தீவிரமடையும் இஸ்ரேல் தாக்குதல்: ஹமாசின் வான்படை தளபதி உயிரிழப்பு..!

இஸ்ரேல் வான்வழித் தாக்குதலில் ஹமாசின் வான்படை தளபதி கொல்லப்பட்டதாக இஸ்ரேல் உளவுப் படை அறிவித்துள்ளது.

இஸ்ரேல்-ஹமாஸ் போர் 22 -வது நாளாக நீடித்து வரும் நிலையில், இஸ்ரேல், காசாவில் உள்ள ஹமாசின் நிலைகள் மீது தொடர் வான்வழித் தாக்குதல் நடத்தி வருகிறது.

காசா நகரில் இரவில் நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலின் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது. அக்டோபர் ஏழாம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, இஸ்ரேல் பாலஸ்தீன் இடையே போர் மூண்டது.

இந்த போரில் இதுவரை 9 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  இந்நிலையில், காசா மீதான தாக்குதலை இஸ்ரேல் தீவிரப்படுத்தி வருகிறது. அதன்படி, காசாவை நோக்கி ஏவப்பட்ட ஏவுகணைகள் விண்ணை நோக்கிப் பறந்த காட்சி வெளியாகியுள்ளது.

ஹமாசின் வான்படை தளபதி பலி:-

இஸ்ரேல் நடத்தில் வான்வழித் தாக்குதலில் ஹமாசின் வான்படை தளபதி "இஸ்லாம் அபு ருக்பே" கொல்லப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்பு படை மற்றும் இஸ்ரேல் உளவு அமைப்பான ஷின் பெட் அறிவித்துள்ளது.

ஆளில்லா விமானங்கள், பாராகிளைடர்கள், வான் பாதுகாப்பு அமைப்புகளை நிர்வகித்து வந்தவர் ரூக்பே . கடந்த 7-ம் தேதி இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட வான் வழித் தாக்குதலில் "இஸ்லாம் அபு ருக்பே" முக்கிய பங்காற்றியது குறிப்பிடத் தக்கது. 

“இஸ்ரேல் அமைதியாக இருக்காது” - இஸ்ரேல் தூதர் :- 

இவ்வாறிருக்க,  ஹமாஸ் தீவிரவாதிகள் மீண்டும் ஆயுதங்களை ஏந்தினாலோ, அட்டூழியங்களில் ஈடுபட்டாலோ இஸ்ரேல் அமைதியாக இருக்காது என்று ஐநாவுக்கான இஸ்ரேல் தூதர் கிலாட் எர்டான் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

தங்களைக் காத்துக் கொள்ள இஸ்ரேலுக்கு உரிமை உள்ளதாகவும் இது போன்ற அட்டூழியங்கள் மீண்டும் நிகழாமல் இருக்க ஹமாஸ் தீவிரவாத அமைப்பை அழிப்பது மட்டுமே ஒரே தீர்வு என்றும் கூறினார்.

“காசாவுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்க வேண்டும்” - ஐநா

காசாவில் உள்ள சுகாதாரம் மற்றும் மருத்துவ ஊழியர்களுடனான தொடர்பை இழந்துவிட்டோம் என்று உலக சுகாதார அமைப்பின் தலைமை இயக்குநர் டெட்ரோஸ் அதானம் கூறியுள்ளார்.

தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், மருத்துவ ஊழியர்களுடன் தொடர்பு இல்லாத நிலையில் அங்குள்ள நோயாளிகள் குறித்து மிகுந்த கவலையடைந்துள்ளதாகவும் அங்குள்ள மக்களுக்கு மனிதாபமான உதவிகளும் பாதுகாப்பும் உடனடியாக வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com