாய்ப்புள்ளதாக வெளியான தகவல், மக்கள் தலையில் அடுத்த இடியாக இறங்கியுள்ளது.

ராஜபக்சே சகோதரர்களின் சர்வாதிகார ஆட்சியால், இலங்கை மக்களின் வாழ்வாதாரம் அதளபாதாளத்திற்கு சென்று விட்டது. உணவுக்கு கூட வழியில்லாமல் மக்கள் தத்தளித்து நிற்க, ஆட்சியை விட்டு வெளியேற மறுத்து அடம் பிடித்து வருகிறார் அதிபர் கோத்தபய ராஜபக்சே. எரிபொருள் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டருக்காக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் சூழலில், அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே எரிபொருள் விநியோகம், பொதுமக்களுக்கு இல்லை என்ற விதிமுறை கடந்த திங்கட்கிழமை முதல் அமலில் உள்ளது. இந்தத் தடை இரண்டு வாரங்களுக்கு நீடிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் பட்டினியுடன் மக்கள் வீடுகளுக்குள் முடங்கியிருக்கும் நிலையில், அடுத்த அடியாக மின்வெட்டுத் தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் 10 முதல் 15 மணி நேர மின் வெட்டை அமல்படுத்த வாய்ப்புள்ளதாக, இலங்கை மின் பொறியியலாளர் சங்கம் எச்சரித்துள்ளது. எரிபொருள் மற்றும் தண்ணீர் பற்றாக்குறையால், மின் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், விரைவான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால் 15 மணி நேர மின் வெட்டு உறுதி எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com