எகிப்து மற்றும் கத்தார் நாடுகள் மேற்கொண்ட சமரச பேச்சுவார்த்தையின் பலனாக இஸ்ரேல் ஹமாஸ் இடையேயான போர் ஏழு நாட்கள் நிறுத்தப்பட்டது.
மனிதாபமான நடவடிக்கைகளுக்காக எடுக்கப்பட்ட இந்த ஒப்பந்தத்தின் படி இருதரப்பும் தங்கள் பிடியில் உள்ள பணயக் கைதிகளை விடுவித்து வருகின்றன. இதன் மூலம் காசாவிற்கு மேலும் சில மனிதாபமான உதவிகளும் கிடைத்துள்ளன.
இந்நிலையில், தங்கள் கட்டுப்பாட்டில் இருந்த இஸ்ரேல் பணயக் கைதிகளில் பிரெஞ்சு நாட்டுப் பெண் உட்பட 8 பேரை ஹமாஸ் விடுவித்துள்ளது.
பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த 21 வயதான மியா செம் என்ற இளம்பெண்ணும் அமித் சௌசானா என்ற பெண்மணியும் விடுவிக்கப்பட்டனர். இதனைத் தொடர்ந்து மற்ற ஆறு பேர் விடுவிக்கப்பட்ட நிலையில் அனைவரும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
இஸ்ரேல் விடுவித்த பாலஸ்தீன குடிமக்கள் வெஸ்ட் பேங்கின் ஆபர் சிறையிலிருந்து பேருந்தில் புறப்பட்டுச் சென்றனர். அவர்களுடன் சர்வதேச செஞ்சிலுவைச் சங்க பிரதிநிதிகளும் சென்றனர்.