நாளை இலங்கை செல்கிறாரா கோத்தபய ராஜபக்ச!

நாளை இலங்கை செல்கிறாரா கோத்தபய ராஜபக்ச!

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதால் அரசுக்கு எதிராக பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆட்சியில் இருந்த ராஜபக்ச குடும்பத்தினரை எதிர்த்து அவர்கள் கொதித்து எழுந்ததால் அந்நாட்டு அதிபர் கோத்தபய ராஜபக்ச நாட்டை விட்டு ஓடினார்.

மாலத்தீவு – சிங்கப்பூர் - தாய்லாந்து

முதலில் மாலத்தீவில் தஞ்சம் அடைந்த அவர் அதன் பிறகு சிங்கப்பூர் சென்றார். அங்கிருந்து வெளியேறிய அவர் தற்போது தாய்லாந்து நாட்டில் உள்ள ஒரு நட்சத்திர விடுதியில் தங்கி இருக்கிறார். பாதுகாப்பு காரணங்களுக்காக அவர் விடுதி அறையை விட்டு வெளியே வரக்கூடாது என அந்நாட்டு போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.

அமெரிக்கா செல்ல திட்டம்?

இந்த நிலையில் கோத்தபய ராஜபச்சே கடந்த மாதம் இறுதியில் இலங்கை திரும்புவார் என தகவல் வெளியானது. ஆனால் அவர் வந்தால் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட பொதுமக்கள் திட்டமிட்டு இருந்ததாக தெரிய வந்தது. இதனால் அவர் சொந்தநாடு திரும்ப முடியாமல் தவித்தார். மேலும் குடும்பத்தினருடன் அவர் அமெரிக்காவில் குடியேற முடிவு செய்ததாகவும், இதற்காக அவர் வழக்குரைஞர் மூலம் கிரீன்கார்டு பெற முயற்சி செய்ததாகவும் செய்திகள் பரவியது.

நாளை இலங்கை செல்கிறாரா?

ஆனால் கோத்தபய ராஜபக்ச சொந்த நாட்டுக்கு வருவதையே விரும்பினார். ராஜபக்சே சகோதரர்கள் தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனா கட்சி தற்போதைய அதிபரான ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு தெரிவித்து வருகிறது. இந்த கட்சியை சேர்ந்த தலைவர்கள் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து கோத்தபய ராஜபக்சே இலங்கை திரும்புவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டனர்.

அதை ஏற்று அவர் இதற்கான ஏற்பாடுகளை செய்து வருவதாக கூறப்படுகிறது. இந்த சூழ்நிலையில் கோத்தபய ராஜபக்சே நாளை (செப்டம்பர்-3) இலங்கை திரும்ப உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர் மீது ஏற்கனவே இலங்கை மக்கள் இன்னும் கோபமாக இருப்பதால் அவர்கள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபடலாம் எனவும் எதிர் பார்க்கப்படுகிறது..


logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com